HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருப்பரங்குன்றம் தேவாரம்

1-1/1080

நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றைச் 
சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில் 
ஆடலனஞ்சொல் அணியிழையாளை யொருபாகம் 
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.


2-1/1081

அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து 
பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத் 
திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி 
பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.


3-1/1082

நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றைச் 
சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய 
ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகிப் 
பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே.


4-1/1083

வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக் 
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றந் 
தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம் 
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.


5-1/1084

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத் 
துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை 
பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை 
உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.


6-1/1085

கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத் 
தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில் 
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப் 
படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே.


7-1/1086

அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால் 
எயில்படவெய்த எம்மிறைமேய இடம்போலும் 
மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப் 
பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.


8-1/1087

மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள் 
பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச் 
சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று 
நித்தலுமேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.


9-1/1088

முந்தியிவ்வையந் தாவியமாலும் மொய்யொளி 
உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும் 
சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி 
பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.


10-1/1089

குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து 
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல 
பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத் 
தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.


11-1/1090

தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன் 
படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத் 
தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி 
விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே.


12-7/7235

கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக் 
கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச் 
சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ் 
சில்பூத மும்நீ ருந்திசை திசையன 
சோத்திட்டு விண்ணோர் பலருந் தொழநும் 
அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந் 
தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம் 
படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.


13-7/7236

முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர் 
முழுநீறு மெய்பூசு திர்மூக்கப் பாம்பைக் 
கண்டத்தி லுந்தோளி லுங்கட்டி வைத்தீர் 
கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர் 
பிண்டஞ் சுமந்தும் மொடுங்கூட மாட்டோ ம் 
பெரியா ரொடுநட் பினிதென் றிருத்தும் 
அண்டங் கடந்தப் புறத்தும் இருந்தீர் 
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.


14-7/7237

மூடாய முயலகன் மூக்கப் பாம்பு 
முடைநா றியவெண் டலைமொய்த்த பல்பேய் 
பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல் 
பரிசொன் றறியா தனபா ரிடங்கள் 
தோடார் மலர்க்கொன்றை யுந்துன் னெருக்குந் 
துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன் 
றாடா தனவேசெய் தீர்எம் பெருமான் 
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.


15-7/7238

மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னி 
மலையான் மடந்தை மணவாள நம்பி 
பஞ்சுண்ட அல்குல் பணைமென் முலையா 
ளொடுநீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் 
நஞ்சுண்டு தேவர்க் கமுதங் கொடுத்த 
நலமொன் றறியோமுங் கைநாக மதற் 
கஞ்சுண் டுபடம் அதுபோக விடீர் 
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.


16-7/7239

பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர் 
புலால்வா யனபே யொடுபூச் சொழியீர் 
எல்லாம் அறிவீர் இதுவே அறியீர் 
என்றிரங் குவேன்எல் லியும்நண் பகலுங் 
கல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதுங் 
கடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும் 
அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான் 
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.


17-7/7240

தென்னாத் தெனாத்தெத் தெனாவென்று பாடிச் 
சிலபூ தமும்நீ ருந்திசை திசையன 
பன்னான் மறைபா டுதிர்பா சூர்உளீர் 
படம்பக்கங் கொட்டுந் திருவொற்றி ய[ரீர் 
பண்ணார் மொழியாளை யோர்பங் குடையீர் 
படுகாட் டகத்தென்று மோர்பற் றொழியீர் 
அண்ணா மலையே னென்றீரா ரூருளீர் 
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.


18-7/7241

சிங்கத் துரிமூடு திர்தே வர்கணந் 
தொழநிற்றீர் பெற்றம் உகந்தே றிடுதிர் 
பங்கம் பலபே சிடப்பாடுந் தொண்டர் 
தமைப்பற்றிக் கொண்டாண் டுவிடவுங் கில்லீர் 
கங்கைச் சடையீர் உங்கருத் தறியோங் 
கண்ணுமூன் றுடையீர் கண்ணேயா யிருந்தால் 
அங்கத் துறுநோய் களைந்தாள கில்லீர் 
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.


19-7/7242

பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர் 
பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீருந் 
துணிவண்ணத் தின்மேலு மோர்தோல் உடுத்துச் 
சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீறு பூசி 
மணிவண்ணத் தின்மேலு மோர்வண்ணத் தராய் 
மற்றுமற் றும்பல் பலவண்ணத் தராய் 
அணிவண்ணத் தராய்நிற் றீர்எம் பெருமான் 
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.


20-7/7243

கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர் 
மலையின் றலையல் லதுகோயில் கொள்ளீர் 
வேளா ளியகா மனைவெந் தழிய 
விழித்தீர் அதுவன் றியும்வேய் புரையுந் 
தோளாள் உமைநங்கை யோர்பங் குடையீர் 
உடுகூறை யுஞ்சோறுந் தந்தாள கில்லீர் 
ஆளா ளியவே கிற்றீர்எம் பெருமான் 
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.


21-7/7244

பாரோடு விண்ணும் பகலு மாகிப் 
பனிமால் வரையா கிப்பரவை யாகி 
நீரோடு தீயும் நெடுங்காற் றுமாகி 
நெடுவெள் ளிடையாகி நிலனு மாகித் 
தேரோ டவரை எடுத்த அரக்கன் 
சிரம்பத் திறுத்தீர் உமசெய்கை எல்லாம் 
ஆரோடுங் கூடா அடிகேள் இதுவென் 
அடியோம் உமக்காட் செயஅஞ் சுதுமே.


22-7/7245

அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென் 
றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி 
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே 
மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும் 
படியா இவைகற் றுவல்ல அடியார் 
பரங்குன்ற மேய பரமன் அடிக்கே 
குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக் 
குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.


திருப்பரங்குன்றம் - திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஆலயங்கள் - திருப்பரங்குன்றம் சிறப்புகள் - திருப்பரங்குன்றம் தேவாரம் - திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் - திருப்பரங்குன்றம் பெயர்க்காரணம் - திருப்பரங்குன்றம் வரலாறு -