HolyIndia.Org

திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) ஆலய தேவாரம்

திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) ஆலயம்
1-101-1091:
தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப் 
பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத 
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம் 
நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே. 

1-101-1092:
கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும் 
வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டிக் 
கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு 
செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே. 

1-101-1093:
பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின் 
எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர் 
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக் 
கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே. 

1-101-1094:
தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம் 
மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர்க் 
குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார் 
கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே. 

1-101-1095:
மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச் 
செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட 
குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும் 
கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே. 

1-101-1096:
விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக 
உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும் 
கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை 
நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே. 

1-101-1097:
முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம் 
பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித் 
தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர் 
கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே. 

1-101-1098:
பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால் 
நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த 
முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த 
திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே. 

1-101-1099:
செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும் 
அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான் 
தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளத் 
தங்கமலத்தோ டேத்திடஅண்டத் தமர்வாரே. 

1-101-1100:
தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ் 
சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன் 
ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர் 
ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே. 

1-101-1101:
காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த 
பூமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன் 
நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன் 
பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே.