HolyIndia.Org
Holy India Org Add New Temple

வீராவாடி


இறைவன்அகோர வீரபத்திர்
இறைவிபத்ரகாளி
தீர்த்தம்அரசலாறு
புராண பெயர்வீராவடி
கிராமம்/நகரம்வீராவாடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : அம்பன், அம்பாசுரன் என்னும் இரு அசுர சகோதரர்களின் தொந்தரவிற்கு ஆளான தேவர்கள், தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் அசுரர்களை அழிக்க, பார்வதி, மகாவிஷ்ணு இருவரையும் அனுப்பினார். மகாவிஷ்ணு வயோதிகர் வடிவம் எடுத்தும், . பார்வதி அவரது மகள் போலவும் அசுரர்களின் இருப்பிடம் வந்தனர்.அம்பன் பார்வதியின் அழகில் மயங்கி, அவளை மணந்து கொள்ள விரும்பி, முதியவரிடம் பெண் கேட்டான். அம்பாசுரனும் அவளை மணக்க விரும்பினான். இதைப் பயன்படுத்திக் கொண்ட மகாவிஷ்ணு, ""உங்களில் யார் சக்தி மிக்கவரோ அவரே என் பெண்ணை மணந்து கொள்ளட்டும்,'' என்றார். இதனால் சகோதரர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.  அம்பாசுரனை அம்பன் கொன்று விட்டான்.அப்போது பார்வதி காளியாக உருவெடுத்து அம்பனையும் வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) ஏற்பட்டது. இதனால் சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி, பிரம்மஹத்தியை விரட்டியடித்தார். அவர் "அகோர வீரபத்திரர்' என்று பெயர் பெற்றார். இந்த நிகழ்வின் அடிப்படையில், இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவபெருமானும் மகாகாளர் என்ற பெயரில் இங்கு தங்கியுள்ளார்.


திருவிழா : சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம்
சிறப்பு : வீரபத்திரரின் கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளது. கிரீடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. தந்தை, மகள் வழிபாட்டு தலம்.
திறக்கும் நேரம் : காலை 9- 11 மணி. பிற நேரங்களில் அர்ச்சகருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து சுவாமியை தரிசிக்கலாம்.
பொது தகவல் : இத்தலவிநாயகர் வரசித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3 நிலைகளைக்கொண்டது.

பூந்தோட்டம் அருகில் பிரபல திருமண ஸ்தலமான திருவீழிமிழலை, மாப்பிள்ளை சுவாமி கோயில் மற்றும் கூத்தனூர் சரஸ்வதி கோயில், மனிதமுகம் கொண்ட விநாயகர் சிலை உள்ளதும், அமாவாசை தலமுமான செதலபதி சிவாலயமும் உள்ளன.


பிரார்த்தனை : பெண்கள் பாதுகாப்புடன் இருக்கவும், திருமணத்தடை, செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தல வீரபத்திரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறியதும் பெண்கள் தந்தையுடன் வந்து செவ்வாய்க்கிழமைகளில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை, வில்வ இலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். அஷ்டமியுடன் சேர்ந்து வரும் செவ்வாய்க்கிழமைகளில் சுவாமிக்கு எட்டு வகை மலர் அடங்கிய மாலை அணிவித்து பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
தல சிறப்பு : ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்த கோயில் இது. வீரபத்திரரின் கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளது. கிரீடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. அசுரனை அழித்த காளி எட்டு கைகளுடன் உக்கிரமாக காட்சியளிக்கிறாள்.அம்பாள் பர்வதராஜனின் மகளாகப் பிறந்த போது, அவளைத் திருமணம் முடிக்கச் செல்லும்முன்பு சிவன், கங்காதேவியை வீரபத்திரரின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார். கங்காதேவி தங்கியிருந்த தலம் இங்கிருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. "ருத்ரகங்கை' என்றழைக்கப்படும் இத்தலத்தில் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருளுகிறார். பக்தர்கள், ஆபத்சகாயேஸ்வரரை வணங்கிவிட்டு, அதன்பின்பு இத்தலத்திலுள்ள வீரபத்திரரை வழிபடுவது மரபாக உள்ளது.

தந்தை மகள் பிரார்த்தனை: சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கும், முன்மண்டபத்திலுள்ள மகாகாளருக்கும் 4 கால பூஜை நடக்கிறது. அசுர வதத்திற்காக இங்கு வந்த பெருமாள், கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தருகிறார். பார்வதி மற்றும் லட்சுமியுடன் சீனிவாசர் சன்னதியும் உள்ளது. வீரபத்திரர் தங்கிய தலம் என்பதால் இவ்வூர், "வீராவடி' (வீரபத்திரர் அடி பதித்த இடம்) என்று அழைக்கப்பட்டு "வீராவாடி' என மருவியது. கோயில் அருகில் ஓடும் அரசலாறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடுவது விசேஷம். திருமணத்தடை, செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தந்தையுடன் வந்து செவ்வாய்க்கிழமைகளில் வீரபத்திரருக்கு வெற்றிலை, வில்வ இலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். அஷ்டமியுடன் சேர்ந்து வரும் செவ்வாய்க்கிழமைகளில் சுவாமிக்கு எட்டு வகை மலர் அடங்கிய மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர்.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், வீராவாடி, ருத்ரகங்கை - 609 503. பூந்தோட்டம் போஸ்ட், திருவாரூர் மாவட்டம்.