Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருக்கேதீச்சரம் |
இறைவன் பெயர் : | திருக்கேதீஸ்வரர் |
இறைவி பெயர் : | கௌரி |
எப்படிப் போவது : | இலங்கையில் தலை மன்னாருக்கு அருகில், மன்னார் இரயில் நிலையத்திலிருந்து, கிழக்கே எட்டு கீ.மீ.தூரத்தில் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருக்கேதீச்சரம் |
ஆலயம் பற்றி : தல வரலாறு கேது வழிபட்டதால், இப் பெயர் பெற்றது. சுந்தரர், சம்பந்தர் இருவரும் இராமேசுரத்தில் இருந்தவாறு, இப் பதியைப் பாடினர். சிறப்புக்கள் இத் தலம் ஈழ நாட்டில் மாதோட்ட நகரில் பாலாவி ஆற்றங்கரையில் உள்ளது. அமைவிடம் திருமூலர் சிவபூமி என்று சிறப்பித்துக்கூறும் இலங்கையின் வடமேல் பாகத்தில் மன்னார் மாவட்டம் உள்ளது. அங்கு மாந்தை என்னும் பிரிவிலே பாலாவித் தீர்த்தக் கரையிலே திருக்கேதீச்சரம் என்னும் சிவத்தலம் அமைந்துள்ளது. புராதன காலத்திலே திருக்கேதீச்சரம் என்பது ஆலயத்தையும் மாதோட்டம் என்பது அது அமைந்துள்ள இடத்தையும் குறித்தன. இக்காலத்திலே திருக்கேதீச்சரம் என்பது கோயிலுக்கும் அது அமைந்துள்ள இடத்துக்கும் பொதுவான பெயராக இருக்கின்றது. கேது ஈசனை வழிபட்ட தலம் என்னும் காரணம் பற்றி இக்கோயில் திரு என்னும் அடைமொழியோடு திருக்கேதீசரம் என்ற பெயரைப் பெற்றது. இலங்கையிலே திருக்கேதீச்சரம் திருக்கோணேச்சரம் என்னும் இரண்டு தலங்கள் மட்டுமே தேவாரப் பாடல் பெற்ற சிறப்பினை உடையன. திருக்கேதீச்சரநாதர் மீது திருஞானசம்பந்தரும் தேவாரத் திருப்பதிகம் பாடியுள்ளார். இராமேச்சரத்தை வழிபடச்செல்லும் அடியார்கள் ஒரு காலத்திற் கடலின் அக்கரையில் நின்று திருக்கேதீச்சரத்து அண்ணலைத் தொழுதனர். அதற்குச் சான்றாகத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரையும் சுந்தரமூர்த்தி நாயனாரையும் கூறலாம். பண்டைய வரலாறு மயன் என்பவன் தேவதச்சன். மகாதுவட்டா என்பவன் அவனுடைய தமையன். இவர்கள் நிருமாணித்த தலம் திருக்கேதீச்சரம் என்பது மரபுக் கதை. மயனின் மகளும் இராவணனின் மனைவியுமாகிய மண்டோதரி இத்தலத்தை வழிபட்டாள். தீர்த்த யாத்திரை செய்த அருச்சுனன் இதனை வழிபட்டானெனத் தட்சிணகைலாய புராணங்க் கூறுகின்றது. விசயனுடன் இலங்கைக்கு வந்த உபதிஸ்ஸன் என்னும் பிராமணன் திருக்கேதீச்சரத்திற் பூசை செய்தான் என மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இயக்கர்களும் நாகர்களும் இலங்கையின் பூர்வீகக் குடிகளாவர். இராவணன் இயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவன். அவன் சிவபக்தன் என்பது வரலாறு. நாகர்களும் திருக்கேதீச்சரத்தை வழிபட்டதற்குச் சான்றாக நாகநாதர் என்றொரு பெயர் திருக்கேதீச்சரநாதருக்கு இன்னமும் வழங்குகின்றது. தொலமி என்னும் புவியியலறிஞர் கி பி 2ம் நூற்றாண்டில் மாதோட்டம் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். உரோமர் பாரசீகர் அராபியர் சீனர் இந்தியர் முதலிய பல தேசத்தவர்களுடன் மாதோட்டத்துக்கு வணிகத் தொடர்புகள் இருந்தனவென்பது அங்கு கண்டெடுத்த பண்டைய நாணயங்களால் அறியப்படும். கி பி 4ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட சிறீமேகவண்ணன் என்னுஞ் சிங்கள அரசனின் காலத்தில் மாதோட்டத்திற் சைவக் கோயில் ஒன்று இருந்ததெனத் தாதுவம்சம் என்னும் நூல் கூறுகின்றது. இது புத்தரின் புனித தந்த வரலாறு பற்றிய நூலாகும். ஏறத்தாழ இற்றைக்கு 3800 ஆண்டுகளுக்கு முன்னர் மாந்தைத்துறைமுகம் இருந்தது என்பதையும் அங்கிருந்து அக்காலத்தில் இந்தியாவுக்குச் செம்பு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதையும் இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எஸ் யூ தேரணியகலை என்பவர் 1997 இல் ஆராய்ச்சி முடிபாக வெளியிட்டுள்ளார். எனவே மொகெஞ்சோதாரோ கரப்பாக் காலத்திலும் மாந்தை நிலவியது என்பது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர் என்று கூறப்பட்டதனால் இது கேந்திர முக்கியத்துவமுள்ள ஒரு வணிகப் பட்டினமாகத் திகழ்ந்தது என்பது புலனாகும். பிற்காலச் சோழர்களினால் முதலாம் இராசேந்திரன் இடைக்காலப் பாண்டியர்களில் முதலாஞ் சுந்தரபாண்டியன் முதலியோர் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்துள்லனர். இதன் காரணமாகக் கி பி 11ம் நூற்றாண்டிலும் அதனை அடுத்த காலத்திலும் திருக்கேதீச்சரம் திருவரங்கக் கோயிலுக்கு இணையான ஏழு பிரகாரங்கள் சூழ்ந்த பெருங் கோயிலாகத் திகழ்ந்தது என்பதற்குக் கல்வெட்டுச் சான்று உண்டு. சோழரின் ஆட்சிக் காலத்தில் இது இராஜராஜேஸ்வர மகாதேவன் கோயில் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தது. இக்கோயிலை இலங்கை அரசர்கள் பலர் ஆதரித்தனர். புத்தகோயில்களுக்குக் கொடுக்கும் நன்கொடைகளுக்கான சட்டங்களை மீறுவோர் மாதோட்டத்திற் பசுக் கொலை செய்ததை ஒத்த பாவத்தைப் பெறுவாரென்ற எச்சரிக்கை 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிங்களக் கல்வெட்டுச் சாசனம் ஒன்றிற் காணப்படுகின்றது. இதனால் அவர்கள் திருக்கேதீச்சரக் கோயில் மீது வைத்திருந்த மதிப்புப் புலப்படும். இத்தகைய சிறப்புடைய பண்டைக் கோயில் 1960ம் ஆண்டு போர்த்துக்கேயரால் இடித்து அழிக்கப்பட்டது. பின்னர் கடற் பெருக்கால் இருந்த இடமும் மறைந்தது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் கழிந்த பின் 1894ம் ஆண்டு பண்டைக்கோயில் இருந்த இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான அகழ்வு ஆராய்ச்சி ஆரம்பமானது. அதன் விளைவாக புராதன கோயில் இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் மூன்றும் ஒரு கோயிலுக்கு மகிமை தருகின்ற முக்கியமான அம்சங்கள் என்று தாயுமானவரின் பாடல் ஒன்று கூறுகின்றது. எனவே திருக்கேதீச்சரக் கோயிலின் இந்த மூன்று அம்சங்களும் எத்தகையன என்பதனை ஈண்டு நாம் நோக்குவோம். மூர்த்திச் சிறப்பு. இக்கோயிலின் இறைவன் பெயர் திருக்கேதீச்சரநாதன். இறைவி பெயர் கௌரிஅம்பாள். தலவிருட்சம் வன்னிமரம். திருக்கேதீச்சரப் பெருமானை மாதோட்டத்து அண்ணல் அத்தனர் அடிகள் எந்தை என்றிவ்வாறு போற்றித் திருஞானசம்பந்தர் தேவாரம் பாடியுள்ளார். சுந்தரர் தம் தேவாரத்தில் இவரை அட்டன் என்கிறார். ஆகாயம் நிலம் நீர் வளி அக்கினி சூரியன் சந்திரன் இயமானன் என்னும் எட்டு மூர்த்தங்களும் ஒன்று சேர்ந்த மூர்த்தி அட்டன் எனப்படும். வேறொரு தேவாரத்தில் அவர் மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி என்றார். ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டுத் திருக்கேதீச்சரநாதன் அயன் அரி அரன் என்னும் மூவராயும் அம்மை அப்பன் என இருவராயும் இருக்கிறார் என்பது அதன் கருத்து. இருவர் என்று கூறும்பொழுது ஈசன் சத்தி பின்னம் இல்லாதவன் என்னுந் தத்துவப் பொருளும் பெறப்படுகின்றது. இவ்வாறாகத் தேவாதி தேவனாக விளங்குந் திருக்கேதீச்சரநாதன் மேலானவன் என்பதனை உணர்த்தும் வகையிற் சிரேட்டன் என்னுஞ் சொல்லைச் சுருக்கிச் சிட்டன் என்றும் அவர் பாடியுள்ளார். திருவெண்ணை நல்லூரிலே தம்மைத் தடுத்தாட்கொண்ட பெருமானும் திருக்கேதீச்சரநாதனும் ஒருவரே என்னுங் கருத்தில் அவர் தேவன் எனை ஆள்வான் திருக்கேதீச்சரத்தானே என்றார். ஞானசம்பந்தர் தமக்கு ஞானப்பால் ஊட்டிய எம்பெருமாட்டிக்கு நன்றியுணர்வு உடையவராய் அவரை முதற்கண் குறிப்பிட்டு தேவி தன்னொடுந் திருக்கேதீச்சரத்து இருந்த எம்பெருமானே என்று போற்றித் தம் ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார். திருக்கேத இலங்கையை சிவபூமி என்கின்றார் திருமூல நாயனார். சிறப்புமிகு இச் சிவபூமியின் கண் பழமையும் பெருமையும் புகழும் உடைய சிவத்தலங்கள் பலவிருந்தமை வரலாறு. இவ்வரலாற்றுண்மையினை கி.மு.1800 வரையில் நடந்த இராம இராவண யுத்தத்தின் தரவுகளிலறியலாம். இப்பெருமையுடைய ஈழத்திருநாட்டில் மூர்த்தி தலம் தீர்த்தமாய மூன்றுஞ் சிறப்பாமையப் பெற்ற திருத்தலம் அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தலாமாம். பெருந்தவமுடையோராயா கேது, மயன், மாதுவட்டா, மண்டோதரி, இராமர், அகத்தியர் போன்ற தவமுடையோர் வழிபாடாற்றி தங்குறை தீர்த்து மீண்ட வரலாறு கொண்ட தலம் இத்திருத்தலம். விருதுகுன்றமா மேருவி நாணர வாவன லெரியம்பாப் பொருதுமூவெயில் செற்றவன்பற்றி நின்றுறைபடதி எந்நாளும் கருதுகின்ற ஊர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டங் கருதநின்ற கேதீச்சரங் கைதொழக் கடுவினையடையாவே -நாளும் தமிழ்வளர்த்த ஞானசம்பந்தன் கேது பூசித்த தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறா நிற்பர். இக்கோயில் மாதோட்ட நன்னகரில் அமைந்துள்ளது. இத் தலத்திலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்குக் காயாவில் கடனாற்றும் புண்ணியம் கிட்டுமெனவும், இத் தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் இத்தீர்த்ததின் மகிமையும் சிறப்புமாகும். "நத்தார் படை ஞானன்பசு வேறிந்நனை கவிழ்வாய் மத்தம் மத யானையுரி போர்த்த மணவாளன் பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரைமேல் செத்தாரெலும்பணிவான் திருக் கேதீச்சரத்தானே" - சுந்தரமூர்த்தி நாயனார்- இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது போதரும் இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலமிதுவாகும். ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவத்தின் ஓளிவிளக்காம் தவக்கொழுந்தினராய அருளடியார்கள் என உலகினரால் போற்றப்படும் திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும் அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருப்பது வெள்ளிடை. இத்தகு சீர்பூத்த திருத்தலம் காலவெள்ளத்தில் சிக்கிச் சிதைந்து சின்னாபின்னமடைந்து மண்மேடானமை வரலாற்று உண்மையாகும். இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் சிற்பம் கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்தமை ஆய்வாளர்தம் துணிவாகும் திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலையென்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் துறைமுகமாகவும வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும ், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும் இன்றும் அழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் நாளுங்கானமுடிகின்றது. அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் மாதோட்டத்தின் கண்ணிறங்கி அன்று இரவினை அங்கேயே கழித்ததாகவும் வரலாறுண்டு. பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் கோயில் சோழமன்னர்களால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது. போத்துக்கீசரால் தகர்க்கப்பட்ட இவ்வாயக் கற்களையுஞ் சிற்பங்களையும் கொண்டு மாதோட்டத்தில் கட்டப்பட்ட முதலாவது தேவாலயத்திற்கு அடிக்கலாகப் பயன்படுத்தப்பட்ட உண்மையைத் துலக்கா நிற்கின்றது. அழித்துச் சிதைக்கப்பட்டிருந்த இத் திருடத்தை விடிவெள்ளியின் அவதாரம் செய்த திருப்பெருநதிரு அருள்மிகு யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயா அவர்கள் அந்நிலத்தை வாங்கி சைவசயிகளின் பெருமையையும் புகழும் நிலைக்கவேண்டுமென்னும் பேரவாவினால் தூண்டுதல் செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்த பெருமை ஐயா அவர்களையே சாரும். ஐயா அவர்களின் ஆசையை நிறைவுசெய்ய முயன்ற பெரியார்கள் கொழும்பு தம்பையா முதலியார், சுபைதார் வைத்திலிங்கம், புகையிரத தபால் ஒப்பந்தக்காரர் மாத்தளை ஆசைப்பிள்ளை ஆகியோரின் அருமுயற்சி அரசினரின் அடாத்தன்மையால் நிறைவுபெறவியலாது போயிற்று. தொடர்ந்து 1890இல் தகைசான்ற சைவப்பெரியார்களின் பெருமுயற்சியால் அக்காலத்து அரச அதிபர் அந்நிலத்தை சைவர்கட்கே வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டார். காலப்போக்கில் இத்திருகோயிலிற்கென ஓர் சபை உருவாக்கப்பட்டு அதன் முதலாவது தலைவராக சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்களும் பொதுச் செயலாளராக நீராவியடி பண்டிதர் அ.சிற்றம்பலம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு உயர்ந்த பல குறிக்கோளுடன் சபை செயற்பட யாப்பு அமைக்கப்பட்டது சைவக் கொள்கைட்கு அமைய மறுசீரமைக்கப்படுதல். ஆலயத்தையுஞ் சொத்துக்களையும் யாதொரு குறையுமின்றிப் பாதுகாத்தல். மேற்கூறிய கொள்கை கோட்பாடு வரையறைகட்கு மாறில்லாத வகையில் செயற்படுதல். ஏனைய இறை வணக்கத் தலங்களை உருவாக்குதலும் துணைபுரிதலும் மக்கள் தங்குமடங்கள், கல்விக் கூடங்கள், சமூக நிலையங்கள் போன்ற அன்றாட வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தல போன்ற பல அரிய செயல்க்ளைப் புரியச் சபையத் தயார்படுத்தல் போன்ற உயரிய செயல்களை விரைந்து நடைமுறைப்ப்படுத்த முயற்சிப்பதென உறுதி பூணப்பட்டது. 10 பெப்ரவரி 1951இல் பொது உடமைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சபையாகத் திகழ்ந்தது. சபையாகப் பதிவுசெய்யப்பட்டதன் பின்பும் கோயில் உருமைகள் நாட்டுக்கோட்டை நகரப் பெரியார்களிடமே இருந்து வந்தது. காலப்போக்கில் 14 செப்ரம்பர் 1951இல் நாட்டுக்கோட்டை நகரத்தார் உளமகிழ்வுடனும் நல் இணக்கத்துடனும் திருப்பணிச் சபையாரிடம் பரிபாலனம் கைமாற்றப்பட்டது. பொறுப்புக்கள் கையேற்கப்பட்ட காலம் முதல் அரிய பெரிய திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொழும்பு பழைய, புதிய கதிரேசன் கோயில் திருப்பணிச் சபையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் அறங்காவலர்களாகவும் (ஐவர்) பஞ்சாயத்தவர்களாகவும் நியமனம் பெற்று சபையை நடாத்திவரத் திருக்கேதீச்சரத் திருப்பணிப் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. இச்சபையின் தீர்மானப்படி காசிவாசி சிவஸ்ரீ ஈசான சிவாச்சாரியார், அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமிக் குருக்கள், சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம், கட்டடக்கலைஞர் வி.நரசிம்மன் ஆகியோரின் ஆகம விதிகளுக்கமைவான அறிவுறுத்தல்களுடன் தமிழ்நாடு திருவாளர்கள் செல்லக்கண்ணு ஸ்தபதியார், மு.வைத்தியநாத ஸ்தபதியார் ஆகியவர்களால் முறைப்படி சுவாமி, அம்பாள் கருவறைகள் கருங்கல்லாலும், சுதை, காரைகளாலும் விமான வேலைகளும் கோபுரங்களும் உலக சைவப்பெருமக்களின் பேருதவி கொண்டு அமைக்கப்பட்டது. இத்திருத்தலம் உருவாக அருள்வாக்கு நல்கிய நல்லூர் திருப்பெருந்திரு ஆறுமுகநாவர் ஐயா அவர்கள் "திருக்கேதீச்சரம் எனுந் தேன்பொந்து ஒன்று உளது. அங்கு மருந்தொன்று மறைந்துள்ளது. அதனைச் சென்றடையுங்கள்" என அருள்ஞானசம்பந்தர் சுட்டிக்காட்டியது போல அறிவுறுததருளினார். ஐயா அவர்களின் அறிவுறுத்தல் மேற்கொண்டு விடத்தல்தீவு வேலுப்பிள்ளை அவர்களும், முதல் குரல் கொடுத்த சைவபரிபாலன சபையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். முன்பு ஆலயமிருக்கும் திருவிடத்தை சைவசமயத்தவர்கள் கையகப்படுத்த விரும்பாதநிலை மாறி மாவட்ட அதிபரின் முன்மொழிவுக்கமைய ஏலத்தில் விடப்பட்டு காடுமண்டிய நிலத்துடன் 43 ஏக்கர் 3 றூட் 33 பேச் காணி நாட்டுக்கோட்டை நகரத்துச் செம்மல் சைவச் சான்றாளர் ராம அரு.அரு.பழனியப்பச் செட்டியாரான பெருமகனாரால் யாழ் செயலகத்தில் 3, 100/= ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டாமை சைவர்களின் பெருமைக்குரியதொன்றாயிற்று. 1984ஆம் ஆண்டு வண்ணைச் சைவப்பெரியார் சித.மு.பசுபதிச் செட்டியார், திருவாளர்கள் இ.இராமுப்பிள்ளை வைத்தியர் வை.ஆறுமுகம் பிள்ளை, தா.இராகவப்பிள்ளை ஆகியோரின் அயராத முயற்சியினால் 13 ஜூன் 1894 அன்று பழைய ஆலயம் இருந்த திருவிடமும், தீர்த்தக் கிணறும் முன் நிறுவப்பட்டிருந்த லிங்கம் ஒன்றும் திருநந்தி சோமாஸ்கந்தர், கணேசர் ஆகிய மூர்த்திகளின் சிலைகள் கண்டெடுக்கப் பட்டன. இவற்றை நிறுவிப் பூசை அர்சனை அபிடேகங்கள் இயற்ற வேண்டி இன்றுள்ள கோயிலிருக்குமிடத்தில் சிறு கோயிலமைத்து கண்டெடுக்கப்பட்ட மூர்த்திகளை உரிய இடங்களில் நிறுவி 28 ஜூன் 1903 ஆம் ஆண்டில் நல்வேளையில் முதலாவது குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுச் சிறப்பாகச் செய்யப்பட்டது. மூலக் கருவறையில் எழுந்தருள வைக்கப் பெற்ற சிவலிங்கம் காசியிலிருந்து வருவிக்கப்பட்டதென திரு இராமேச்சர வரலாற்றுத் தரவினாலறிய முடிகின்றதுஇதனைத் தொடர்ந்து பல திருப்பணிகளாற்றப்பட்டு 1920ஆம் ஆண்டிலும் மற்றோர் திருக்குடமுழுக்கு விழாச் செய்யப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் காடடர்ந்து அழிந்த நிலைகண்டு நாட்டின் சைவப் பெருமக்களின் உள்ளத்தை விழிப்படைவும் பழைய உயர் நிலைக்குத் திருக்கோயில் வளரவும் வேண்டுமென்ற நினைப்பினாலும் உந்துதலினாலும் 1948 ஆம் ஆண்டு இத்திருவிடத்தில் ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டத்தினரால் சைவப் பெரு மாநாடொன்று கூட்டப்பட்டது. இம் மாநாட்டைக் கூட்ட முன்னின்று உழைத்த பெருமக்கள் வரிசையில் வேலைணையூர் வி.கே. செல்லப்பாச் சுவாமியார், திருவாசக முதல்வர் சி.சரவணமுத்து அடிகள், சட்டத்தரணி சு.சிவசுப்பிரமணியம் ஆகியோராவர் கூடிய சைவப்பெருமாநாடு ஆலயத்தை மறுசீரமைத்து வளம்பல பெற வைக்க வேண்டுமென்ற சிந்தனையை உருவாக்கத் தவறவில்லை. இம்மகாநாட்டைத் தொடர்ந்து பம்பலப்பிட்டி நகரத்தார் கதிரேசன் ஆலயத்தில் உருவாக்கப்பட்ட சபையே இன்றுலகளாவிய பெருமையுடன் திகழ்கின்ற திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை. கருங்கல்லால் கட்டப்பட்ட கௌரியம்பாள் கோயில் மலேசியா திருப்பணிச்சபைக் கிளையினரால் அமைக்கப்பட்டதாகும். இத்திருக்கோயிலில் நிறுவப்பெற்றுள்ள கருங்கல் திருப்படிகங்களில் பெரும்பாலான படிமங்கள் மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக் கல்லூரியில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோயிலில் 1952லும் 1960லும் ஆண்டிலும் திருவுருவப்படங்கள் நிறுவப்பட்டு இருமுறை குடமுழுக்காட்டப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முடிந்தவரை பல்வகைத் தொல்லைகட்காளாகிய நிலமையையும் பொருட்டாக நினைக்காது முயன்று தம்மையே ஈசற்கீந்து அரும்பாடுபட்டு இத்திருக்கோயிலை எடுத்த பெருமை சிவமணி சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களையும் மண்மேடாகவும் சேறாகவுமிருந்த பாலாவித் தீர்த்தக் குளத்தை வெட்டி அணையிட்டு செம்மையுறச் செய்திட்ட நீர்ப்பான பொறியியலாளர் அருளாளர் எஸ்.