இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு.
சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலைச் சுற்றி நான்கு தேரோடும் வீதிகள் உள்ளன. கோவில் உள்ளே நான்கு பிரகாரங்கள் இருக்கின்றன. இந்த ஆலயத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் இராஜ கோபுரங்கள் உண்டு. வெளிப் பிரகாரத்திலிருந்து உள்ளே செல்ல இரு கூடகோபுரங்கள் இருக்கின்றன.சூரியனும் சந்திரனும் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து அக்காலத்து சோழ மன்னர்கள் ஆதித்திய சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் பல தானங்களைச் இக்கோவிலுக்கு செய்திருப்பது தெரிய வருகிறது. ஆதிசிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் திருவெண்காடு ஸ்தலத்திற்கு உண்டு. மூலவர் சுயம்பு வடிவானவர். இங்கும் சிதம்பரம் போன்றெ நடராஜர் சபை, ஸ்படிக லிங்கம், ரகசியம் அமைந்துள்ளது. ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் 4 முறை அபிஷேகமும் நடராஜருக்கு வருடத்திற்கு 6 முறையும் அபிஷேகம் நடைபெறுகின்றன. மேலும் இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும், காளி சந்நிதியும் மிகவும் பிரசித்தி பெற்றவை. துர்க்கை அம்மனின் உருவச் சிற்பமும், காளிதேவியின் உருவச் சிற்பமும் மிகுந்த கலை அழகுடன் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதே போன்று இங்குள்ள நடராஜ மூர்த்தியும் மிகுந்த கலை அழகு கொண்டது. சிதம்பரத்தில் உள்ளதைப் போன்றே இங்கும் நடராஜர் சபைக்கு அருகில் மஹாவிஷ்னுவின் சந்நிதி இருக்கிறது.