HolyIndia.Org

திருக்கோணமலை , திருக்கோணேஸ்வரர் ஆலயம்

திருக்கோணேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருக்கோணமலை
இறைவன் பெயர் : திருக்கோணேஸ்வரர்
இறைவி பெயர் : மாதுமையாள்
எப்படிப் போவது : திருக்கோணேஸ்வரத்திற்கு இரயில் மூலம் கொழும்பிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் போகலாம். பேருந்து வசதிகளும் உள்ளது. திருக்கோணமலை இரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கு நடந்து போகலாம்.
சிவஸ்தலம் பெயர் : திருக்கோணமலை
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு.

  • சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள்; அந்த ஊர் இன்றும் "திரிதாய்" என்று வழங்குகின்றது.
  • போத்துக்கேயர் 1624 ஆம் ஆண்டில் இத்திருக்கோயிலை பாழ்செய்துள்ளனர். அன்று அருணகிரிநாதர் மனமுருகிக்கண்ட தலத்தாறு கோபுரத்தழகைப் பறங்கியர்களின் தளபதியும் பார்த்துருகியுள்ளான். அவன் தன் படையில் ஓவியம் வல்லானைக் கொண்டு அவற்றின் அழகை ஓரளவு வரைந்து எடுத்துக்கொண்ட பின்பே கோயிலைத் தரைமட்டமாக்க உத்தரவு பிறப்பித்தான்.
  • அந்தக் கோபுரத்தழகைக் காட்டும் சித்திரம் இன்றும் விஸ்பன் நகரில் உள்ளது என்பர்.
  • சுதந்திரம் பெற்றபின் 1950ஆம் ஆண்டில், கோயில் இருந்த நிலத்தில் ஆலயம் அமைக்க முற்பட்டுக் காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தருளச் செய்தார்கள்.
  • அக்காலத்தில் நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி தோண்டிய வேளையில் சிவனருளோ என்று கண்டவர்கள் அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமானோடு, சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், அஸ்திரதேவர் முதலாய தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்டன.
  • அவையாவும் அண்மைக் காலத்திலமைக்கப் பெற்ற திருக்கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன.
  • முன்னொரு காலத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்தன என்பர்.
  • கோயிலை பறங்கியர் பாழ்படுத்திய வேளையில் பக்தர்களாகிய பாசுபதவிரதிகளும் பணியாளரும் பதைத்துருகித் திருக்கோயிலிலிருந்த திருவுருவங்களை எடுத்துச் சென்று அயலிலுள்ள கிணறுகளிலும் குளங்களிலும் பாதுகாப்புக்காக இட்டார்கள். அவர்கள் ஒரு திருவுருவத்தை அயலூரான தம்பலகாமம் என்னும் மருதவளம் நிறைந்த ஊரில் மறைத்து வைத்து மிகவும் இரகசியமாக வழிபாடு செய்து வந்தவர்கள்; அந்த இடத்தை ஆதிகோணநாயகர் கோயில் என வழங்கி வணங்கினார்கள். அது ஆதி கோணநாயகர் ஆலயமாகவே பழைய கோணேசுவரர் ஆலயத்துக்குச் சொந்தமான மானியங்களிற் பெரும்பகுதி தம்பலகாமத்திற்கு சேர்ந்தன.
  • முதற்பராந்தக சோழனுக்கு அஞ்சிய பாண்டியன் இலங்கையில் பாதுகாப்புக்காக புகுந்திருந்த காலத்தில் தம்பலகாமத்தில் திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது.

சிறப்புக்கள்

  • உலகப்புகழ் பெற்ற திருக்கோணமலை மாவட்டத்தில் அறுபதுக்கும் அதிகமான சைவக்கோயில்கள் உள்ளன.

