திருவையாறு ஆலய தேவாரம்
திருவையாறு ஆலயம்1-15-152:
மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.
1-15-153:
பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்
பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னுர்
அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.
1-15-154:
பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.
1-15-155:
சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்
கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.
1-15-156:
நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
பகராவரு புனற்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதன்கரை(மூ) நிகழ்வாயநெய்த் தான
நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.
(மூ) தண்கரை என்றும் பாடம்.
1-15-157:
விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
உடையார்நறு மாலைச்சடை யுடையாரவர் மேய
புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தணெய்த்(மூ) தானம்
அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே.
(மூ) சூழ்ந்த நெய்த்தானம் என்றும் பாடம்.
1-15-158:
நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்
தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய
கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே.
1-15-159:
அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி
நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக்
கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.
1-15-160:
கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே.
1-15-161:
மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே.
1-15-162:
தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன்
நிலம்மல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலம்மல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.
4-37-4522:
காலனை வீழச் செற்ற
கழலடி இரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன்
மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங்
குளிர்பொழிற் கோயில் மேய
நீலம்வைத் தனைய கண்ட
நினைக்குமா நினைக்கின் றேனே.
4-37-4523:
காமனை யன்று கண்ணாற்
கனலெரி யாக நோக்கித்
தூபமுந் தீபங் காட்டித்
தொழுமவர்க் கருள்கள் செய்து
சேமநெய்த் தான மென்னுஞ்
செறிபொழிற் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம்
வாழ்வுற நினைந்த வாறே.
4-37-4524:
பிறைதரு சடையின் மேலே
பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள்
உத்தமன் ஊழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ
நின்றநெய்த் தான மென்று
குறைதரும் அடிய வர்க்குக்
குழகனைக் கூட லாமே.
4-37-4525:
வடிதரு மழுவொன் றேந்தி
வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே
புரிதரு நுலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ
நின்றநெய்த் தானம் மேவி
அடிதரு கழல்கள் ஆர்ப்ப
ஆடுமெம் அண்ண லாரே.
4-37-4526:
காடிட மாக நின்று
கனலெரி கையி லேந்திப்
பாடிய பூதஞ் சூழப்
பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலார் சீரார்
அந்தண்நெய்த் தானம் என்றுங்
கூடிய குழக னாரைக்
கூடுமா றறிகி லேனே.
4-37-4527:
வானவர் வணங்கி யேத்தி
வைகலும் மலர்கள் தூவத்
தானவர்க் கருள்கள் செய்யும்
சங்கரன் செங்கண் ஏற்றன்
தேனமர் பொழில்கள் சூழத்
திகழுநெய்த் தானம் மேய
கூனிள மதியி னானைக்
கூடுமா றறிகி லேனே.
4-37-4528:
காலதிற் கழல்க ளார்ப்பக்
கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று
நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய
விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக
மகிழ்ந்தநெய்த் தான னாரே.
4-37-4529:
பந்தித்த சடையின் மேலே
பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி
அடிகள்ஐ யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று
வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார்
திருந்துநெய்த் தான னாரே.
4-37-4530:
சோதியாய்ச் சுடரு மானார்
சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலகம் ஏத்த
உகந்துதாம் அருள்கள் செய்வார்
ஆதியாய் அந்த மானார்
யாவரும் இறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி
நின்றநெய்த் தான னாரே.
4-37-4531:
இலையுடைப் படைகை யேந்தும்
இலங்கையர் மன்னன் றன்னைத்
தலையுடன் அடர்த்து மீண்டே
தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத்
திரிபுரம் எரியச் செற்ற
நிலையுடை யடிகள் போலும்
நின்றநெய்த் தான னாரே.
4-89-5011:
பாரிடஞ் சாடிய பல்லுயிர்
வானம ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ்
நஞ்சமு தாகவுண்டான்
ஊரடைந் திவ்வுல கிற்பலி
கொள்வது நாமறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த்
தானத் திருந்தவனே.
4-89-5012:
தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி
யாய்நின் திருச்சடைமேற்
பாய்ந்தகங் கைப்புனற் பன்முக
மாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை
யாயடி யேற்குரைநீ
ஏந்திள மங்கையும் நீயும்நெய்த்
தானத் திருந்ததுவே.
