HolyIndia.Org
Holy India Org Add New Temple

விருத்தாசலம் தேவாரம்

1-1/119

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட 
தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங் 
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு 
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.


2-1/120

தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன் 
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம் 
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண் 
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.


3-1/121

விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண் 
டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம் 
களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு 
முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.


4-1/122

சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா 
நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார் 
அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும் 
முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.


5-1/123

அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார் 
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில் 
மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு 
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.


6-1/124

ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற் 
கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில் 
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார் 
மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.


7-1/125

தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (மூ)முடிய 
மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில் 
விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை 
முழவோடிசை (மூமூ)நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே. 
(மூ) முடியர் என்றும் பாடம். 
(மூமூ) நடமுன் செயும் என்றும் பாடம்.


8-1/126

செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன் 
கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில் 
மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா (மூ) 
முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே. 
(மூ) குறை யில்லா என்றும் பாடம்.


9-1/127

இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய 
செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன் 
புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே 
முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.


10-1/128

அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான் 
மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார் 
கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி 
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.


11-1/129

முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப் 
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த 
நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும் 
பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.


12-1/570

தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர் 
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும் 
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும் 
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே.


13-1/571

பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார் 
எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு 
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள் 
முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே.


14-1/572

வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி 
நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில் 
சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர் 
மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே.


15-1/573

பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர் 
நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும் 
நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும் 
ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே.


16-1/574

வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச் 
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத் 
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ 
முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே.


17-1/575

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி 
சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும் 
அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு 
மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.


18-1/576

மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும் 
இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த 
புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள் 
முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே.


19-1/577

ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக் 
கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால் 
ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும் 
மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே.


20-1/578

உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை 
நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின் 
மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட 
முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே.


விருத்தாசலம் - தலத்தின் சிறப்பு - விருத்தாசலம் தேவாரம் - விருத்தாசலம் விருத்தாசலேசர் -