HolyIndia.Org
Holy India Org Add New Temple

மும்பை


இறைவன்மும்பாதேவி
புராண பெயர்முங்கா
கிராமம்/நகரம்மும்பை
மாவட்டம் மும்பை
மாநிலம் மகாராஷ்டிரா

வரலாறு : ஒரு காலத்தில் மும்பையைச் சுற்றியிருந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இயற்கை சீற்றங்களால் மிகவும் அல்லல்பட்டனர். அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள இறைவனை வேண்டினர்.

பராசக்தியான அம்பிகை அவர்களுக்கு அருள்புரிந்தார். இயற்கைச் சீற்றம் தணிந்தது. முங்கா' என்ற மீனவ இனத்தினர் அம்பிகைக்கு கோயில் எழுப்பியதாக கூறப்படுகிறது.

மற்றொரு கதையின்படி முங்கா என்பவர்கள் மீனவ பெண்கள் என்றும், தங்கள் கணவன்மார் கடலுக்குசென்றுவிட்டு நல்லபடியாக திரும்ப அம்பிகையை வேண்டியதாகவும், முங்கா என்ற பெயர் நாளடைவில் திரிந்து மும்பா என மாறிவிட்டதாகவும் தெரியவருகிறது. இந்த தேவியின் உண்மையான பெயர் முங்கா தேவி என இருந்தது. காலப்போக்கில் மும்பா தேவி என மாறிவிட்டது.

சமஸ்கிருத புராணங்களில் மும்பாதேவியின் வரலாறு சொல்லப்பட்டுள்ளது. மும்பார்க் என்ற அசுரன் இந்த பகுதியில் சக்திமிக்கவனாக இருந்தான். அவன் பிரம்மனை வணங்கி சாகா வரம் பெற்றான். அதன்பிறகு பூலோகத்தில் வசித்த மக்களையும் தேவலோக தேவர்களையும் துன்பப்படுத்தி வந்தான். அனைவரும் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.

விஷ்ணுவும், சிவனும் இணைந்து அந்த அரக்கனை அழிக்க திட்டமிட்டனர். தங்கள் உடலிலிருந்து ஒரு தேவியை உருவாக்கினர். அவளுக்கு மும்பார்க்கை கொன்றுவிட உத்தரவிட்டனர். அதன்படியே அம்பிகை மும்பார்க்கை கொன்று அனைவரையும் பாதுகாத்தாள். இதன் காரணமாக இந்த தேவி மும்பாதேவி என அழைக்கப்பட்டாள்.


