HolyIndia.Org

திருப்புன்கூர் , சிவலோகநாதர் ஆலயம்

சிவலோகநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருப்புன்கூர்
இறைவன் பெயர் : சிவலோகநாதர்
இறைவி பெயர் : சௌந்தர நாயகி, சொக்கநாயகி
தல மரம் : புங்க மரம்
தீர்த்தம் : கணபதி தீர்த்தம்
வழிபட்டோர்: பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், அக்கினி, பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர், ஏயர்கோன் கலிக்காமர், இராசேந்திர சோழன் முதலியோர்
எப்படிப் போவது : வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மேற்கே 3 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருப்புன்கூர்
ஆலயம் பற்றி :

புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது. திருநாளைப் போவார் நாயனார் (நந்தனார்) தம்மை நேராக தரிசனம் செய்து வணங்கும் பொருட்டு இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் தமக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு செய்தருளிய தலம் திருப்புன்கூர். நந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவராதலால் ஆலயத்திற்குள் செல்வதற்கு அனுமதி இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார். அப்போது இறைவன் முன் இருக்கும் நந்தி நன்றாக அவர் இறைவனைப் பார்க்க முடியாமல் மறைக்கும். அதற்காக கவலைப்பட்டு ஆதங்கப்பட்ட அவருக்கு தரிசனம் கொடுக்க நந்தியை விலகச் சொல்லி நந்தனாரின் பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டிய தலம். எல்லா சிவன் கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும். ஆனால் நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை.

ஒருமுறை சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்திற்கு வருகை புரிந்தனர். அச்சமயம் திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம் 12 வேலி நிலம் ஆலயத்திற்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற அரசனும் சம்மதித்தான். அதன்படி சுந்தரர் பதிகம் பாடி மழை பெய்யச் செய்தருளி 12 வேலி நிலமும், பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த 12 வேலி நிலமும் மன்னனிடம் பெற்று இந்த திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார்.

தல வரலாறு

 • புங்கு + ஊர் = புங்கூர் - புன்கூர் என்றாயிற்று.

 • இங்குள்ள தீர்த்தம் விநாயகருடைய துணையால் நந்தனார் வெட்டியதாகும்.
 • இத்தலத்திற்குரிய பன்னிருவேலி பெற்ற வரலாறு : தன் நாட்டில் பஞ்சம் நிலவியதால் இராசேந்திரசோழன் எல்லாச் சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர் சிவலோக நாதரை வழிபடின் மழையுண்டாகும் என்றருள, அவ்வாறே மன்னனும் அங்கு வந்து சுவாமியை வழிபட்டான். அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி, சந்நிதியில் பாடி மழை செய்விக்குமாறு வேண்டினான். சுந்தரரும் மழைசெய்வித்தால் சுவாமிக்குப் பன்னிருவேலி நிலமளிக்குமாறு மன்னனுக்கு கட்டளையிட்டுவிட்டுப் பாடினார், மழைசெய்தது. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழைமிகுதியைக் கண்ட மன்னன், அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணிச் சுந்தரரைப் பார்த்து நிறுத்துமாறு பாடியருள வேண்ட, அவரும் மேலும் பன்னிருவேலி, நிலம் கேட்க, மன்னனும் தர, சுந்தரரும் பாடியருள மழையும் நின்றது.
 • திருப்புன்கூருக்கு வந்து சிவலோக நாதரைத் தரிசிக்க முயன்ற திருநாளைப்போவார் (நந்தனார்), தன் குலநிலையை எண்ணி வெளியிலிருந்து பார்க்க, நந்தி மறைத்திருப்பது கண்டு வருந்தினார். இறைவன் இவருடைய உள்ளப் பக்தியைக் கண்டு மகிழ்ந்து நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு பணித்தார். இன்றும் நந்தி இத்தலத்தில் விலகியிருப்பதைக் காணலாம். நந்தி விலகத் தரிசித்த நாளைப்போவார் கோயிலின் மேற்புறமுள்ள ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணித் தனக்குத் துணை யாருமில்லாததால் இறைவனை வேண்ட, இறைவன் அவருக்குத் துணையாகுமாறு கணபதியை அனுப்பினார். அவர் துணையால் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார். அதுவே கணபதிதீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் "குளம் வெட்டிய விநாயகர்" என்றழைக்கப்படுகிறார்.

