HolyIndia.Org

திருவீழிமிழலை , நேத்ரார்ப்பன ஈசுவரர், திருவீழிநாதர் ஆலயம்

நேத்ரார்ப்பன ஈசுவரர், திருவீழிநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவீழிமிழலை
இறைவன் பெயர் : நேத்ரார்ப்பன ஈசுவரர், திருவீழிநாதர்
இறைவி பெயர் : சுந்தர குசாம்பாள்
எப்படிப் போவது : திருவாரூரை அடுத்துள்ள நன்னிலாத்திற்கு வடமேற்கே பூந்தோட்டம் மார்க்கத்தில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். திருவன்னியூர் என்ற மற்றொரு பாடல
சிவஸ்தலம் பெயர் : திருவீழிமிழலை
ஆலயம் பற்றி :

ஸ்தல வரலாறு: மஹாவிஷ்னுவின் கையில் இருந்த சக்கராயுதம் தேய்ந்து போனபோது, ஆற்றல் பொருந்திய சக்கரம் பெறுவதற்காக மஹாவிஷ்னு சிவபெருமானை பூஜித்ததாக பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி சிவபெருமானை விஷ்னு பூஜித்ததாக திருமாற்பேறு, திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறு கூறுகின்றன. இம்மூன்று தலங்களில் திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருமாலுக்கு சலந்திரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் தேவைப்படுகிறது. அதைப் பெருவதற்காக திருவீழிமிழலையில் சிவபெருமானிடம் வருகிறார். ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் என்னியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999 மலர்களால் அர்ச்சனை செய்து விடுகிறார். ஆயிரமாவது மலர் இல்லை. இன்னொரு தாமரை மலரைக் கொண்டு வந்து அர்ச்சனையை தொடர நேரமும் இல்லை. குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பெயர்த்து எடுத்து பூஜையை குறை இல்லாமல் முடித்தவுடன் சிவனும் காட்சி கொடுத்து திருமால் விரும்பியபடி அவருக்கு சக்கராயுதம் கொடுத்து அருள் செய்கிறார். இப்படி மஹாவிஷ்னு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம் தான் திருவீழிமிழலை.

இப்படி திருமால் ஈசனை வழிபட்ட செய்தியை திருநாவுக்கரசர் தனது பதிகம் மூலமாக பாடுகிறார்.

நீற்றினை நிறையப் பூசி, நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி, யவன்கொணர்ந் திழிச்சங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.

இங்குள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள கல்யாண சுந்தரேசுவரர் திருவடியில் திருமால் தம் கண்ணைப் பறித்து அர்ச்சித்த அடையாளமும், கீழே சக்கரமும் இருப்பதை இன்றும் பார்க்கலாம்.

கோவில் விபரம்: இறைவன் நேத்ரார்ப்பன ஈசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூல்வர் சுயம்பு உருவில் சுமார் 5 அடி உயரத்தில் நற்காட்சி தருகிறார். மூலவர் லிங்கத்திற்கு பின்புற கர்ப்பக்கிருஹ சுவரில் பார்வதி பரமேசுவரர் திரு உருவங்கள் இருக்கின்றன. கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தை விட கர்ப்பக் கிருஹத்தின் மேல் இருக்கிற 16 சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானமே சிறப்பானது. இதற்கு விண்ணிழி விமானம் என்று பெயர். சக்கரம் பெற்ற திருமால் வைகுண்டத்தில் இருந்து கொண்டுவந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது. ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. மூலவரின் வலப்பக்க மண்டப அறையில் கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் பாவனையில் திருமால் காட்சி தருகிறார்.

படிக்காசு அருளியது: திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது நாட்டில் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது. இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள். மறுநாள் காலையில் கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள். அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர். படிக்காசு அளிப்பதிலும் இறைவன் அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் கொடுத்தார். சம்பந்தர் அதைப் பார்த்து வாசி தீரவே காசு நல்குவீர் என்னும் பதிகம் பாடிய பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருள் செய்தார்.



...திருசிற்றம்பலம்...

திருவீழிமிழலை அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருக்கருவிலி கொட்டிட்டை (கருவேலி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.76 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஅன்னியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.95 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • சிறுகுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.69 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபாம்புரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.81 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவைகன் மாடக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.23 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருத்திலதைப்பதி ( செதலபதி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.85 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாஞ்சியம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.33 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமீயச்சூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.34 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமீயச்சூர் இளங்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.34 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • நன்னிலம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.67 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.