ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது. பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூருகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை ஆகும். சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்து விடுகிறார். காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் பார்வதியை சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது. சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு நலன் பெற்றனர்.