HolyIndia.Org

இராமேஸ்வரம் , ராமநாதசுவாமி ஆலயம்

ராமநாதசுவாமி தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : இராமேஸ்வரம்
இறைவன் பெயர் : ராமநாதசுவாமி
இறைவி பெயர் : பர்வத வர்த்தினி
எப்படிப் போவது : இந்த திருத்தலம் ராமேஸ்வரம் தீவில் உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து ரயில் வசதி உண்டு. பேருந்து வசதியும் மதுரை, திருச்சியில் இருந்து இருக்கிறது
சிவஸ்தலம் பெயர் : இராமேஸ்வரம்
ஆலயம் பற்றி :

இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும்.

தல வரலாறு: இராமாயணப் போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்து வருகிறார். இராமேஸ்வரம் தலம் வந்தபிறகு, இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன் தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தனது வாலினால் இராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். இராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் இராமலிங்கத்திறகு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விசுவநாதர் எனப்படும். இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.

பாம்பன் சாலை பாலம்
பாம்பன் சாலை பாலம்

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாம்பன் ரயில் பாலம் மூலமாகத்தான் ராமேஸ்வரம் செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி இப்போது பாம்பன் சாலை பாலமும் இருப்பதால் எளிதாக ராமேஸ்வரம் சென்று வர முடியும்.

கோவில் அமைப்பு: இராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது. இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்துள்ளன. ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானக்கள் அமைந்திருக்கின்றன. சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு இரமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு இன்றும் காணலம்.இச்சந்நிதிக்கு வடபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் திரு உருவங்கள் காணலாம்.இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 4000 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும்.

கோவில் தீர்த்தம்: இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.

...திருசிற்றம்பலம்...

இராமேஸ்வரம் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருவாடானை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 70.55 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புனவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 72.13 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கேதீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 80.05 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்காணப்பேர் (காளையார்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 96.98 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 120.56 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சுழியல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 125.35 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • கோடியக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 125.56 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவுசத்தானம் (கோயிலூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 126.72 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஇடும்பாவனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 129.69 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பூவணம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 130.82 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.