  • சைவம் கமழும் தமிழ்த் திருநாமங்கள் தாங்கிய பழைய ஊர்களில் செந்நெல்லும், கரும்பும், தென்னையும் செழித்து வளருகின்றன.
  • மிகப்பழைய காலத்து, இதிகாச நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றன என்பதற்கு நிரம்பிய ஆதாரங்கள் இங்கே உள்ளன.
  • குளக்கோட்டு மன்னன் செய்த தொண்டுகள் பலவற்றின் சுவடுகள் இன்றும் அறியக் கூடியனவாயுள்ளன.
  • இங்கே எங்கு நோக்கினாலும் சைவத் தமிழ்ப் பெயர்களே கேட்கின்றன.
  • இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோணேஸ்வரம் தேவாரம் பெற்ற திருத்தலமாக ஒளிவீசியது.
  • பாண்டியன் திருக்கோணமலையில் "இணைக்கயல்" பொறித்துள்ளமை வரலாற்றுப் பெருமையாகும்.
  • ஐம்பொன்னாலான அழகு மிக்க மூர்த்தங்கள் இருக்கும் மண்டபம் - தேவ மண்டபம், கண்கொள்ளாக்காட்சி தருவதாகும்.
  • பறங்கியருக்குப் பின் ஆங்கியேர் காலத்தில் கிடைத்த வழிபாட்டு அனுமதியின்போது நடைபெற்ற மலைபூசை ஆகாச வெளியில் இன்றும் நடைபெற்று வருகின்றது.
  • நாடொறும் ஆறுகால பூசை ஆகம விதிகளின்படி தவறாமல் நடைபெறுகின்றன.
  • திருக்கோணேசப் பெருமானின் விழாக்களில் வெளிவாரியாக நடைபெறுவது ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்கு பெருமான் எழுந்தருளும்போது, நகரிலுள்ள ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள்.
  • ஆடி மாதம் போலவே, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதத்தில் பூங்காவன மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
  • நவராத்தி நாட்களில் ஸ்ரீ சக்ரபூஜை வெகுசிறப்பாக நடைபெறுகிறது.
  • ஆதிகோண நாயகர் திருக்கோயில் கற்கோயிலாகும்.
  • திருக்கோணேஸ்வரத்தின் தொல்புகழ் பாடும் தேவாரம், திருப்புகழ் தவிர பல புராணங்களும், பிரபந்தங்களும், கல்வெட்டுச் செய்திகளும் உள்ளன.

அமைவிடம் இலங்கையின் கீழ்த் திசையில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க நகரம் திருகோணமலை. இலங்கையின் மிகப் பெரிய நதியாகிய மகாவலிகங்கை அவ்விடத்திற் கடலுடன் கலப்பதால் அப்பிரதேசம் நீர் வளமும் நில வளமும் பெற்றுச் சிறந்து விளங்குகின்றது. அங்கு சுவாமிமலை என்று வழங்குகின்ற உயர்ந்த குன்றம் ஒன்று கொட்டியார விரிகுடாவை நோக்கியவாறு அமைந்துள்ளது. அதன் உச்சியிலே திருக்கோணேச்சரக் கோயில் உள்ளது. அது அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட புதிய கோயிலாகும்.

பண்டைய வரலாறு வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கோயில் ஒன்று சமுத்திர ஓரத்தில் அந்த மலையின் அடிவாரத்தில் இருந்ததென நம்பப்படுகின்றது. அது கி மு 306 இல் நிகழ்ந்த கடல் கோளினாற் சமுத்திரத்தினுள் மூழ்கிவிட்டது. தெனன்று என்னும் வரலாற்றாசிரியர் எழுதிய இலங்கைச் சரித்திரம் என்னும் நூல் இவ்வாறு நிகழ்ந்ததெனக் கூறுகின்றது. ஆழ்கடலில் அமர்ந்திருக்குங் கோணேச்சரப் பெருமானுக்கு இன்றும் மலைப் பூசை ஒன்று செய்யப்படுவதை நாம் காணலாம். மலையின் அடியில் ஆழ்கடலுக்கு எதிரே மலைக்குகை போன்று பண்டைக்கோயிலின் மூலத்தானத்தின் ஒரு பகுதி இன்னமும் எஞ்சியிருக்கின்றது. அது பல்லவர் காலக் குகைக் கோயில் போன்றது. அக்கோயிலின் மிகுதி சமுத்திரத்தின் அடியில் உள்ளதென 1961 இல் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்த மக்வில்சன் என்பர் கூறியுள்ளார்.

இராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தட்சிண கைலாயம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேச்சரத்தைப் பூசித்து வந்தான் என்று மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல் கூறுகின்றது. இராவணன் தன் தாயாருக்குச் சிவலிங்கம் ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தட்சிண கைலாயமாகிய கோணமாமலை என்று தட்சிண கலாய புராணங் கூறுகின்றது. இதற்குச் சான்று பகர்வது போன்று இம்மலைப் பாறையில் இராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப் பிளவு ஒன்று இன்னமும் இருக்கின்றது. இராவணன் கிறிஸ்து யுகத்துக்கு மிகவும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய காலத்துக்குப் பின் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது என்றும் ராஜாவளிய என்னும் புத்த சமய வரலாற்று நூல் கூறுகின்றது.

