திருமயேந்திரப்பள்ளி ஆலய தேவாரம்
திருமயேந்திரப்பள்ளி ஆலயம்3-31-3129:
திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை அடியிணை பணிமினே.
3-31-3130:
கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை
கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.
3-31-3131:
கோங்கிள வேங்கையுங் கொழுமலர்ப் புன்னையுந்
தாங்குதேன் கொன்றையுந் தகுமலர்க் குரவமு
மாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.
3-31-3132:
வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு
சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும்
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே.
3-31-3133:
நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்
மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.
3-31-3134:
சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே.
3-31-3135:
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம்நவில் புரிவினன் நறவணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவன் அடிபணிந் துய்ம்மினே.
3-31-3136:
சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக்
கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன்
மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே.
3-31-3137:
நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.
3-31-3138:
உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும்
படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை ஈசனை இணையடி பணிமினே.
3-31-3139:
வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
நம்பர மிதுவென நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.