ஆலயம் பற்றி : கோவில் அமைப்பு: கொங்குநாட்டு சிவஸ்தலங்களில் கரூரில் உள்ள சிவாலயம் பெருமை மிக்கதும் பெரிய அளவில் அமைந்துள்ளதும் ஆகும்.இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 2.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டது. உட்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது. புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். கோவில் நல்ல சுற்று மதிலோடு கூடியது. கிழக்கு மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் உடையது. முன் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. கோபுரத்தில் புராணக் கட்சிகளை விளக்கும் சுதைச் சிற்பங்கள் அழகுடன் காட்சி தருகின்றன. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உண்டு. கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் காணவேண்டிய ஒன்றாகும். கிழக்கு நோக்கி உள்ள கல்யாண பசுபதிநாதர், ஆநிலையப்பர் என்று வழங்கப்படும் மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். சுமார் இரண்டடி உயரம் உள்ள இந்த சிவலிங்கம் சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது. பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு இருப்பது ஒரு சிறப்பம்சம் ஆகும்.உட்பிரகாரத்தில் தெற்குச்சுற்றில் 63 நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களில் எரிபத்த நாயனாருக்கு தனிசந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் விநாயகர், கஜலட்சுமி, ஆருமுகன் ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன. வடக்குச் சுற்றில் பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளனர். ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இந்த சந்நிதியின் இடது புறம் க்ழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது.
கி.பி. 14ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர் இக்கோவிலில் உள்ள முருகனை பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார் ஆகியோர் வாழ்ந்து பேறு பெற்ற பெருமையுடையது கருவூர் சிவஸ்தலம்.
...திருசிற்றம்பலம்... |