HolyIndia.Org
Holy India Org Add New Temple

பழநி

பழநி_இடும்பன் -
இறைவன்திருஆவினன்குடி மூலவர்-குழந்தை வேலாயுதர். மலைக்கோயில் மூலவர் - தண்டாயுதபாணி.நவபாஷாண மூர்த்தி
தல மரம்நெல்லி மரம்
தீர்த்தம்சண்முக நதி
புராண பெயர்திருஆவினன்குடி
கிராமம்/நகரம்பழநி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளை பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், "குழந்தை வேலாயுதர்' என்று பெயர் பெற்றார்.பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், "பழம் நீ' (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், "பழநி' என மருவியது.



திருவிழா : வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.
சிறப்பு : இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.
திறக்கும் நேரம் : திருஆவினன்குடி, மலைக்கோயில், பெரியநாயகி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.
பொது தகவல் : திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும்.தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும் உண்டு.மலையே மருந்தாக அமைந்த மலை.பழநிக்கு ஆவினன்குடி,தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு


பிரார்த்தனை : குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு அதிகளவில் முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்


நேர்த்திக்கடன் : முருகனுக்கு காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்து, முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன்
தல சிறப்பு : தண்டாயுதபாணி சிறப்பு: விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடஅடைக்கலமாவார்கள்.இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகன். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுதபாணி' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார். காலப்போக்கில் இவரே பிரபலமாகிவிட்டார்."தண்டம்' என்றால் "கோல்' அல்லது "அபராதம்' என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது. "இவ்வுலக வாழ்வு நிலையற்றது' என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார். மறுப்பவர்களுக்கு "சோதனைகள்' என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்க முடியாதவர்கள், அவரது வழிக்கே சென்று விடுகின்றனர்.

சித்தர் போகர் : இவர் இத்தலத்து மூலவர் சிலையை செய்து பிரதிஷ்டை செய்தவர்.சித்தர் போகர் அருள் விளையாடல்கள் நிகழ்ந்த இடம்தான் பழநி. இவர் தம் மாணாக்கர் புலிப்பாணியுடன் தம்மை நாடிவந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன் ஆன்மிக உணர்வையும் ஊட்டினார்.பழநி மலை மீதுள்ள தண்டாயுதபாணி திருக்கோலம் போகரின் அருட்கொடையாகும்.சித்தர் போகரின் சமாதி இக்கோயிலுக்குள்ளேயே உள்ளது.

முருகன் கையில் அருணகிரியார்!:மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான். அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன்காட்சி தருகிறார்.

தம்பியை காத்த அண்ணன்: சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரை காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார். இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். "சர்ப்பவிநாயகர்' என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் "பாதவிநாயகர்' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.

மூன்றாம் படை வீடு: முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே "மூன்றாம் படை வீடு' ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ., துõரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
பாடியவர்கள் : அருணகிரிநாதர் திருப்புகழ் , நக்கீரர்

திருப்புகழ்

 

திமிர வுததி யனைய நரகசெனன மதனில் விடுவாயேல் -

செவிடு குருடு வடிவு குறைவுசிறிது மிடியு மணுகாதே;

அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் வரவேநின் -

அருள தருளி யெனையு மனதொடடிமை கொளவும் வரவேணும்;

சமர முகவெ லசுரர் தமதுதலைக ளுருள மிகவேநீள் -

சலதி யலற நெடிய பதலைதகர அயிலை விடுவோனே;

வெமர வணையி லினிது துயிலும்விழிகள் நளினன் மருகோனே - 

மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் பெருமாளே.

-அருணகிரிநாதர் 


முகவரி : அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி - 624 601. திண்டுக்கல் மாவட்டம்