HolyIndia.Org
Holy India Org Add New Temple

நகரசூரக்குடி


இறைவன்தேசிகநாதர்
இறைவிஆவுடைநாயகி
தல மரம்மாமரம்
தீர்த்தம்பைரவர் தீர்த்தம்
புராண பெயர்தேசிகநாதபுரம்
கிராமம்/நகரம்நகரசூரக்குடி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : பார்வதிதேவியின் தந்தை தட்சன், ஒரு யாகம் நடத்தினான். ஆனால், மருமகன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்கவில்லை. யாகத்தில் அவிர்பாகம் (பலன்) ஏற்பதற்காக சூரியன் கலந்து கொண்டார். அப்போது சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தச் சொன்னார். வீரபத்திரர், யாகத்தை நிறுத்தியதோடு அதில் கலந்து கொண்ட சூரியன் முதலானவர்களை தண்டித்தார்.

சிவனின் கோபத்திற்கு ஆளான சூரியன், பூலோகம் வந்து இத்தலத்தில் தங்கி விமோசனம் கேட்டு அவரை வழிபட்டார். சிவனும் அவர் மீது கருணை கொண்டு காட்சிதந்து சாப விமோசனம் தந்தார்.இதன் அடிப்படையில் இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.


திருவிழா : பைரவர் ஜென்மாஷ்டமி, ஆனி உத்திர விழா, மார்கழியில் ஆருத்ரா தரிசனம், அறுபத்துமூவர் குருபூஜை.
சிறப்பு : பொதுவாக பைரவர், கையில் சூலத்துடன் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள "ஆனந்த பைரவர்' சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்
பொது தகவல் : கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, மார்கழி தேய்பிறை அஷ்டமியில் "பைரவர் ஜென்மாஷ்டமி' விழா நடக்கிறது. சம்பகசஷ்டியின்போது ஆறு நாட்கள் ஹோமம் நடக்கிறது.

நவக்கிரக மண்டபம் உள்ளது. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரஸ்வதி, நால்வர் மற்றும் அறுபத்துமூவர் உள்ளனர். காவல் தெய்வமான முனீஸ்வரர், வட்டமான பீட வடிவில் இருக்கிறார்.


பிரார்த்தனை : குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, குழப்பம் நீங்கி மன அமைதி பெற இங்கு வேண்டிக்கொள்ளலாம்


நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, பைரவருக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ வழிபாடு செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்
தல சிறப்பு : இந்த பைரவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள். இங்கு சிவன், அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் கண்ணில் தொட்டு வைக்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். பைரவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்.
தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு விசேஷ அபிஷேக, அர்ச்சனை நடந்து அதன்பின் பைரவர் உற்சவர் பிரகார உலா செல்கிறார்.

பஞ்மூர்த்தியில் ஒருவர்: சிவன் கோயில்களில் விழாக்களின்போது, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர். ஆனால், இக்கோயிலில் நடக்கும் ஆனி உத்திர விழாவில் சண்டிகேஸ்வரருக்கு பதிலாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷம். பைரவர் தலம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோஷ்டத்திலுள்ள யோக தெட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சிதருகிறார். இவரது தலையில் கிரீடம் அணிந்துள்ளது வித்தியாசமான அம்சம்.

முதல்பூஜை சூரியனுக்கு: தினமும் இக்கோயிலில் காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, அதன்பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இத்தலத்தில் தவமிருந்தவர் என்பதால், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள். சூரியனால் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இருந்ததாலும் "சூரியக்குடி' எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் "சூரக்குடி' என மருவியது.
நடராஜர், தெற்கு நோக்கி இருக்கிறார். சுவாமி சன்னதி எதிரிலுள்ள நந்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் உள்ளது. பைரவர் சன்னதியின் பின்புறம் பிரகாரத்தில் மற்றொரு பைரவர், கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு தேசிகநாதசுவாமி திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம்.