HolyIndia.Org
Holy India Org Add New Temple

நஞ்சன்கூடு


இறைவன்நஞ்சுண்டேஸ்வரர்
இறைவிபார்வதி
தல மரம்வில்வம்
தீர்த்தம்முந்நதி சங்கமம்
கிராமம்/நகரம்நஞ்சன்கூடு
மாவட்டம் மைசூரு
மாநிலம் கர்நாடகா

வரலாறு : விஷத்தின் வடிவமான கேசியன் என்னும் அசுரன், தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். அசுரனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் கபிலா, கவுண்டினி, மணிகர்ணிகை என்னும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இத்தலத்தில் ஒரு யாகம் நடத்தும்படியும், அப்போது அங்கு வரும் அசுரனை யாக குண்டத்தில் வீசும்படியும் கூறினார். அதன்படி தேவர்கள் யாகம் நடத்தினர். கேசியனும் அங்கு வந்தான். அவனை வரவேற்பது போல பாவனை செய்த தேவர்கள், சமயம் பார்த்து யாக குண்டத்தில் வீசி விட்டனர். அப்போது சிவன், அக்னி வடிவில் இருந்து அவனை அழித்தார். மகிழ்ந்த தேவர்கள், அவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டினர். சிவனும் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். விஷத்தின் வடிவமாக திகழ்ந்த அசுரனை அழித்ததால், "நஞ்சுண்டேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
பிற்காலத்தில் இந்த லிங்கம் மறைந்துவிட்டது. தந்தை ஜமதக்னியின் சொல்லுக்காக தாய் ரேணுகாதேவியை கொன்ற பாவம் நீங்க, இங்கு வந்தார் பரசுராமர்.

சிவலிங்க பிரதிஷ்டை செய்ய எண்ணிய அவர், இங்கிருந்த செடிகொடிகளை வெட்டி அகற்றினார். அப்போது ஓரிடத்தில் ரத்தம் வழிந்தது. கலங்கிய அவர் செடியை அகற்றியபோது, லிங்கம் இருந்ததைக் கண்டார். சிவஅபச்சாரம் செய்ததற்கு வருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளச் சென்றார். அப்போது சிவன் அவருக்கு காட்சி தந்து, பாவ விமோசனம் கொடுத்தளுளினார். பின்பு பரசுராமர் லிங்கம் இருந்த இடத்தில் கோயில் எழுப்பினார்.


திருவிழா : கார்த்திகை, பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடியில் சிவன், ஆவணியில் பெருமாள் திருக்கல்யாண விழா.
சிறப்பு : இங்குள்ள வீரபத்திரர், மிகவும் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். இவர் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு வைத்திருக்கிறார். வீரபத்திரர் கோயில்களில் சுவாமியுடன், பத்திரகாளிதான் பிரதான அம்பிகையாக இருப்பாள். ஆனால் இங்கு தாட்சாயணி இருப்பது விசேஷமான அமைப்பு. இவள் வலது கையில் தாமரை மொட்டு வைத்தபடி நின்றிருக்கிறாள். சுவாமிக்கு வலப்புறம் தட்சன் இருக்கிறார். இம்மூவரும் தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கின்றனர்..
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கு ஒரு கால பூஜையும், செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ அபிஷேக, பூஜைகளும் நடக்கிறது.
பிரார்த்தனை : முன்வினை பாவம் நீங்க, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க இவருக்கு பஞ்சாமிர்தம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் செய்து, வில்வ இலை, வெற்றிலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள் கின்றனர்.
விஷக்கடி பட்டவர்கள், தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, குணமாவதாக நம்பிக்கை.


நேர்த்திக்கடன் : சிவன், அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து வைத்தும், அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தல சிறப்பு : தாட்சாயணியுடன் வீரபத்திரர்: தட்சன், சிவனை அவமதித்து யாகம் நடத்தியபோது, தாட்சாயணி (பார்வதி) யாகத்தை நிறுத்தச் சென்றாள். அங்கு தட்சன் அவளை அவமதிக்கவே, யாகத்தை நிறுத்துவதற்காக யாக குண்டத்தில் வீழ்ந்தாள். அவ்வேளையில் சிவன், தனது உக்கிரத்தில் இருந்து வீரபத்திரரை உருவாக்கி, யாகத்தை அழிக்க அனுப்பினார். அவர் தட்ச யாகத்தை அழித்ததோடு, அவனது தலையையும் எடுத்தார். மேலும் உக்கிரம் குறையாத அவர், யாகத்தில் விழுந்த தாட்சாயணியை தோளில் தூக்கிக்கொண்டு நடனமாடினார். அவ்வேளையில் தட்சன் மனைவி பிரசுத்தாதேவி, சிவனிடம் வந்தாள்.

