HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவண்ணாமலை தலவரலாறு

நடுநாட்டுத் தலம். புகழ்பெற்ற தமிழக நகரங்களில் ஒன்று. விழுப்புரம் - காட்பாடி வழியில் இரயில் நிலையம். அனைத்து நகரங்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. நினைக்க முத்திகிடைக்கும் தலம். இது வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருவண்ணாமலை கோட்டத்தின் தலை நகரம். சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் முதலியோர் பூசித்துப் பேறுபெற்ற தலம். வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனையாகவும் குதிரையாகவும் இருந்த நிலை இத்தலத்தை வலம் வந்தமையின் மாறின.

இறைவன்பெயர் அண்ணாமலைநாதர், அருணாசலேசுவரர் என்றும் கூறுவர். இறைவிபெயர் உண்ணாமுலையம்மை, அபீதகுஜாம்பாள் என்றும் கூறுவர். விநாயகர் பெயர் ஸ்ரீ சம்பந்தவிநாயகர், முக்குறுணி விநாயகர் என்றுங் கூறுவர்.

கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் மலைப்பகுதியிலுமாக 360 தீர்த்தங்கள் உள்ளன. சிறந்தவை சிவகங்கையும், பிரம தீர்த்தமும், மலைப்பகுதியிலுள்ள அக்னிதீர்த்தமும், இந்திர தீர்த்தமும் ஆகும். இந்திர தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

இத்தலத்தில் நடைபெறும் பெரியவிழா கார்த்திகைத் திரு விழாவாகும். இது கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளைத் தீர்த்தமாகக் கொண்டு நடைபெறும். சித்திரைமாதத்தில் சித்திரை நட்சத்திரத்தைத் தீர்த்தமாகக் கொண்டு பிரமோற்சவமும், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணமும் ஆறுநாள் விழாவும், மாசிமகத்தில் வல்லாளன் திருவிழாவும், தைமாதம் திருவூடல் விழாவும், ஆனி விழாவும், ஆடியில் அம்பிகைவிழாவும், பவித்ரோற்சவம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை உற்சவம், திருவாதிரை முதலியனவும் சிறப்பாகக்கொண்டாடப் பெறுகின்றன.

அயனும் மாலும் அகந்தைகொண்டு, அடிமுடிதேட அன்னமும் வராகமுமாக மாறித் தேடி அயற்சி அடைந்தாராக, அக்கினி வடிவாய் நின்று அருள்செய்தவர் அண்ணாமலைநாதர். முருகன் தாருகனை வதஞ்செய்து வணங்கிச்சென்ற தலம் பலவற்றுள் இதுவும் ஒன்று. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லையாயினும் சேக்கிழார் வரலாற்றால் ஊகிக்கவேண்டியுள்ளது. நக்கீரர், பரணர், கபிலர், பட்டினத்தார் ஆகிய இந்நால்வரும் அண்ணாமலையைப் பற்றிப்பாடிய பாக்கள் பதினொராந்திருமுறையில் உள்ளன.

வச்சிராங்கதன் என்னும் பாண்டியன் தினமும் வலம்வந்து திருப்பணி பல செய்துள்ளான். வல்லாளமகாராஜன் அண்ணாமலையை ஆண்டுவந்தான். அருணகிரி நாதர் கோபுரத்திலிருந்து இறக்க எண்ணி வீழ்ந்தபோது முருகன் தோன்றி அருள்செய்தான். குகைநமச்சிவாயர், குருநமச்சிவாயர் முதலானவர்கள் சித்தி பல செய்தனர்.

கோயிலின் வடகிழக்குமூலையில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. கிழக்குப்பக்கத்தில் நுழையும்போதுள்ள உட்கோபுரம் வல்லாளமகாராஜன் கோபுரம் என்று வழங்கப்படுகிறது. வல்லாள கோபுரத்தின் வடகிழக்கு மூலையில் சக்திவிலாஸமும் உள்ளது. மேற்கு நோக்கி உட்சென்றால் கிளிக்கோபுரம் காணலாம். தலவிருட்சத்திற்கு மேற்கே கல்யாணமண்டபம் உள்ளது.

திருவண்ணாமலை - அட்டமா சித்திகள் - கி‌ரிவல‌ம் ப‌ற்‌றி அருணாசல புராணம் - திருவண்ணாமலை அமைவிடம் - திருவண்ணாமலை கல்வெட்டு - திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா - திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் - திருவண்ணாமலை கோயில் தூரம் - திருவண்ணாமலை கோயில் நேரம் - திருவண்ணாமலை சித்தர் - திருவண்ணாமலை சிறப்புக்கள் - திருவண்ணாமலை தலவரலாறு - திருவண்ணாமலை தேவாரம் - திருவண்ணாமலை பதிகங்கள் - திருவண்ணாமலை பூசைகள் - திருவண்ணாமலை முகவரி - திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் - திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் - நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை - ரமண மகரிசி -