உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த ஊழிக் காலத்தில், சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தைத் தோணியாக அமைத்து, உமதேவியுடன் அதில் புறப்பட்டார். தோணி சீர்காழி வந்த போது எல்லா இடமும் அழிந்தும் இவ்விடம் மட்டும் அழியாமல் இருக்கக் கண்டு இதுவே மூலத்தலம் என்று உமாதேவியிடம் கூறி இங்கு தங்கினார். சிவன் தோணியை இயக்கி வந்ததால் இறைவனுக்கு தோணியப்பர் என்று பெயர் ஏற்பட்டது. பிரம்மா இறைவன் சிவபெருமானை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை ஆரம்பித்ததால் சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும், சட்டைநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.