HolyIndia.Org

திருவதிகை , அதிகை வீரட்டேஸ்வரர் ஆலயம்

அதிகை வீரட்டேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவதிகை
இறைவன் பெயர் : அதிகை வீரட்டேஸ்வரர்
இறைவி பெயர் : திரிபுரசுந்தரி
எப்படிப் போவது : பன்ருட்டி ரயில் நிலையத்தில் இருந்து தென்மேற்கே 2 Km தொலைவில் கெடில நதியின் வடகரையில் திருவதிகை சிவஸ்தலம் அமைந்துள்ளது. பன்ருட்டி சென்னையில் இருந்து சுமார் 175 Km தொலைவில் உள்ளது. அருகில் உள்ள மற்ற நகரங்கள் - விழுப்புரம் 20 Km, கடலூர் 26 Km.
சிவஸ்தலம் பெயர் : திருவதிகை
ஆலயம் பற்றி :

தல புராண வரலாறு: சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார். தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து உரக்கச் சிரித்தார். அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.

திருநாவுக்கரசர்: திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும், மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இற்ந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார். தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. சூலைநோயின் கொடுமை தாங்கமுடியாமல் தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவ்ரும்

கூற்றாயின வாறு விலக்ககிலீர்
 கொடுமைபல செய்தன் நான் அறியேன்
ஏற்றாய அடிக்கே இரவும் பகலும்
 பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம் படியே
 குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில
 வீரட்டானத் துறை அம்மானே

என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப் பெற்றார். மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும்.

கோவில் அமைப்பு: கோவில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில் பெண்கள் அழகிய சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றனர். கோபுர வாயில் வழியாக் உள்ளே நுழந்தவுடன் உள்ள திறந்த வெளி முற்றத்தின் தென்பக்கம் சங்கர தீர்த்தமும், வடப்பக்கம் 5 அடி உயரமுள்ள பத்மாசனக் கோலத்தில் காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன.2வது கோபுர வாயிலின் வெளிப்புறம் விநாயகர், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. 5 நிலைகளையுடைய இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய நந்தியின் உருவசிலைக் காணப்படுகிறது. 2வது சுற்றின் தென்புறத்தில் திருநாவுக்கரசருக்கும், அவர் தமக்கை திலகவதிக்கும் தனித் தனியாக சந்நிதி உள்ளது. அதற்கடுத்து பைரவர், சனீஸ்வரர், மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன. அதன்பின் இறைவி பெரியநாயகி சந்நிதி இருக்கிறது. அம்பிகையின் கோவில் வாசலில் இருந்து இறைவி சந்நிதி விமானத்தைக் காணலாம். விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடு சிற்பங்கள் பல வண்ணங்களில் நம் கருத்தைக் கவரும். இவைகளில் பிரச்சித்தமான வடிவம் திரிபுராந்தகர் சிற்பம். 12 திருக்கரங்கள், சூலம் ஏந்திய கை ஒன்று, வில்லேந்திய கை ஒன்று, ஒரு கால் தேர்த்தட்டிலும், மற்றொரு காலை உயர்த்தியும் வில் வளைத்து நிற்கிறார்.

3வது சுற்றில் தான் மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. கருவறையில் காட்சி அளிக்கும் வீரட்டேஸ்வரர் 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம் ஆவார். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி தருகிறது. மூலஸ்தானத்தின் மேல் உள்ள விமானம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. கருடன், பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர் ஆகியோர் இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருக்கின்றனர்.

உள் சுற்றின் தென்மேற்கே உள்ள பஞ்சமுகலிங்கம் காணவேண்டிய ஒன்று. இதுவம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. இத்தகைய பஞ்சமுகலிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் காண முடியாது.

...திருசிற்றம்பலம்...

திருவதிகை அருகில் உள்ள சிவாலயங்கள்

 • திருத்துறையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.60 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருமாணிகுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.51 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருநாவலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.78 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 19.63 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருப்பாதிரிபுலியூர் ( கடலூர் NT) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.36 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • வடுகூர் (திருவாண்டார் கோவில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.39 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருவெண்ணைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.86 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திரு ஆமாத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.94 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருச்சோபுரம் (தியாகவல்லி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 25.62 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • புறவார் பனங்காட்டூர் ( பனையபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.26 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.