ஆலயம் பற்றி : திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் முதலாவதாகும். இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்பு புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகி விடுகின்றன. மூலவர் பாம்புபுரேச்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள். இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதி மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.
ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷத் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது. ...திருசிற்றம்பலம்... |