மருதமலை
| இறைவன் | தண்டாயுதபாணி (மருதாசலமூர்த்தி) |
| இறைவி | வள்ளி, தெய்வானை |
| தல மரம் | மருதமரம் |
| தீர்த்தம் | மருது சுனை |
| புராண பெயர் | மருதவரை |
| கிராமம்/நகரம் | மருதமலை |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
வரலாறு : பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை, "பாம்பு வைத்தியர்' என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர், நாகரத்தின பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்டைமுனிவர் அவருக்கு காட்சி தந்து, ""உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையே!'' என்றார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச்சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்றமுடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில்ஈடுபட்டார். முருகன் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார்.பக்தர்கள் இவரை, "மருதமலை மாமணி' என்றுசெல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
திருவிழா : வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடக்கிறது, தைப்பூசத்தை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. பூசத்தன்று காலையில் திருக்கல்யாணம், மாலையில் தேர்த்திருவிழா நடக்கும். அன்று சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருள்வார்.தினமும் மாலையில் தங்க ரதத்தில் சுவாமி வலம் வருகிறார்
சிறப்பு : இங்கு விநாயகர், முருகன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள்.
திறக்கும் நேரம் : காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : சுமார் 837 படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. வரதராஜப் பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது.பாம்பாட்டிச்சித்தர் சன்னதி செல்லும் வழியில் சப்தகன்னியர் சன்னதி உள்ளது. ஆடிப்பெருக்கின்போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் நடுவே இடும்பன் சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரே புலி வாகனம் உள்ளது.
பிரார்த்தனை : திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் விநாயகர், முருகனை வேண்டி மரத்தில் மாங்கல்யக்கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.
பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சி கடிபட்டவர்கள் இந்த விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாவதாக நம்பிக்கை. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விபூதியை உடலில் பூசிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : மன நிம்மதி வேண்டுபவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள் பாம்பாட்டி சித்தர் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி, வெண்ணிற மலர், இனிப்பான நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.
பாடியவர்கள் : அருணகிரிநாதர்
முகவரி : அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை - 641046 கோயம்புத்தூர் மாவட்டம்