கடல்கோளுக்குப் பின் மீண்டுஞ் சுவாமிமலை உச்சியில் அமைக்கப்பட்ட கோயில் கி பி 7ம் நூற்றாண்டிற் சீருஞ் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. இதனையே திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனார் தாயினும் நல்ல தலைவர் என்னும் தேவாரத்தில் கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணாமலையமர்ந்தாரே என்று போற்றிப் பாடியுள்ளார். சோழர் பாண்டியர் ஆரியச் சக்கரவர்த்திகள் முதலானோர் இக்கோயிலை ஆதரித்தனர். குளக்கோட்டு மன்னன் குளந்தொட்டு வளம் பெருக்கித் திருப்பணிகள் பலவுஞ் செய்வித்தவன் என்பது வரலாறு. இவன் திருக்கோணேச்சர ஆலயத்துக்குத் திருப்பணி மட்டுமன்றிச் சோதிட முற்கூறலுடன் அமைந்த கல்வெட்டு ஒன்றினையுஞ் செய்வித்தான். அது கோட்டை வாயிலிலுள்ள கற் தூண்களிற் பதிக்கப்பட்டு இன்னமும் இருக்கின்றது. அதனை ஈண்டு நோக்குதல் சாலப் பொருத்தமானது.

முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின் பொண்ணா ததனை யியற்றவழித் தேவைத்து எண்ணாரே பின்னரசர் கள்.

என்பது அக்கல்வெட்டு. குளக்கோட்டனின் திருப்பணியால் அமைந்த இவ்வாலயத்தைப் பறங்கியர் உடைப்பார்கள். பின்னர் அரசர்கள் இதனைப் பேணமாட்டார்கள் என்று இதன் எதிர்காலம் பற்றி இங்கு குறிப்பிட்டிருத்தல் வியப்புக்குரியது.

இக்காலத்திற் சிவராத்திரி தினத்திற் கோணேச்சரப் பெருமானுக்கு நகர்வலம் வருதல் என்னும் திருவிழா ஒன்று சிறப்பாக நடைபெறுகின்றது. அக்காலத்திலும் இத்தகைய திருவிழாக்கள் நடைபெற்றன. இவ்வாறாக 1624ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு நாளில் நகர்வலம் வருந் திருவிழா ஒன்று நடைபெற்றது. இதற்காக மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேச்சரப் பெருமான் திருவுலாவாக அடியார்களுடன் கோயிலிலிருந்து நகருக்கு எழுந்தருளினார். அவ்வேளையிற் போர்த்துக்கேயப் படைவீரர் பிராமணர்கள் போல வேடந் தாங்கிக் கும்பிடப்போவது போன்று கோயிலினுட் புகுந்தனர். அந்நேரத்திற் கோயிலின் உள்ளே பூசகர்கள் சிலரும் வேலையாளரும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

கொன்ஸ்ரன்ரயின்டீசா என்பவனுடுடைய தலைமையிற் சென்ற இப்போர்வீரர்கள் எதிர்த்தவர்களை வெட்டிக்கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க வெள்ளி நகைகளையும் விலைமதிப்புமிக்க பிறபொருள்களையும் சூறையாடிக்கொண்டு சென்றனர். அதன் பின்னர் அடியார்கள் சில விக்கிரகங்களை அகற்றி மறைத்து வைத்தனர். போர்த்துக்கேயர் பீரங்கிகளுடன் மீண்டும் வந்து கோயிலை முற்றாக அழித்தனர். போர்த்துக்கேயர் அழித்த கோயிலில் ஆயிரங்கால் மண்டபமும் பெரியதொரு தீர்த்தக்கேணியும் பிற மண்டபங்களும் இருந்தன என்பது அவர்கள் வரலாற்றுச் சான்றாக வரைந்து வைத்த படம் ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. கொன்ஸ்ரன்ரயின்டீசா செய்த சிவத்துரோகத்துக்காக அவன் 1630ம் ஆண்டு வேறு சிலர் செய்த சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொல்லப்பட்டான்.

புதிய கோயிலின் வரலாறு 1944ம் ஆண்டு திருகோணமலைக் கோட்டையினுள்ளே நீர்த்தேக்கம் ஒன்று அமைப்பதற்கு அகழ்வு வேலை செய்தபொழுது விஷ்ணு மகாலட்ஷ்மி விக்கிரகங்கள் கிடைத்தன. 1956ம் ஆண்டு ஆடி மாதத்திற் சுவாமிமலைக்கு அண்மையிற் கடற்கரை வீதியருகே கிணறு ஒன்று வெட்டப்பட்டபொழுது மூன்று விக்கிரகங்கள் கிடைத்தன. வேறோர் இடத்தில் அகழ்ந்தபொழுது மேலும் இரண்டு விக்கிரகங்கள் கிடைத்தன. இந்த விக்கிரகங்கள் எல்லாம் 1952ம் ஆண்டிற் பிரதிட்டை செய்யப்பட்டன.

