HolyIndia.Org
Holy India Org Add New Temple

படவேடு

படவேடு_யோகராமச்சந்திர_மூர்த்தி -
இறைவன்ரேணுகாம்பாள்
தல மரம்மாமரம்
தீர்த்தம்கமண்டலநதி
கிராமம்/நகரம்படவேடு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாக பிறந்து ஜமதக்னி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள்.

கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலே கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யப்பட்டதால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார். மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டிக் கொண்டு வரும் படி கூற, அவ்வாறே அன்னையின் தலையை பரசுராமர் கொண்டுவந்தார்.

இருப்பினும் "பெற்ற தாயை வெட்டிய கையை வெட்டி விட்டேன்,' என்று கூற முனிவரும், "வரம் கேள்; தருகிறேன்,' என்று பரசுராமரிடம் கூறினார்.தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி கேட்டார்.

முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்து தண்ணீரை தெளிக்க உயிர் பெற்றார்.

இதற்கிடையில் கார்த்தவீரிய அர்ச்சுனன் முனிவரிடம் இருந்த காமதேனுவை கேட்டும் தர மறுத்ததால் அவரைக் கொன்று காமதேனுவை கவர்ந்து செல்கிறான். கணவர் இறந்ததால் ரேணுகாதேவி உடன்கட்டை ஏறுகிறாள். அப்போது மழை பெய்ய கொப்புளங்களுடன் ஆடை இன்றி வேப்பிலை கட்டி மகன் பரசுராமனை சந்தித்தாள். பரசுராமன் வந்து கோபத்துடன் சென்று கார்த்தவீரியனை கொன்று சினத்துடன் திரும்ப,சத்திரிய குலம் முழுவதும் அழிக்க சபதமிடுகிறான்.

பின் சிவபெருமான் வந்து நடந்திருப்பது விதிச் செயல் என்று சமாதானம் செய்தார். பின் ஜமதக்னி முனிவரை உயிரத்தெழ செய்கிறார். அன்னை ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டபடி சிரசு மட்டும் பிரதானமாகக் கொண்டு இப்பூலகில் பூஜைக் கருவாய் விளங்குவதோடு, உடலின் மற்ற பிரிவு முனிவருடன் சொர்க்கத்துக்கு சென்றது. இவ்வாறே அன்னை ரேணுகை இப்பூவுலகில் சிரசை மட்டுமே பிரதானமாக கொண்டு படவேட்டில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.


திருவிழா : ஆடி மாதம் - ஏழு வெள்ளிக் கிழமைகளும் இத்தலத்தில் மிகவும் விசேசமாக இருக்கும். இந்த விசேச நாட்களின் போது மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள். புரட்டாசி மாதம் - நவராத்திரி கொலு ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும். மார்கழி பூஜை, தைமாதம் வெள்ளிக்கிழமைகள் ஆகியவை இத்தலத்தில் சிறப்பான விழா நாட்கள் ஆகும். வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் சுவாமிக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.
சிறப்பு : இங்கு அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது. மற்ற அம்மன் சந்நிதிகளில் குங்குமம்தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு குங்குமத்திற்கு பதில் வெட்டி எடுக்கப்பட்ட மண் பிரசாதமாக தரப்படுகிறது. இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது. பொதுவாக அம்மன் சந்நிதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது.
திறக்கும் நேரம் : காலை 6.40 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : சக்திக்குள் அனைத்தும் அடக்கம் என்பதற்கேற்ப இங்குள்ள மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அரூபமாக அருள்பாலிக்கின்றனர். எனவே, அம்பிகையை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை : அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொள்கின்றனர். விரதமிருந்து இத்தலத்துக்கு வந்து தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்து அதிக பட்சம் 3 அல்லது 5 நாட்களுக்குள் அம்மை இறங்கி விடுகிறது. தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர்.

வேப்பிலை தண்ணீரை தீர்த்தமாக வாங்கிக் குடித்துவிட்டு அம்மனை வணங்கிச் செல்கிறார்கள். மேலும் திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர்.

