ஆலயம் பற்றி : சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய அட்ட வீரட்டத்தலங்களில் திருவிற்குடியும் ஒன்றாகும். பிரம்மனிடம் பல வரங்கள் பெற்ற சலந்தாசுரன் என்பவன் தந்து வரத்தின் பலத்தாலும், உடல் வலிமையாலும் செருக்குற்று தேவர்களுக்கு தொல்லைகள் பல கொடுத்தான். தேவர்கள் கயிலை மலையை அடைந்து சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சலந்தாசுரன் போர்க்கோலம் பூண்டு கயிலை மலையை அடைந்தான். சிவபெருமான் ஒரு கிழ அந்தணர் வேடத்தில் சலந்தாசுரன் முன்பு தோன்றினார். சலந்தாசுரனிடம் தான் கூறும் ஒரு சிறிய செயலை அவனால் செய்ய முடியுமா என்று கேட்டார். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று செருக்குடன் சலந்தாசுரன் கூறினான். சிவபெருமன் தனது காற் பெருவிரல்லால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தைப் பெயர்த்து உன் தலை மேல் தாங்கி நில் என்று சலந்தாசுரனிடம் கூறினார். அவனும் பெரு முயற்சிக்குப் பின் அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தன் தலை மேல் தாங்கினான். அந்த வட்டச் சக்கரம் சலந்தாசுரன் உடலை இருகூறாகப் பிளந்துவிட்டு இறைவனின் கரத்தில் அமர்கிறது. சலந்தாசுரன் என்பவனை சக்கரத்தால் சிவபெருமான் அழித்த இத்தலம் அஷ்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.
இத்தலத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. இத்தலத்தில் உள்ள முருகன் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்து தன்னுடைய இரு தேவியருடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. 11 பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தின் 7-வது பாடல் சிதைந்து போயிற்று.
...திருசிற்றம்பலம்... |