1950.07.03 அன்று கலாநிதி பாலேந்திரா அவர்களின் தலைமையிலே திருக்கோணேச்சர ஆலயத் திருப்பணிச் சபை ஆரம்பமானது. இச்சபையின் பெருமுயர்சியாற் பழைய கோயில் இருந்த இடத்தில் மீண்டுந் திருக்கோணேச்சரர் ஆலயம் அமைக்கப்பட்டு 1963.03.03 அன்று மகா கும்பாபிடேகம் நிறைவெய்தியது. பழைய கோயிலுடன் ஒப்பிடும்போது இது சிறிய கோயிலாகவே இருக்கின்றது.

மூர்த்திச் சிறப்பு இக்கோயிலின் இறைவன் பெயர் திருக்கோணேச்சரர் இறைவி பெயர் மாதுமை அம்பாள். தலவிருட்சம் கல் ஆலமரம். இப்பொழுதுள்ள கோயிலை அடுத்து இம்மலையின் வட முனையிற் பாறையினுள் வேர்வைத்து இந்த ஆலமரம் செழிப்பாக வளர்ந்து நிற்கின்றது. சோழ நாட்டிலே பழையாறை என்பது கி பி 831 இல் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு குமராங்குசன் என்னும் அரசன் அப்பொழுது ஆட்சி செலுத்தினான். இவனுடைய மகள் சீர்பாததேவி. நகுலேச்சரத் தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மாருதப்பூரவீகவல்லி என்பவளுக்கு நரசிங்கன் என்னும் மகன் ஒருவன் இருந்தான். அவன் சீர்பாததேவியைத் திருமணஞ் செய்தான். இவர்கள் இருவரும் தம் சுற்றத்தாருடன் இலங்கைக்கு வருவதற்குச் சோழநாட்டிலிருந்து கப்பலிற் புறப்பட்டனர். அப்பொழுது சீர்பாததேவி இலங்கையின் நாட்டு வளத்தைப் பார்க்க விரும்பினாள். எனவே கப்பல் இலங்கையின் கிழக்குக் கரையோரமாகப் பயணஞ் செய்டக்து.

கப்பல் திருகோணமலையை அண்மித்தபொழுது திருக்கோணேச்சரந் தென்பட்டது. அரசி அவ்விறைவரை வணங்கினாள். அதே நேரம் கப்பலும் நங்கூரம் இட்டது போன்று நிலையாய் நின்றது. அரசி மிகவுந் துயரைடைந்து விக்கினங்களை அகற்றுபவரான விநாயகரைத் தொழுதாள். பின்னர் படகோட்டியைக் கப்பலின் கீழே சென்று பார்க்குமாறு பணித்தாள். கப்பல் தரையிற் பட்டுவிட்டதென்றே அவள் கருதினாள். எனினும் அங்கு தரை இருக்கவில்லை. ஆயின் கடலில் மிகுந்த ஆழத்தில் விநாயகர் விக்கிரகம் ஒன்று இருந்தது. அதனை அவள் கப்பலுக்குள் எடுத்தபின்னர் கப்பல் மீண்டும் ஓடத்தொடங்கியது. இவ்வாறாகக் கடற்கோளால் கீழே சென்ற புராதன ஆலயத்தின் விநாயகர் விக்கிரகம் இவ்வளவு மகிமை உடையதென்றாற் கோணேச்சரப் பெருமானின் மகிமையைக் கூறவும் வேண்டுமா?

திருகோணேச்சரப் பெருமான் திருவுலாவுக்கு எழுந்தருளிய பின்னரே போர்த்துக்கேயர் கோயிலினுட் புகுந்தனர் என்று முன்னர் கூறப்பட்டது. எனவே அந்த விக்கிரகங்கள் காப்பாற்றப்பட்டிருத்தல் வேண்டும். அவை இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட விநாயகரும் சோமாஸ்கந்தருமாக இருக்கலாம். இந்த விநாயகர் விக்கிரகம் மிகவும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. பழைய கோயிலின் பல விக்கிரகங்கள் தற்செயலாகக் கிடைத்தன என்பது இறைவனின் செயல். இதுவும் திருக்கோணேச்சரப் பெருமானின் மூர்த்திச் சிறப்பினையே புலப்படுத்துகின்றது.

