ஆலயம் பற்றி :
தல வரலாறு
ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்டதால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது.
சோழ மன்னனுக்கும், ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்கமாகக் காட்சி தந்தமையால் கோடீஸ்வரர் என்று சுவாமிக்கும், கோடீச்சரம் என்று கோயிலுக்கும் பெயர் வரலாயிற்று.
மேலும், பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடிமுருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சித் தந்ததாலும் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார்.
சிறப்புக்கள்
இத்தலத்தின் வேறு பெயர்கள் வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்பனவாம்.
மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்காய்த்த மாதிரி காணப்படுகிறது.
இத்தலத்தில் புண்ணியஞ் செய்தாலும், பாவஞ் செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது ஐதீகம். இங்குப் பாவஞ் செய்தால் கோடி மடங்காகப் பெருகுவதால் அதற்குக் கழுவாயே இல்லாமற் போகும் என்பதை "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்னும் பழமொழியால் அறியலாம்.
திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகம் திருக்கொட்டையூர் மற்றும் திருவலஞ்சுழி (காவிரி தென்கரைத் தலம்) ஆகிய இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்கும் பொதுவானது....திருசிற்றம்பலம்... |