HolyIndia.Org
Holy India Org Add New Temple

பரிக்கல்


இறைவன்லட்சுமிநரசிம்மர்
இறைவிகனகவல்லி
தீர்த்தம்நாககூபம்
புராண பெயர்பரகலா
கிராமம்/நகரம்பரிக்கல்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு :

வசந்தராஜன் என்ற மன்னன் நரசிம்மரின் மீது மிகுந்த பக்தி கொண்டவன். இவன் நரசிம்மருக்கு கோயில் கட்ட எண்ணி, தன் குருவான வாமதேவ ரிஷியை கொண்டு மூன்று இரவுகள் தொடர்ந்து யாகங்கள் செய்ய ஏற்பாடு செய்தான். இதற்காக தன் சிற்றரசர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பினான். வசந்தராஜனின் அழைப்பின் பேரில் குறிப்பிட்ட இடத்திற்கு சிற்றரசர்கள் வந்தனர். யாகம் தொடங்கும் நேரத்தில் பரிகலாசூரன் என்ற அசுரன், யாகத்தை தடுக்க தன் படையுடன் புறப்பட்டான். அசுரன் வருவதை அறிந்த குரு, வசந்த ராஜன் கையில் கங்கணம் கட்டி, "அராக்ஷ்ர அமிர்தாக்ஷ்ர' என்று தொடங்கும் மந்திரத்தை உபதேசத்து, அருகில் உள்ள புதறில் மறைந்து கொள்ள செய்தார். இருந்தாலும் அசுரன், வசந்தராஜனை கோடாரியால் தாக்கினான். இதனால் கோபமடைந்த நரசிம்மர், தன் பக்தனை காப்பாற்ற உக்கிர நரசிம்மராக தோன்றி பரிகலாசூரனை அழித்து வசந்தராஜனுக்கு காட்சி கொடுத்தார். பரிகலாசூரன் என்ற அசுரனை அழித்ததால், இத்தலம் பரிக்கல் எனப்படுகிறது.  சாந்த நரசிம்மர்: தனக்கு தரிசனம் கொடுத்த உக்கிர நரசிம்மரிடம்,""பரந்தாமா! தாங்கள் எப்போதும் இங்கிருந்து உன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்க்க சாந்த நரசிம்மராக அருள வேண்டும்,''என வேண்டினான். அதன்படி வசந்தராஜன் கட்டிய கோயிலுக்கு தேவசிற்பியான விஸ்வகர்மா லட்சுமி நரசிம்மர் சிலை செய்து கொடுத்தார். அதை குரு வாமதேவ ரிஷி பிரதிஷ்டை செய்தார். நரசிம்மரும் லட்சுமி தாயாருடன் இணைந்து சாந்த நரசிம்மராக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். சிலகாலம் இந்த விக்கிரகத்திற்கு சிறப்பான பூஜை செய்யப்பட்டது. காலப்போக்கில் இது சரிவர பராமரிக்கப்படாமல், புற்று மறைத்து விட்டது. 

இவ்வூருக்கு அருகில் அக்ரஹாரத்தில் வாழ்ந்த வாய் பேசமுடியாத ஒருவன் கனவில் தோன்றிய பெருமாள், நரசிம்மர் சிலை புற்றில் மறைந்திருப்பதாகவும், அதை மீண்டும் பிரதிஷ்டை செய்யும்படியும் கூறி மறைந்தார். இதை அவன் ஊர்மக்களிடம் தெரிவித்தான். அதன்படி ஊர்மக்களும் லட்சுமி நரசிம்மரை எடுத்து புதிதாக கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்கள்.

மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனி சன்னதியில் கனகவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன், வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார். பக்தகர்கள் இவருக்குமுன்னால் நெல்லை கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி வழிபாடு செய்கின்றனர். இதனால் தங்கள் கோரிக்கைகள் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே விநாயகர், கோயில் எதிரே கருடன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். ஊரின் வடமேற்கில் சக்கர தீர்த்தம் உள்ளது. 

 


திருவிழா : வைகுண்ட ஏகாதசி
சிறப்பு : பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார்.ஆனால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி மூர்த்தி உண்டு.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்ட கோணம் எனப்படும். நவ கிரக தான்யங்கள் சூரியன் - கோதுமை சந்திரன் - நெல் செவ்வாய்- துவரை புதன் - பச்சைபயறு குரு - கடலை சுக்கிரன்- மொச்சை சனி - எள் ராகு - உளுந்து கேது- கொள்ளு
பிரார்த்தனை : பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு என்று இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.கை கால் ஊனம், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கல்யாணத் தடை உள்ளவர்கள், வழக்கு வம்புகளில் சிக்கி இருப்பவர்கள், பில்லி சூன்யங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு நல்ல தீர்வு கிடைக்கப் பெறுவார்கள்.


நேர்த்திக்கடன் : எண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் இவற்றோடு கூடிய நித்ய அபிசேகங்கள் செய்யலாம். நரசிம்மருக்கு வஸ்திரம் சாத்தலாம். பக்தர்களின் நேர்த்திகடன்களாக மொட்டை போடுதல்,காதுகுத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சணம் ஆகியவை பெருமாளுக்கு இத்தலத்தில் செய்யப்படுகின்றன.தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம்செய்கிறார்கள்.
தல சிறப்பு :

பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார்.ஆனால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி மூர்த்தி உண்டு.இதிலிருந்தே நரசிம்மரின் உக்கிரம் முழுதும் தணிந்து வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் கிடைக்கும் என்பது நிச்சயம்.

வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் ஒரு சேர உள்ளது இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும்.தினம் எள் எண்ணெய் தீபம் ஏற்றி நவதானியங்களை இவர்கள் முன் பரப்பி தங்கள் கோரும் பிரார்த்தனைகளை கையால் எழுதுகிறார்கள்.எல்லா நன்மைகளும் கிடைக்கும்.நவகிரகங்களினால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.

பெருமாள் கிழக்கு பார்த்து உட்கார்ந்துள்ளார். அவரது இடப்பக்கம் தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார்.

இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால் இங்கு பெருமாள் மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.

முஸ்லிம், கிறிஸ்தவர் என்று எல்லா மதத்தினரும் மதவேறுபாடு இல்லாமல் வந்து வழிபடும் சிறப்பு வாய்ந்த தலம்

பெருமாள் பக்கத்திலேயே ஆஞ்சநேயர் இருப்பது மற்றொரு தனிச் சிறப்பு

வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் ஒரு சேர உள்ளது இங்கு சிறப்பு.

ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரி இங்கும் வரதராஜ பெருமாள் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

 


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பரிக்கல் - 607204 விழுப்புரம் மாவட்டம்.