ஆறுமுகப் பெருந்தகையையும் சைவ உலகு என்றும் மறவாது திருக்கேதீசரத்திற்குச் செல்லும் அடியவர்களின் வசதிகள் உளத்தில் கொண்ட அருளுள்ளத்தினர் பெருந்தனவந்தர்கள், அரச நிறுவனங்கள் ஆலயச் சூழலில் திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர் மடம், நகரத்தார் மடம், நாவலர் மடம், அம்மா சத்திரம், திருப்பதி மடம், திருவாசக மடம், மகாசிவராத்திரி மடம், பொன்னாவெளி உடையார் மடம், நாதன் சத்திரம், மலேசியா மடம், கதிர்காமத் தொண்டர் மடம், மகாதுவட்டா மடம், பூனகரி மடம், அடியார் மடம், நீர்பாசன மடம், சிவபூசை மடம், நரசிங்கர் மடம், கட்டடத்திணைகள மடம் என பல்வேறு திருமடங்களை நிறுவி அடியார்கட்காறுதலளித்த பெருமைகளாயின. அது மட்டுமா? ஒரு நகரத்தை அழகுசெய்வதற்குரிய மருந்தகம், மக்கள் நலம் பேணகம், ப.நோ.கூ. சங்கம், கி.மு.சங்கம், கி.அ.சங்கம், கிராமோதய சபை, நீர்வழங்கல் சபை, அஞ்சலகம், அங்காடிகள் போன்ற மிகமிக அவசியமான அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தமை கண்கூடு. ஏதுங் குறையிவின்றி எல்லாமமைந்து தன்னிறைவு பெற்றிருந்த திருக்கோயிற் திருவிடம் திருக்கோயிலைத் தவிர்ந்த அனைத்து வளங்களும் அழிந்து போய் பழமை நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளமை உள நோவைத் தாராதிருக்கின்றது. 1976ஆம் ஆண்டு வெகு சிறப்புடன் திருக்கோயில் திருக்குடத் திருமுழுக்குப் பெருஞ்சாந்தி விழா நிகழ்த்தப் பெற்று 1990ஆம் ஆண்டுவரை நித்திய நைமித்திய பெருவிழாக்கள் நடைபெற்று வந்நதன 1990க்குப் பின் பூசையோ பெருவிழாக்களோ நடைபெறமுடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுக் காடு மண்டிக் களையிழந்து காட்சிதருவது கண்கூடு இக்கால எல்லையில் ஐந்து திருத்தேர்கள் முயன்று உருவாக்கப்பட்டு வீதிவலம் வந்தகாட்சிதனை அருளடியார்கள் மறந்திருக்கமுடியாது. முதற்பெருந் தேரில் உலாவர உலகிலேயே பெரிய சோமாஸ்கந்த தெய்வத்திருவுருவம் வடிக்கப்பட்டு உலாவந்த காட்சி அருளாளர்களால் என்றும் மறக்ககமுடியாத காட்சியாகும். புதுமையான சிற்பங்களைக் கொண்ட திருக்கோயிலையுந் திருத்தேர்களையும் அமைத்த பெருமை தமிழ்நாடு மாமல்லபுரம் அரசினர் சிற்பக் கலைக் கல்லூரி வினைஞர்களையும் பழனி சிற்பக்கலாவல்லுனர்களையும் யாழ் திருநெல்வேலி ஆறுமுகம் சீவரத்தினம் எனும் சிற்பக்கலா வல்லுனர்களையும் சார்ந்ததென்றால் அது மிகையாகாது. இத்துணை சிறப்புக்கள் அமைந்ததாகவும், எந்தக்குறையுமில்லாத எல்லாமடங்கிய தன்னிறைவு பெற்ற பெருங்கோயிலாக அமைக்க வேண்டுமென்ற ஆர்வங்கொண்டு அல்லும் பகலும் கோயிலே தன் சிந்தையாகக் கொண்டு கோயில் பற்றிய தரவுகளைக் காட்டும் நூல்களை நுணுகி ஆராய்து சிவாகம நடைமுறை பிழையாது அமைத்திட நாளும் பொழுதும் சிந்திதிதுச் செயலாற்றிய ஆற்றி வருகின்ற சட்ட வல்லுனர் சைவப் பெரியார் இ.நமசிவாயம் அவர்தம் சேவையையும் அவருடன் உறுதுணையாய் பணியாற்றும் அன்பர்களின் பணிகளையும் நன்றியுள்ள சைவ உலகம் என்றும் மறாவதிருக்குமென நம்புவதில் தவறேது. ...திருசிற்றம்பலம்... |