HolyIndia.Org
Holy India Org Add New Temple

ஸ்ரீரங்கப்பட்டணம்


இறைவன்ரங்கநாதர்
இறைவிரங்கநாயகி
தீர்த்தம்காவிரி
கிராமம்/நகரம்ஸ்ரீரங்கப்பட்டணம்
மாவட்டம் மாண்டியா
மாநிலம் கர்நாடகா

வரலாறு : சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர், தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது இத்தலம் வந்தார். பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். சுவாமி அவருக்கு சயன கோலத்தில் காட்சி தந்தார். பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டினார். அத்தலத்தில் ஒரு புற்றின் மத்தியில் தனது வடிவம் இருப்பதாகவும், அச்சிலையை பிரதிஷ்டை செய்யும்படியும் கூறினார். கவுதமரும் புற்றில் இருந்து பெருமாளைக் கண்டெடுத்து "ரங்கநாதர்' என திருநாமமிட்டு, பிரதிஷ்டை செய்தார். பிரம்மா இங்கு "பிரம்மானந்த விமானத்தை' அமைத்தார்.


திருவிழா : வைகாசி பவுர்ணமியில் கருட சேவை, ஆனி சித்திரை நட்சத்திரத்தில் சுதர்சனர் ஜென்ம நட்சத்திர பூஜை, ஆடியில் ஊஞ்சல் உற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, தை அமாவாசையன்று கருட ஜெயந்தி, தைப்பொங்கல், ரதசப்தமி.
சிறப்பு : இத்தலத்து பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : மூலவரின் மேல் உள்ள விமானம் பிரம்மானந்த விமானம் எனப்படுகிறது.

காவிரி பாயும் வழியில், அதன் மத்தியில் தீவு போல அமைந்த மூன்று தலங்களில் பெருமாள், ரங்கநாதராக காட்சி தருகிறார். அதில் இது முதல் தலம் என்பதால் இதனை, "ஆதிரங்கம்' என்கிறார்கள். இங்கிருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ள ஷிவனசமுத்திரம் கோயில் "மத்திரங்கம்' (சாம்ராஜா நகர் மாவட்டம்), திருச்சி ஸ்ரீரங்கம் "அந்திரங்கம்' என்றழைக்கப்படுகிறது.

பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், சுதர்சனர், கஜேந்திர வரதர், வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் சன்னதிகள் உள்ளன.

சன்னதி முகப்பில் "சதுர்விம்சதி கம்பம்' என்னும் இரண்டு தூண்களில் பெருமாளின் பிரதானமான 24 வடிவங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.


பிரார்த்தனை : அறியாமல் செய்த பாவம் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தல சிறப்பு : பெருமாளுடன் காவிரி: ரங்கநாதர் யோக சயனத்தில் காட்சி தருகிறார். பூலோகத்திலுள்ள புண்ணிய நதிகள் தங்களிடம் சேர்ந்த பாவங்களை, ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி போக்கிக் கொள்கின்றன. பாவங்கள் தன்னில் கரைந்ததால், காவிரி கோர வடிவம் பெற்றாள். தனது பாவம் நீங்க இத்தலத்தில் பெருமாளை பூஜித்தாள். சுவாமி அவளுக்கு காட்சி தந்து பாவ விமோசனம் கொடுத்தார். மேலும், தனது திருப்பாத தரிசனத்தை அவளுக்கு நிரந்தரமாக தரும் வகையில், தன் காலடியில் இருக்க அனுமதித்தார். எனவே, இங்கு கையில் மலர் வைத்தபடி காவிரி அமர்ந்திருக்கிறாள். ஆடிப்பெருக்கன்று சுவாமி காவிரிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமி சார்பில் புடவை, அரிசி, வெல்லம், வளையல், மஞ்சள், குங்குமம், பூ ஆகிய மங்கலப்பொருட்கள் நதியில் விடப்படுகிறது. காவிரி, தன் பாவத்தை போக்கியதற்கு நன்றிக்கடனாக இவ்விடத்தில் மட்டும் ரங்கநாதருக்கு மாலையிட்டதுபோல பிரிந்து ஓடுகிறது. எனவே இக்கோயில் தீவின் மத்தியில் அமைந்திருக்கிறது. ரங்கநாதர் பள்ளிகொண்ட தலம் என்பதால் ஊர், "ஸ்ரீரங்கப்பட்டணம்' என்று அழைக்கப்படுகிறது.

ஆதி ரங்கம்: ரங்கநாதருடன் ஸ்ரீதேவியோ, பூதேவியோ, நாபிக்கமலத்தில் பிரம்மாவோ இல்லை. பாதத்திற்கு நேரே கவுதமர் நிற்கிறார். கவுதமருக்கு, பெருமாள் காட்சி தந்த நிகழ்ச்சி சித்திரை மாத வளர்பிறை சப்தமியன்று, "ரங்க ஜெயந்தி' விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி ரத்தின கிரீடம் அணிந்து உலா செல்கிறார். இந்நாளிலும், கன்னட வருடப்பிறப்பு, தீபாவளி திருவிழாக்களில் மட்டுமே மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. காவிரி பாயும் வழியில், அதன் மத்தியில் தீவு போல அமைந்த மூன்று தலங்களில் பெருமாள், ரங்கநாதராக காட்சி தருகிறார். அதில் இது முதல் தலம் என்பதால் இதனை, "ஆதிரங்கம்' என்கிறார்கள். இங்கிருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ள ஷிவனசமுத்திரம் கோயில் "மத்திரங்கம்' (சாம்ராஜா நகர் மாவட்டம்), திருச்சி ஸ்ரீரங்கம் "அந்திரங்கம்' என்றழைக்கப்படுகிறது.

மகரசங்கராந்திக்கு சொர்க்கவாசல்: பெருமாள் தலங்களில் மார்கழி வைகுண்ட ஏகாதசியன்று, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால் இங்கு ரங்கநாதர், மகரசங்கராந்தியன்று (பொங்கல்) மாலையில் சொர்க்கவாசல் கடக்கிறார். இவ்விழா 9 நாட்கள் நடக்கிறது. அன்று மூலவர் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் காட்சி தருகிறார். மறுநாள் தேரோட்டம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியன்று விசேஷ பூஜை மட்டும் நடக்கிறது.தை ரதசப்தமியை ஒட்டியும் ஒன்பது நாள் விழா நடத்தப்படுகிறது. விழாவின் ஏழாம் நாள் சூரிய உதய நேரத்தில், பெருமாள் "சூரியமண்டலம்' என்னும் வாகனத்தில் எழுந்தருளி, பின்பு தேரில் புறப்பாடாகிறார். இவ்வாறு ஒரே மாதத்தில் இங்கு இரண்டு பிரம்மோற்ஸவம் நடப்பது விசேஷம்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீரங்கப்பட்டணம்,,- 571 438. மான்டியா மாவட்டம். கர்நாடகா மாநிலம்.