4-89-5013:
கொன்றடைந் தாடிக் குமைத்திடுங்
கூற்றமொன் னார்மதின்மேற்
சென்றடைந் தாடிப் பொருததுந்
தேசமெல் லாமறியுங்
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற்
காவிரி யின்கரைமேற்
சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த்
தானத் திருந்தவனே.
4-89-5014:
கொட்டு முழவர வத்தொடு
கோலம் பலஅணிந்து
நட்டம் பலபயின் றாடுவர்
நாகம் அரைக் கசைத்துச்
சிட்டர் திரிபுரந் தீயெழச்
செற்ற சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெய்த்
தானத் திருந்தவனே.
4-89-5015:
கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி
மத்தமுங் கூவிளமும்
மெய்மலர் வேய்ந்த விரிசடைக்
கற்றைவிண் ணோர்பெருமான்
மைமலர் நீல நிறங்கருங்
கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
நின்மல னாடல் நிலயநெய்த்
தானத் திருந்தவனே.
4-89-5016:
பூந்தார் நறுங்கொன்றை மாலையை
வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல்
பூதப் படைநடுவே
போந்தார் புறவிசை பாடவும்
ஆடவுங் கேட்டருளிச்
சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த்
தானத் திருந்தவனே.
4-89-5017:
பற்றின பாம்பன் படுத்த
புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை
மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன்
சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த்
தானத் திருந்தவனே.
4-89-5018:
விரித்த சடையினன் விண்ணவர்
கோன்விட முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன்
னார்மதில் மூன்றுடனே
எரித்த சிலையினன் ஈடழியா
தென்னை ஆண்டுகொண்ட
தரித்த உமையவ ளோடுநெய்த்
தானத் திருந்தவனே.
4-89-5019:
தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை
துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர
வுங்கங்கை தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ
வெய்து தியக்கறுத்து
நீங்கான் உமையவ ளோடுநெய்த்
தானத் திருந்தவனே.
4-89-5020:
ஊட்டிநின் றான்பொரு வானில
மும்மதில் தீயம்பினால்
மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து
வீழவும் வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை
பாயவோர் வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த்
தானத் திருந்தவனே.
5-34-5566:
கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.
5-34-5567:
இரவ னையிடு வெண்டலை யேந்தியைப்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே.
5-34-5568:
ஆனி டையைந்தும் ஆடுவ ராரிருள்
கானி டைநடம் ஆடுவர் காண்மினோ
தேனி டைமலர் பாயுநெய்த் தானனை
வானி டைத்தொழு வார்வலி வாணரே.
5-34-5569:
விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக்
கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத்
தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே.
5-34-5570:
முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான்
நங்கை யோடு நவின்றநெய்த் தானனைத்
தங்கை யாற்றொழு வார்தலை வாணரே.
5-34-5571:
சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிருட் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே.
5-34-5572:
கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ
தௌ;ளித் தேறித் தெளிந்துநெய்த் தானனை
உள்ளத் தாற்றொழு வாரும்பர் வாணரே.
5-34-5573:
உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை
பற்றி யாடர வோடுஞ்ச டைப்பெய்தான்
நெற்றி யாரழல் கண்டநெய்த் தானனைச்
சுற்றி மெய்தொழு வார்சுடர் வாணரே.
5-34-5574:
மாலொ டும்மறை யோதிய நான்முகன்
காலொ டும்முடி காண்பரி தாயினான்
சேலொ டுஞ்செருச் செய்யும்நெய்த் தானனை
மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே.
5-34-5575:
வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
நெருங்க நீள்வரை ய[ன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே.