எந்த வகை நோயானாலும் இங்கு வந்து வழிபட்டால் அம்மனின் அருளால் உடனே குணமடைவதாக இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர்.

குறிப்பாக கண் நோய், கண்பார்வை இல்லாதவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.


நேர்த்திக்கடன் : பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் நேர்த்திகடன்களாக எடைக்கு எடை நாணயம் செலுத்துகிறார்கள்(துலாபாரம்) , நெய்தீபம் ஏற்றுகின்றனர். சிலை கண்ணடக்கம், உருவ வகையறா, மற்றும் புடவை ஆகியவற்றையும் செலுத்துகிறார்கள். வேப்பிலையை மட்டும் உடையாக உடுத்திக் கொண்டு கோயிலை வலம் வருதல், அங்கபிரதட்சணம் செய்தல், மொட்டை அடித்தல், காதுகுத்தல், தொட்டில் கட்டுதல், ஆடு மாடு கோழி காணிக்கை செலுத்தல் ஆகியவை இத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் முக்கியமான நேர்த்திகடன்களாகும். முகத்தில் உள்ள மருக்கள், பருக்கள் ஆகியன நீங்குவதற்காக வெல்லம் மிளகு ஆகியவற்றை செலுத்துகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் பரசுராமருக்கு தொட்டில் கட்டுகின்றனர். கோடிதீபம் ஏற்றுதல் இத்தலத்தில் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.
தல சிறப்பு : பொதுவாக அம்மன் தலங்களில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக மண்மே திருநீராகதரப்படுகிறது.இத்தலத்தில் தரப்படும் மண் விசேசமானது. தானாக தோன்றியாதாகும்.

பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும்.இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (அதாவத ரேணுகாதேவியின் கணவர்)வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில் அவர் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

வருடாவருடம்ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தரப்படுகிறது. பிணி, வயிற்றுவலி ஆகியவை குணமடையவும் குழந்தைவரம் கிடைக்கவும் இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள்.இவ்வாறு அருந்திய சிலதினங்களில் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கருவறைச் சிறப்பு :  இத்திருக்கோயிலின் கருவறையில்வேறெங்குமில்லாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி (சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள்அரூபங்களுடன் எழுந்தருளியுள்ளார்கள்.மேலும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், சுதையிலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது.

மும்மூர்த்திகளுடன் எழுந்தருளியுள்ள அன்னை ரேணுகாதேவியை வழிபட மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் உண்டு.பரசுராமரின் சிலையும் கருவறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மன் இங்கு சுயம்புவாய் எழுந்தருளியிருப்பது முக்கிய சிறப்பம்சம். அதோடு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் உடன் கொண்டு பேருருக் கொண்டு உலகில் சக்தியே எல்லாமென எடுத்துக்காட்டி அருள்புரிந்து வருகிறாள். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும் ஜனாகர்ஷண சக்கரமும் அமைந்துள்ளது சிறப்பாகும். ஞானியர் பலர் தவமிருந்து சித்திகள் பல பெற்றதும்இத்திருத்தலத்தில்தான். 
தொண்டை மண்டலத்து சக்தி தலங்களில் இத்தலம் முக்கியமான ஒன்றாகும்.

ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாம்பாளுக்கும் பிறந்த பரசுராமர் அவதரித்த தலம் இது. இது பரசுராமர் பிறந்த ஷேத்திரம் என்பதால் பரசுராம ஷேத்திரம் என்று இத்தலத்துக்கு பெயர். ஸ்தானத்தில் பரசுராமரின் சிலை தனியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது.

பொதுவாக அம்மன் சந்நிதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது. கணபதி முனிவர் இங்கு யாகம் செய்துள்ளார்.அவர்தான் அம்பாளின் சிறப்பை வெளிக்கொணர்ந்தவர். அழகிய சிற்பங்கள் உள்ள அற்புதமான கோயில் இது.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் , படவேடு. திருவண்ணாமலை மாவட்டம்.