திருவிழா : இங்கு நவராத்திரி முக்கிய விழா. முதல் நாள் காலையில் அம்பிகையின் சன்னதி முன் மண்ணால் செய்யப் பட்ட விளக்கை வைக்கின்றனர். நவதானியங்கள் மற்றும் அரிசியை சன்னதி முன் பரப்புகின்றனர். வெண்கலபானை ஒன்றை வைத்து அதில் தண்ணீர் நிரப்புகின்றனர். அந்தப் பானைக்குள் ஐந்து வெற்றிலைகள், பாக்கு, செம்புத்தகடு, ஒரு காய்ந்த பேரிச்சம்பழம் ஆகியவற்றை போடுகின்றனர். இந்த அமைப்பை காட் ஸ்தாபனா' என்கின்றனர். நம்மூர் கோயில்களில் கும்பாபிஷேகத்தின் போது செய்யப்படும் கடஸ்தாபனம் போன்று சற்று வித்தியாசங்களுடன் இவ்வழிபாடு உள்ளது. மிகவும் கவனத்துடன் தரையில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. 36 மணி நேரத்தில் நவதானியங்கள் முளைத்து விடுகின்றன. நவராத்திரியின் முதல் நாள் இரவில் மராத்திய இசைக்கலைஞர்கள் குழல் மற்றும் சாவ்கதா' என்ற டிரம்களால் இசை எழுப்புகின்றனர். ஏழாம் நாள் அன்று கோயில் முன் சதுர வடிவ குழி தோண்டி, சுற்றிலும் செங்கற்களை அடுக்கி அழகாக கட்டி, அதில் பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய்களை போட்டு நெருப்பு பற்ற வைக்கின்றனர். குறைந்த அளவு தீயில் வெண்ணெய் ஊற்றி எரிக்கின்றனர். இதில் கிடைக்கும் சாம்பலை ஆண்களும், பெண்களும் தங்கள் புருவத்தில் கண் போல இட்டுக் கொள்கின்றனர். பத்தாம் நாள் தசரா திருநாளில் அம்மன் முன் ஆறு அங்குல உயரத்திற்கு வளர்ந்துள்ள தானியச் செடிகள் வேரோடு பிடுங்கப்பட்டு, அம்மனுக்கு படைக்கப்படுகிறது. இதில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்ட சில பக்தர்களுக்கு தருகிறார்கள். பெண்கள் இதை தலையில் சூடிக் கொள்கிறார்கள். ஆண்கள் தலைப்பாகை கட்டி அதில் செருகிக் கொள்கிறார்கள்.
சிறப்பு : மும்பை நகரத்தின் காவல் தெய்வமாக ரிஷப வாகனத்தில் இவள் காட்சி தருகிறாள். அம்பிகையின் முன்பு இரண்டு விளக்குத் தூண்கள் உள்ளன. ஒன்று செங்கலாலும், மற்றொன்று கல்லாலும் ஆனது. கருவறை வெள்ளை மார்பிள் கற்களால் அமைக்கப்பட்டது. அம்பிகை ரிஷபவாகனத்தில் அமர்ந்திருக்கிறாள். மும்பாதேவிக்கு மராத்திய பெண்கள் அணியும் ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : முங்கா என்ற பெயர் பம்பாயாக மாறி பிறகு மும்பை என திருத்தப்பட்டது.

மும்பாதேவி கோயிலில் அன்னபூரணிக்கு தனி சன்னதி இருக்கிறது.

மீனவர்கள் இந்தக் கோயிலை எழுப்பியதாக தல வரலாறு கூறுகிறது.


பிரார்த்தனை : இங்கு புதுமணத் தம்பதிகள் தங்கள் கோரிக்கைகளுடன் வருகின்றனர்.

வாழ்நாள் முழுவதும் பிரியாமல் துஷ்ட சக்திகளிடம் சிக்கிக் கொள்ளாமல் தீர்க்காயுளுடன் வாழவேண்டும் என அம்பிகையிடம் வேண்டுகிறார்கள்.


நேர்த்திக்கடன் : அம்பிகைக்கு ஏதேனும் ஒரு நகையை காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.
தல சிறப்பு : மும்பை ஒரு தீவு பகுதியாகும். ஒருகாலத்தில் மும்பாதேவி கோயில் எஸ்பிளநேடு தீவிலுள்ள பாசிடாலோ என்ற இடத்தில் இருந்தது.

ஒருகாலத்தில் அப்பகுதியில் இருந்த வீடுகள் ஆட்சியாளர்களால் அகற்றப்பட்டன. எனவே கோயிலை கவனிக்க ஆளில்லாமல் போனது. அதன்பிறகு மீனவ மக்கள் ஒன்றுசேர்ந்து புதிய கோயில் அமைத்துத் தரும்படி அரசிடம் கோரிக்கைவிட்டனர். அரசாங்கமும் புதிய இடத்தில் கோயில் கட்டித்தந்தது.

அன்னபூரணி: இந்தக் கோயிலில் அன்னபூரணிக்கு தனி சன்னதி இருக்கிறது. செவ்வாய்க் கிழமைகளில் அதிகக்கூட்டம் வரும்.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு மும்பாதேவி கோயில் மும்பை -400002 மகாராஷ்டிரா மாநிலம்