HolyIndia.Org

வடகுரங்காடுதுறை , குலைவணங்குநாதர், தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர் ஆலயம்

குலைவணங்குநாதர், தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : வடகுரங்காடுதுறை
இறைவன் பெயர் : குலைவணங்குநாதர், தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர்
இறைவி பெயர் : அழகுசடைமுடி அம்மை, ஜடாமகுட நாயகி
தல மரம் : தென்னை
வழிபட்டோர்: வாலி
எப்படிப் போவது : திருவையாற்றிற்கு அருகில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மி. தொலைவு.
சிவஸ்தலம் பெயர் : வடகுரங்காடுதுறை
ஆலயம் பற்றி :

வாலியும், சுக்ரீவனும் வழிபட்ட இரண்டு சிவஸ்தலங்கள் குரங்காடுதுறை என்ற பெயரில் இருக்கின்றன. திருவையாறு அருகே காவிரியின் வடகரையில் உள்ளதால் இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. வாலி இராவணனுடன் போரிட்ட சமயத்தில் அறுந்த வால் வளர இத்தலத்து இறைவனை வழிபட்டான். வாலி வழிபட்டதால் இறைவனுக்கு வாலிபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இவ்வாலயம் 5 நிலைகளைக் கொண்ட கோபுரத்துடனும் இரண்டு பிரகாரங்களுடனும் காணப்படுகிறது. ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தில் நல்ல வெய்யில் காலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருமுறை நடந்து வந்து கொண்டிருந்தாள். வெய்யிற் காலமானதால் தாகம் தாங்க முடியவில்லை. தாகமும், களைப்பும் மேலிட அவள் மயக்கமுற்றாள். இதலத்தில் கோவில் கொண்டுள்ள ஈசன் இதை அறிந்தார். தாயுமானவராக திருச்சிராப்பள்ளியில் ஒரு பக்தைக்கு அருள் செய்த இறைவன் இங்கு அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். இறைவனருளால் அப்பெண் தாகம் நீங்கி புத்துணர்வு அடைந்தாள். தென்னங்குலைகளை வளைத்து அருள் புரிந்ததால் இறைவன் குலைவணங்குநாதர் என்று பெயர் பெற்றார்.

கருவறையில் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார் குலைவணங்குநாதர். அம்மன் சந்நிதியில் இறைவி அழகுசடைமுடி அம்மை சிரத்தில் உயர்ந்த சடாமுடியுடன் அழகுடன் காட்சி தருகிறாள். பௌர்ணமி நாட்களில் அம்மன் அலங்காரம் மிகவும் அழகுடன் இருக்கும். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிப் பெண்கள் இத்தல இறைவனை வணங்கி வந்தால் எவ்வித தொல்லையும் இன்றி சுகப்பிரசவம் நடக்கும்.

இத்தலத்தில் ஹனுமான் சிவபெருமானை பூஜை செய்துள்ளார். கருவறையைச் சுற்றி வரும்போது காணப்படும் தட்சினாமூர்த்தி சந்நிதி மிகவும் விசேஷமுடையதாகும். இவரை மனமாற பிரார்த்திதால் குருபலம் பெருகும். மேலும் இவ்வாலயத்தில் விஷ்னு துர்க்கை மிகவும் சக்தி உடைய தெய்வம். எட்டு கைகளுடன் காணப்படும் துர்க்கைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீலநிறமாக மாறிவிடுவது சிறப்பாகும். இத்தலத்தில் துர்க்கைக்கு ராகுகாலபூஜை செய்யும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது 3 பாடல் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் வள்ளி தேவசேனாதேவி சமேதராக மயிலுடன் எழுந்தருளியுள்ளார்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளா ரிடமென விரும்பினாரே. 

தல வரலாறு மக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று வழங்குகிறது. கர்ப்பிணி ஒருத்தியின் தாகத்தைத் தீர்க்கத் தென்னங்குலையை இறைவன் வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்கீஸ்வரர் என்றும், சிட்டுக்குருவி வழிபட்டதால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் வழங்கப்படுகிறார். சிறப்புக்கள் இத்தலத்தில் நடராசப் பெருமான் சிவகாமியுடன் மூலவராகக் காட்சியளிக்கின்றார். இத்தலத்து தல வரலாறான (கர்ப்பிணி) செட்டிப் பெண்ணின் உருவம் உள்ளது. குறிப்பு ஐந்து நிலை ராஜகோபுரம் - சிதைந்து செங்கற்கள் தெரிகின்றன. வாகனமண்டபமும் சிதிலமாகியுள்ளது, சுற்று மதில் முழுவதுமாக அழிந்துள்ளது. பல்வேறு மூர்த்தங்கள் வெட்ட வெளியில் பிராகாரத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் பராமரிப்பில்லா நிலையைக் காணும்போதும் மனது மிகவும் வேதனைப்படுகிறது. 80 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகமே நடக்கவில்லை என்பதை கேள்விபட்டடு அடையும் வேதனைக்கு அளவேயில்லை. இது தஞ்சை அரண்மனை இலாகாவுக்குச் சொந்தமான கோயிலாகும்.

...திருசிற்றம்பலம்...

வடகுரங்காடுதுறை அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருப்புள்ளமங்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.19 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசோற்றுத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.02 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பழனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.14 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கருகாவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.31 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • தென்குடித்திட்டை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.84 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பாலைத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.09 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.31 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேதிகுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.36 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவைகாவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.99 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவையாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.00 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.