தலச்சிறப்பு இந்தத் தலத்தின் சிறப்புக் காரணமாகவே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்கோணேச்சரப் பெருமான் மீது தேவாரத் திருப்பதிகம் பாடினார். இத்தலத்தின் மகிமையை அடியார்கள் சொல்லக்கேட்டு அவர் இப்பதிகத்தை பாடினார். அருணகிரிநாதர் தாம் பாடிய திருப்புகழ் ஒன்றில் "நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக் முஓனாமலை தலத்தாறு கோபுர" என்று இத்தலத்தை வருணித்துள்ளார்.

குறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் ஒன்று சேர்கின்ற ஓர் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்குணமலை திருக்குணாமலை திருமலை தென் கைலாயம் கோகர்ணம் திருகூடம் மச்சேஸ்வரம் என்பன இத்தலத்தின் பிறபெயர்கள் ஆகும்.

தீர்த்தச் சிறப்பு இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் எனப்படும். இந்தச் சொல்லின் பொருளை நோக்கும்பொழுது இக்கோயிலின் தீர்த்தச் சிறப்பு புலப்படும். இங்கு தீர்த்தமாடுபவர்களின் பாவம் தொலைந்து விடும் என்பது இதன் கருத்து.

சுவாமி மலையின் தென் பக்கத்தில் ஆழமான ஒரு கிணறாகப் பாவநாசத் தீர்த்தம் இப்பொழுது இருக்கின்றது. இதனைச் சுனை என்று கூற முடியாத அளவுக்கு போர்த்துக்கேயர் பழைய கோயிலை இடித்து அங்கிருந்த தீர்த்தக்கேணியையும் சுனையையுந் து}ர்த்துவிட்டனர். இப்பொழுதுள்ள கேணியுந் தீர்த்தக் கிணறுஞ் சேர்ந்த பெரிய கேணி ஒன்று முன்பு இருந்ததென ஊகிக்கப்படுகின்றது. அற்புதமான இந்தத் தீர்த்தத்தின் ஒரு சிறு பகுதியையாயினும் பாவநாசத் தீர்த்தக் கிணற்றின் மூலம் திருக்கோணேச்சரர் தம் அடியார்களாகிய நமக்குத் தந்தருளினாரே என்பது இந்தத் தீர்த்தத்தின் சிறப்பு.

பூசைகள் விழாக்கள். இங்கு ஆறுகாலப் பூசைகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றன. சிவராத்திரிக் காலத்திலே திருக்கோணேச்சரப் பெருமான் நகரத்தினுள்ளே திருவுலாவாக எழுந்தருளுதல் கண்கொள்ளாக் காட்சியாகும். இக்கோயிலின் மகோற்சவம் பங்குனி உத்தரத்திலே தொடங்கிப் 18 நாட்களுக்கு நடைபெறும்.

நூல்கள். கோணேசர் கல்வெட்டு இக்கோயிலின் சரித்திரத்தை உரைநடையிலும் கூறுகின்றது. சீர்பாதகுலவரலாறு மட்டக்களப்பு மான்மியம் ராஜாவளிய மச்சபுராணம் திருக்கோணாசலப்புராணம் இலங்கைச் சரித்திரம் (தெனன்று) தட்சின கைலாய புராணம் திருக்கோணமலைத் திருவுருவங்கள் குடுமியா மலைச் சாசனம் திருக்கோணமலைக் கோட்டை வாயிற் கல்வெட்டு முதலியன இக்கோயில் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தருகின்றன.. திருக்கோணேச்சரத் தேவாரத் திருப்பதிகம் கோணேஸ்வரர் குறவஞ்சி திருக்கோணேஸ்வரர் அகவல் திருக்கோணமலை அந்தாதி முதலியன இக்கோயில் மேல் எழுந்த இலக்கியங்களாகும்.

...திருசிற்றம்பலம்...

திருக்கோணமலை அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருக்கேதீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 145.86 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • இராமேஸ்வரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 224.87 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • கோடியக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 246.12 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • அகத்தியான்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 250.06 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமறைக்காடு ( வேதாரண்யம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 251.40 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடிக்குளம் ( கற்பகநாதர் குளம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 269.66 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஇடும்பாவனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 272.78 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புனவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 279.81 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவுசத்தானம் (கோயிலூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 280.24 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாய்மூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 281.74 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.