HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருமலைவையாவூர்


இறைவன்பிரசன்னவெங்கடேசர்
இறைவிஅலர்மேலுமங்கை
தீர்த்தம்வராகதீர்த்தம்
கிராமம்/நகரம்திருமலைவையாவூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : "பிரசன்னம்' என்றால் "மனதுக்குள் தோன்றுதல்' எனப்பொருள். கடவுள் மீது அன்பு கொண்டவர்கள், இறைவனை ஊனக்கண்ணால் தரிசிக்க முடியாவிட்டாலும் மனக்கண்ணால் தரிசித்து விடுவர்.மதுரையில், திருமலை நாயக்க மன்னர் மனக்கண்ணால் தரிசித்த பிரசன்ன வெங்கேட பெருமாளை தல்லாகுளம் என்ற இடத்தில் ஸ்தாபித்தார். அதுபோல், திருமலை வையாவூரில், தொண்டைமான் மன்னர் ஒருவர் தன் நாட்டிற்கு பாதுகாப்பு வேண்டி வெங்கடாசலபதியை வேண்டினார்.அவருக்கு அருள் செய்தார் வெங்கடாசலபதி. தனக்கு வெற்றி தந்த பெருமாளுக்கு நன்றி சொன்ன போது, பெருமாள் இங்குள்ள ஒரு மலைக்கு தேரில் வந்து, கையில் செங்கோலுடன் மனக்கண் முன் காட்சி கொடுத்தார். எனவே, "பிரசன்ன வெங்கடேசர்' என்ற திருநாமம் பெற்றார். தொண்டைமான் இந்த மலை மீது சுவாமிக்கு கோயில் கட்டினான்.


திருவிழா : சித்திரை, புரட்டாசியில் பிரம்மோற்ஸவம்.
சிறப்பு : மூலஸ்தானத்தில் பெருமாள் செங்கோலுடன், ராஜகோலத்தில் இருக்கிறார். இவரது இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகளும், திருவாசியில் ஆதிசேஷனும் இருக்கின்றனர். இத்தலம் திருவோணம் நட்சத்திரத்திற்குரிய கோயில்.
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : புரட்டாசி மற்றும் ஆவணி திருவோணம் இங்கு மிக விசேஷமாக கொண்டாடப்படும்.புரட்டாசி திருவோணத்தில், ஏழு மலைகள் போல அன்ன நைவேத்யம் படைத்து, ஏழு நெய் தீபம், ஏழு வகையான பட்சணங்கள், காய்கறிகள் படைத்து பூஜை செய்கின்றனர்.


பிரார்த்தனை : இங்குள்ள ஆதிவராகரிடம் வேண்டிக்கொண்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.சுவாமிக்கு வஸ்திரம் சாத்தியும், திருவோண நாளில் நெய்தீபம் ஏற்றியும் வேண்டிக்கொள்ளலாம்.


நேர்த்திக்கடன் : பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து பொங்கல் நைவேத்தியம் செய்கின்றனர்.
தல சிறப்பு : லட்சுமி வராஹர்: திருப்பதியில் வராஹ சுவாமியை வணங்கிய பிறகே வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும். அதே விதிமுறையின் படி, இங்கும் லட்சுமி வராஹர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.பெருமாள் வராஹ அவதாரம் எடுத்த போது, கருடாழ்வரால் அதைப் பார்க்க முடியமால் போயிற்று. எனவே, இத்தலத்தில் அவர் கருடனுக்கு வராஹ உருவம் காட்டுகிறார்.

நேத்திர தரிசனம்: மூலஸ்தானத்தில் பெருமாள் செங்கோலுடன், ராஜகோலத்தில் இருக்கிறார். இவரது இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகளும், திருவாசியில் ஆதிசேஷனும் இருக்கின்றனர். இவர் தசாவதாரம், அஷ்டலட்சுமி, சகஸ்ரநாம மாலைகள், தசாவதார ஒட்டியாணம் அணிந்திருப்பது விசேஷம். வியாழக்கிழமை காலையில் அலங்காரமில்லாமல் "நேத்திரதரிசனம்' தருகிறார். இது மிகவும் விசேஷமானது.இவரது சன்னதியைக் காக்கும் ஜெயன், விஜயன் என்ற காவலர்களில் ஒருவரது காதில் சிம்ம குண்டலம், மற்றொருவர் காதில் கஜ (யானை) குண்டலம் அணிந்திருப்பது வித்தியாசமான அம்சம். அலர்மேலுமங்கை தாயாருக்கு தனி சன்னதி உண்டு.லட்சுமிவராகர் தனிசன்னதியில், கொடிமரத்துடன் இருக்கிறார். இவர் வலது காலை ஆதிசேஷனின் வால் மீதும், இடது காலை தலைமீதும் வைத்து, மடியில் லட்சுமியை அணைத்த கோலத்தில் இருக்கிறார். பிரதான மூர்த்தியான இவருக்கே முதல் தீபாராதனை நடக்கிறது. பிரசன்ன வெங்கடேசருக்கு விழா நடக்கும்போதும் கூட, இவரது சன்னதியிலேயே கொடி ஏற்றப்படும்.

திருவோண தீபம்: இத்தலத்தில், ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில் "ஓணதீபம்' ஏற்றுகின்றனர். மகாபலி மன்னன், முற்பிறவி ஒன்றில், எலியாகப் பிறந்தான். சிவாலயம் ஒன்றில் வசித்து வந்த போது, ஒருமுறை அங்கிருந்த விளக்கு அணைய இருந்தது. அப்போது, விளக்கில் தற்செயலாக எலி குதித்தது. குதித்த வேகத்தில் திரி தூண்டபட்டு பிரகாசமாக எரிந்தது. இதனால், அவன் மறுபிறப்பில் மகாபலி மன்னனாக பிறந்து, திருவோண நட்சத்திரத்தில் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டான், எனவே, இங்கு மாதம்தோறும் திருவோணத்தன்று அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது.அன்று காலையில் சீனிவாசர் யாக மண்டபத்திற்கு எழுந்த ருள்கிறார். அப்போது யாகம், திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கும். பெருமாள் சன்னதியில் அகண்ட தீபத்தில் நெய் விளக்கேற்றி அதனை சுவாமி பாதத்தில் வைத்து ஆராதிக்கின்றனர். இந்த தீப தரிசனம் மிகவும் விசேஷமானது. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் தீபத்திற்கு நெய் கொடுத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

கள்ளபிரான்: இங்கு சீனிவாசர், கள்ளர்பிரான் என இரண்டு உற்சவர்கள் இருக்கின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவத்தில் கள்ளபிரானும், புரட்டாசியில் சீனிவாசரும் தேர் பவனி செல்கின்றனர். சக்கரத்தாழ்வார், வேணுகோபாலர், ராமர் சன்னதிகளும் உள்ளன.மலை அடிவாரத்தில் வீரஆஞ்சநேயர் பறக்கும் நிலையில் இருக்கிறார்.இவரது சன்னதியில், தங்கள் கோரிக்கையை எழுதி, மட்டைத்தேங்காயுடன் வைத்து மஞ்சள் துணியில் கட்டி  வேண்டிக் கொள்கிறார்கள். அருகில் லட்சுமிகணபதி சன்னதி இருக்கிறது.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், திருமலைவையாவூர் செங்கல்பட்டு - 603 308 காஞ்சிபுரம் மாவட்டம்.