சிறப்புக்கள்

 • திருநாளைப்போவார் (நந்தனார்) வணங்குவதற்காக இறைவன் நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம்.

 • ஏயர்கோன் கலிக்காமர், சுந்தரருடன் வந்து தரிசித்த தலம்.
 • சுந்தரர்பால் கோபங்கொண்ட விறன்மிண்ட நாயனார் (இத்தலத்திற்கு வந்து தங்கியிருந்) வழிபட்ட சிறப்புடைய தலம்.
 • திருநாளைப்போவாரின் (நந்தனார்) ஊரான ஆதனூர் இத்தலத்திற்குப் பக்கத்தில் 5 கி.மீ. -ல் உள்ளது.
 • உள்சுற்றில் இடப்பால் நந்தனால் திருவுருவம் உள்ளது.
 • இங்குள்ள நந்தி (திருநாளைப்போவாருக்காக வழிவிட்டு) சற்று விலகியுள்ளது.
 • இங்குள்ள சோமாஸ்கந்தர் - பெரிய திருமேனி இத்தலத்திற்குரிய தனிச்சிறப்பு - தரிசிக்கத்தக்கது.
 • சூ£¤யன், அக்கினி வழிபட்ட லிங்கங்கள் கோயிலுள் உள்ளன.
 • தலப்பதிகங்கள் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
 • நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது; இப்பெருமான் பாதத்தில் தேவர் ஒருவர் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து இசை எழுப்புகின்றதைத் தரிசித்து இன்புறலாம்.
 • சுவாமி சந்நிதிக்கு முன்புள்ள இரு துவாரபாலகர்களுள் தென்புறமுள்ள வடிவம் சற்றுத் தலையைச் சாய்த்து நந்தியை விலகியிருக்குமாறு கட்டளையிடுவதுபோலக் காட்சித்தருவது கண்டு மகிழத்தக்கது.
 • மூலவர் சுயம்பு மூர்த்தி-மண்புற்று; இதன் மீது சார்த்தப்பட்டிருக்கும் குவளைக்குத்தான் நாடொறும் அபிஷேகம் நடைபெறுகின்றது.
 • மூவர் திருப்பதிகங்கள் பளிங்குக் கற்களில் பதிக்கப்பட்டுள்ளன.
 • தேரடியில் நின்று தரிசித்த நந்தனாருக்கு, அத்தேரடியைப் புதுபித்துக் கோயில் கட்டப்பட்டுள்ளன.
 • கல்வெட்டில் இவ்விறைவன், "சிவலோகமுடைய நாயனார் " என்று குறிக்கப்படுகின்றார்.
 • இத்தலத்துக் கல்வெட்டுக்களில் இறைவனுடைய திருமஞ்சனத்திற்கும், திருப்பள்ளியெழுச்சிக்கும், பூமாலைகள் கட்டிச்சார்த்துதற்கும் நிலம்விடப்பட்ட செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன.
 • இத்தலத்திற்கு பக்கத்தில் ஏயர்கோனின் அவதாரத் தலமாகிய "பெருமங்கலம் " உள்ளது.
...திருசிற்றம்பலம்...

திருப்புன்கூர் அருகில் உள்ள சிவாலயங்கள்

 • திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.11 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • நீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.66 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.00 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருக்குரக்குக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.17 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.37 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருஅன்னியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.47 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.06 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருவாழ்கொளிபுத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.33 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.84 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருகோலக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.41 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.