HolyIndia.Org

திருமணஞ்சேரி , அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர் ஆலயம்

அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருமணஞ்சேரி
இறைவன் பெயர் : அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர்
இறைவி பெயர் : கோகிலாம்பாள்
தீர்த்தம் : சப்த சாகர தீர்த்தம்
வழிபட்டோர்: மன்மதன், ஆமை
எப்படிப் போவது : மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 Km தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உண்டு.
சிவஸ்தலம் பெயர் : திருமணஞ்சேரி
ஆலயம் பற்றி :

தல வரலாறு: உமாதேவி ஒருமுறை கைலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். சிவபிரானும் கருணை கொண்டு அவ்வாறே வாக்களித்தார். அதன்பின் ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.

உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற உமாதேவி பரத முனிவரிடம் வளர்ந்து வரும் வேளையில் அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்துகொள்ள சிவபெருமான் தீர்மானித்தார். பரத மகரிஷி நடத்திய யாக வேள்விக் குண்டத்தில் சிவபெருமான் தோன்றி பசு உருவில் இருந்த உமாதேவிக்கு சுய உருவம் கொடுத்து இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.

தலச் சிறப்பு: திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமனஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தனது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவர் என்பது அனுபவ உண்மையாகும்.

கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கியிருக்கும் இவ்வாலயம் இராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் கணபதி காட்சி தருகிறார். அடுத்து முறையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பிறகு கட்ட கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் கருவறையில் கிழக்கு நோக்கி இத்தலத்து இறைவன் உத்வாகநாதர் அழகுற அருட்காட்சி தருகிறார். கருவறையின் வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு இத்தலத்து இறைவி கோகிலாம்பாள் அமர்ந்த நிலையில் திருமணப் பெண் போன்றே அருட்காட்சி தருகிறாள்.

கருவறையின் இடதுபுறம் நிருத்த மண்டபத்தில் இவ்வாலயத்தின் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர் அம்பிகை கோகிலாம்பாளுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மற்றும் நடராஜர், சுப்பிரமணியர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, இராகு பகவான், துர்க்கை, மகாவிஷ்னு ஆகியோர் சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன. மன்மதன் சிவபெருமான் மீது தன் மலர்க்கணைகளைத் தொடுத்து அதனால் அவரது நெற்றிக்கண் தீயினால் எரிந்து சாம்பலானான். அதனால் மனம் நொந்து திருந்தி மன்மதன் சிவப்பெருமானை துதிக்க சிவபெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறுபெற வரமருளியது இத்தலத்தில் தான் நிகழ்ந்தது.

சோழ மன்னன் கண்டராதித்யனின் மனைவியான செம்பியன் மகாதேவியால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது என்று இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது. ஆலயத்தின் இராஜ கோபுரம் மல்லப்ப நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது.

இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ள திருவேள்விக்குடி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணத்திற்கான வேள்விகள், யாகம் மற்றும் இதர கல்யாண சடங்குகள் நடைபெற்றன.

தல வரலாறு ஈசன், உமாதேவியைத் திருமணம் புரிந்த தலம்.எனவே இப் பெயர் பெற்றது. ஆமை, பூஜித்து.மனித உருப்பெற்றது. சிறப்புக்கள் திருமணப்பேறு, மகப்பேறு ஆகியவற்றுக்குப் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. சோழர் காலக் கல்வெட்டுகள் 28 படி எடுக்கப்பட்டுள்ளன. அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, கீழைத் திருமணஞ்சேரி எனப்படுகிறது. மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில்பாதையில், குத்தாலம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 6கீ.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது.

...திருசிற்றம்பலம்...

திருமணஞ்சேரி அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருஎதிர்கொள்பாடி (மேலதிருமனஞ்சேரி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.25 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேள்விக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.98 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருத்துருத்தி ( குத்தாலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.71 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகோடிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.18 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபந்தனைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.57 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவழுந்தூர் (தேரழுந்தூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.62 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.59 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநீலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.81 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகஞ்சனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.85 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாவடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.87 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.