தவறு செய்த கணவரையும், மகள் தாட்சாயணியையும் உயிர்ப்பித்து அருளும்படி வேண்டினாள். அவளது வேண்டுதலை ஏற்ற சிவன் தட்சனையும், தாட்சாயணியையும் உயிர்ப்பித்தார். தட்சன், பிரசுத்தாதேவி இருவருக்கும் தாட்சாயணியுடன் சேர்ந்து காட்சி தந்தார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் வீரபத்திரர், தாட்சாயணியுடன் அருளுகிறார்.
தினம் தினம் அன்னாபிஷேகம்!: சிவலிங்கத்தில், பரசுராமரால் வெட்டப்பட்ட தழும்பு இருக்கிறது. சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான், லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால் இங்கு தினசரி பூஜையின்போது அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

விஷத்தன்மையுடைய அசுரனை விழுங்கியதால் சிவன் இங்கு உக்கிரமாக இருப்பதாகவும், அதனை குறைக்கும்விதமாக இந்த அபிஷேகம் செய்யப்படுவதாக சொல்கிறார்கள். மேலும் இவருக்கு சுக்கு, வெண்ணெய், சர்க்கரை ஆகிய மூன்றும் கலந்த "சுகண்டித சர்க்கரை' என்னும் மருந்தை பிரதானமாக படைப்பதும் விசேஷம். உச்சிக்காலத்தில் கவுதம மகரிஷி, சிவபூஜை செய்வதாக ஐதீகம். நோய்களை குணமாக்குபவராக அருளுவதால் இவருக்கு, "ராஜவைத்தியர்' என்றும் பெயருண்டு.

அம்பாள் பார்வதி சிவனுக்கு இடப்புறம் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இருவரது சன்னதிக்கு மத்தியில் நாராயணர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு ஆவணி மாதத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. இவரது திருமணத்தை சிவன், முன்னின்று நடத்தி வைப்பார். இதேபோல சிவ, பார்வதி திருமணத்தை இந்த பெருமாள் முன்னின்று நடத்தி வைக்கிறார். கோடை காலத்தில் சிவன், அம்பாள் இருவரும் கோயிலின் மேல் தளத்திற்குச் சென்று, விமானத்தை சுற்றி வருகின்றனர். விமானத்தின் இருபுறமும், இரண்டு வில்வ மரங்கள் இருப்பது சிறப்பு.
நந்தி சிறப்பு: இத்தலத்து சிவன், ஈசானிய (வடகிழக்கு) திசையை பார்த்திருப்பதாக ஐதீகம். எனவே நந்தி, இவரது பார்வையில் படும்படியாக வடகிழக்காக சற்றே விலகியிருக்கிறது. இங்குள்ள கோபுரமே லிங்கமாக கருதப்படுவதால், கோயிலுக்கு வெளியிலும் ஒரு நந்தி இருக்கிறது. இதுதவிர, கோயில் பிரகாரத்தில் அலங்கார நந்தி வெளியே பார்த்தபடி, தனிச்சன்னதியில் இருக்கிறது. பிரதோஷத்தன்று இந்த நந்திக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

இங்குள்ள யோக தெட்சிணாமூர்த்தி, 14 சீடர்களுடன் காட்சி தருவது விசேஷம். இவரது பீடத்திலும் நந்தியும் இருக்கிறது. பவுர்ணமிதோறும் இரவில் சுவாமி தேரில் ரதவீதி சுற்றுவதும், அமாவாசைகளில் தீர்த்தவாரி கண்டு, பல்லக்கில் புறப்பாடாவதும் விசேஷம்.

சிவனின் விசேஷமான 24 மூர்த்தங்கள், திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகத லிங்கம், வெண்ணெய் கணபதி, நாகத்தின் மத்தியில் சுப்பிரமணியர், நின்ற கோலத்தில் சண்டிகேஸ்வரர், பத்மாசனத்தில் ஆயுதங்களுடன் நவக்கிரக சன்னதி ஆகியோர் இங்கு அவசியம் தரிசிக்க வேண்டியவர்கள் ஆவர்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு - 571 301. மைசூரு, கர்நாடக மாநிலம்