6-41-6651:
வகையெலா முடையாயும் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
பாசூர் அமர்ந்தாயும் நீயே யென்றும்
திகையெலாந் தொழச்செல்வாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
6-41-6652:
ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும் ஆதிக் கயிலாயன் நீயே யென்றுங் கூர்த்த நடமாடி நீயே யென்றுங் கோடிகா மேய குழகா வென்றும் பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும் பழையனுர் மேவிய பண்பா வென்றுந் தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
6-41-6653:
அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும் ஆதிக் கயிலாயன் நீயே யென்றுங் கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங் காளத்திக் கற்பகமும் நீயே யென்றுஞ் சொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுஞ் சோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றுஞ் செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
6-41-6654:
மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும் வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும் பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும் பூத கணநாதன் நீயே யென்றும் என்னா விரதத்தாய் நீயே யென்றும் ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றுந் தென்னுர்ப் பதியுளாய் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
6-41-6655:
முந்தி யிருந்தாயும் நீயே யென்றும் முன்கயிலை மேவினாய் நீயே யென்றும் நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும் நடமாடி நள்ளாறன் நீயே யென்றும் பந்திப் பரியாயும் நீயே யென்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே யென்றுஞ் சிந்திப் பரியாயும் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
6-41-6656:
தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந் தலையார் கயிலாயன் நீயே யென்றும் அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும் ஆக்கூரில் தான் றோன்றி நீயே யென்றும் புக்காய ஏழுலகும் நீயே யென்றும் புள்ளிருக்கு வேளுராய் நீயே யென்றுந் தெக்காரு மாகோணத் தானே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
6-41-6657:
புகழும் பெருமையாய் நீயே யென்றும் பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும் இகழுந் தலையேந்தி நீயே யென்றும் இராமேச் சுரத்தின்பன் நீயே யென்றும் அகழும் மதிலுடையாய் நீயே யென்றும் ஆலவாய் மேவினாய் நீயே யென்றுந் திகழும் மதிசூடி நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
6-41-6658:
வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும் வானக் கயிலாயன் நீயே யென்றுங் கான நடமாடி நீயே யென்றுங் கடவு[ரில் வீரட்டன் நீயே யென்றும் ஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும் ஒற்றிய[ ராரூராய் நீயே யென்றுந் தேனாய் அமுதானாய் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
6-41-6659:
தந்தைதாய் இல்லாதாய் நீயே யென்றுந் தலையார் கயிலாயன் நீயே யென்றும் எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும் ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும் முந்திய முக்கணாய் நீயே யென்றும் மூவலூர் மேவினாய் நீயே யென்றுஞ் சிந்தையாய் தேனுராய் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
6-41-6660:
மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும் வான்கயிலை மேவினாய் நீயே யென்றும் வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும் வீழி மிழலையாய் நீயே யென்றும் அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும் யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
6-42-6661:
மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம் இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும் இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம் வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6-42-6662:
ஈண்டா இரும்பிறவி துறவா ஆக்கை இதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்ல வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ விண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னை ஆண்டானன் றருவரையாற் புரமூன் றெய்த அம்மானை அரியயனுங் காணா வண்ணம் நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6-42-6663:
பரவிப் பலபலவுந் தேடி யோடிப் பாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளா குரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக் குலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீ இரவிக் குலமுதலா வானோர் கூடி எண்ணிறந்த கோடி அமர ராயம் நிரவிக் கரியவன்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6-42-6664:
அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே அகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள் தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா இலையார் புனற்கொன்றை யெறிநீர்த் திங்கள் இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோ ரேத்தும் நிலையா னுறைநிறைநெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6-42-6665:
தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப் பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த அனைத்துலகு மாளலா மென்று பேசும் ஆங்காரந் தவிர்நெஞ்சே அமரர்க் காக முனைத்துவரு மதின்மூன்றும் பொன்ற வன்று முடுகியவெஞ் சிலைவளைத்து செந்தீ மூழ்க நினைத்தபெருங் கருணையன்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6-42-6666:
மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே குறைவுடையார் மனத்துளான் குமரன் றாதை கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான் அறைகழலுந் திருவடிமேற் சிலம்பு மார்ப்ப அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6-42-6667:
பேசப் பொருளலாப் பிறவி தன்னைப் பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு வாசக் குழல்மடவார் போக மென்னும் வலைப்பட்டு விழாதே வருக நெஞ்சே தூசக் கரியுரித்தான் தூநீ றாடித் துதைந்திலங்கு நுன்மார்பன் தொடர கில்லா நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6-42-6668:
அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண் டருநோய்க் கிடமாய வுடலின் றன்மை தஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே தாழக் கருதுதியே தன்னைச் சேரா வஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா மணிகண்டன் வானவர்தம் பிரானென் றேத்தும் நெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6-42-6669:
பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி போமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னி இருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே இமையவர்தம் பெருமானன் றுமையா ளஞ்சக் கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங் கண்ணுதல்கண் டமராடிக் கருதார் வேள்வி நிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6-42-6670:
உரித்தன் றுனக்கிவ் வுடலின் றன்மை உண்மை யுரைத்தேன் விரத மெல்லாந் தரித்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன் எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே எம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனை நெரித்தானை நெய்த்தான மேவி னானை நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.