HolyIndia.Org
Holy India Org Add New Temple

வளையாத்தூர்


இறைவன்வளவநாதீஸ்வரர்
இறைவிபெரியநாயகி
தல மரம்வன்னி மரம்
தீர்த்தம்சிவதீர்த்தம்
புராண பெயர்சிவபாதநல்லூர்
கிராமம்/நகரம்வளையாத்தூர்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த மன்னர் ஒருவர், தீவிர சிவபக்தராக இருந்தார். மக்கள் சிறப்பாக வாழவும், விவசாய நிலம் செழித்து வளரவும் அருள்புரியும் சிவனுக்கு, தம் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஆனால், அவருக்கு எங்கு, எப்படி கோயில் அமைப்பதெனத் தெரியவில்லை. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், இந்த இடத்தை குறிப்பால் உணர்த்தினர். அதன்படி, மன்னர் இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினார். இங்கு அருளும் சிவன் மக்களுக்கு வேண்டும் வளத்தை தந்தருளியதால் "வளவநாதீஸ்வரர்' என்றே பெயர் பெற்றார். மக்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப வளைந்து கொடுத்து அருள் செய்பவர் என்பதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். பல்லவர், சோழர், சம்புவராயர், நாயக்கர் மற்றும் விஜயநகரப் பேரரசர்களால் திருப்பணி செய்யப்பட்ட புராதனமான கோயில் இது.

திருவிழா : அன்னாபிஷேகம், ஆருத்ராதரிசனம், திருக்கார்த்திகை, சிவராத்திரி.
சிறப்பு : சிவன் சன்னதி முகப்பில் நின்ற விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் சண்முகர் உள்ளனர். இந்த முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி இருப்பது விசேஷமான அமைப்பு. திருக்கார்த்திகையன்று கோயிலில் லட்சதீபம் ஏற்றுவர்.இங்குள்ள சப்தகன்னியரின் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பான அமைப்பு.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் அர்ச்சகரை அழைத்து வந்து சுவாமியை தரிசிக்கலாம்.
பொது தகவல் : கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் சூரியன், பைரவர், விநாயகர், சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்கள் உள்ளன.

பிரார்த்தனை : எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேற பக்தர்கள் இவளுக்கு பாலபிஷேகம் செய்வித்து வழிபடுகிறார்கள்.
தல சிறப்பு : கிரகதோஷ நிவர்த்தி:வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில் காட்சியளிக்கிறார். இங்கு சிவன் ஒன்பது நிலைகளைக் கடந்து, நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர். இதனால், எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு நிவர்த்திக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.

நெற்றிக்கண் அம்பிகை:சிவபெருமான் சூரியன், சந்திரன், அக்னி என மூவரையும் கண்களாகக் கொண்டவர். சிவனின் சக்தி வடிவமே அம்பிகை என்பதால், அவளும் முக்கண் உடையவள் ஆகிறாள். இதை உணர்த்தும் விதமாக அம்பிகை இக்கோயிலில் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள்.சிவராத்திரியன்று இரவில் இவளுக்கு பூஜையும் உண்டு.பிரார்த்தனை நிறைவேற பக்தர்கள் இவளுக்கு பாலபிஷேகம் செய்வித்து வழிபடுகிறார்கள்.இவளது நான்கு கைகளிலுள்ள சுண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்திருக்கிறாள். இங்குள்ள சந்திரசேகரர் சுண்டு விரல்கள் இரண்டிலும் மோதிரம் அணிந்தபடி காட்சி தருகிறார்.சிவன் சன்னதி எதிரே வாசல் கிடையாது. கல் ஜன்னல் மட்டுமே உள்ளது. பிரதான வாசல் அம்பாள் சன்னதி எதிரே அமைந்துள்ளதால், இக்கோயிலில் நுழைந்ததும் முதலில் அம்பாளைத்தான் தரிசனம் செய்கின்றனர்.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு வளவநாதீஸ்வரர் திருக்கோயில், வளையாத்தூர், வேலூர் மாவட்டம்.