HolyIndia.Org

திருப்பனந்தாள் ஆலய தேவாரம்

திருப்பனந்தாள் ஆலயம்
4-48-4624:
கடலகம் ஏழி னோடும் 
புவனமுங் கலந்த விண்ணும் 
உடலகத் துயிரும் பாரும் 
ஒள்ளழ லாகி நின்று 
தடமலர்க் கந்த மாலை 
தண்மதி பகலு மாகி 
மடலவிழ் கொன்றை சூடி 
மன்னும்ஆப் பாடி யாரே. 

4-48-4625:
ஆதியும் அறிவு மாகி 
அறிவினுட் செறிவு மாகிச் 
சோதியுட் சுடரு மாகித் 
தூநெறிக் கொருவ னாகிப் 
பாதியிற் பெண்ணு மாகிப் 
பரவுவார் பாங்க னாகி 
வேதியர் வாழுஞ் சேய்ஞல் 
விரும்பும்ஆப் பாடி யாரே. 

4-48-4626:
எண்ணுடை இருக்கு மாகி 
யிருக்கினுட் பொருளு மாகிப் 
பண்ணொடு பாடல் தன்னைப் 
பரவுவார் பாங்க னாகிக் 
கண்ணொரு நெற்றி யாகிக் 
கருதுவார் கருத லாகாப் 
பெண்ணொரு பாக மாகிப் 
பேணும்ஆப் பாடி யாரே. 

4-48-4627:
அண்டமார் அமரர் கோமான் 
ஆதியெம் அண்ணல் பாதங் 
கொண்டவன் குறிப்பி னாலே 
கூப்பினான் தாப ரத்தைக் 
கண்டவன் தாதை பாய்வான் 
காலற எறியக் கண்டு 
தண்டியார்க் கருள்கள் செய்த 
தலைவர்ஆப் பாடி யாரே. 

4-48-4628:
சிந்தையுந் தெளிவு மாகித் 
தெளிவினுட் சிவமு மாகி 
வந்தநற் பயனு மாகி 
வாணுதல் பாக மாகி 
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த 
மண்ணித்தென் கரைமேல் மன்னி 
அந்தமோ டளவி லாத 
அடிகள்ஆப் பாடி யாரே. 

4-48-4629:
வன்னிவா ளரவு மத்தம் 
மதியமும் ஆறுஞ் சூடி 
மின்னிய உருவாஞ் சோதி 
மெய்ப்பொருட் பயனு மாகிக் 
கன்னியோர் பாக மாகிக் 
கருதுவார் கருத்து மாகி 
இன்னிசை தொண்டர் பாட 
இருந்தஆப் பாடி யாரே. 

4-48-4630:
உள்ளுமாய்ப் புறமு மாகி 
உருவுமாய் அருவு மாகி 
வெள்ளமாய்க் கரையு மாகி 
விரிகதிர் ஞாயி றாகிக் 
கள்ளமாய்க் கள்ளத் துள்ளார் 
கருத்துமாய் அருத்த மாகி 
அள்ளுவார்க் கள்ளல் செய்திட் 
டிருந்தஆப் பாடி யாரே. 

4-48-4631:
மயக்கமாய்த் தெளிவு மாகி 
மால்வரை வளியு மாகித் 
தியக்கமாய் ஒருக்க மாகிச் 
சிந்தையுள் ஒன்றி நின்று 
இயக்கமாய் இறுதி யாகி 
எண்டிசைக் கிறைவ ராகி 
அயக்கமாய் அடக்க மாய 
ஐவர்ஆப் பாடி யாரே. 

4-48-4632:
ஆரழல் உருவ மாகி 
அண்டமேழ் கடந்த எந்தை 
பேரொளி உருவி னானைப் 
பிரமனும் மாலுங் காணாச் 
சீரவை பரவி யேத்திச் 
சென்றடி வணங்கு வார்க்குப் 
பேரருள் அருளிச் செய்வார் 
பேணும்ஆப் பாடி யாரே. 

4-48-4633:
திண்டிறல் அரக்க னோடிச் 
சீகயி லாயந் தன்னை 
எண்டிறல் இலனு மாகி 
எடுத்தலும் ஏழை அஞ்ச 
விண்டிறல் நெறிய வு[ன்றி 
மிகக்கடுத் தலறி வீழப் 
பண்டிறல் கேட்டு கந்த 
பரமர்ஆப் பாடி யாரே.