HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருப்பதிசாரம்


இறைவன்திருவாழ்மார்பன்
இறைவிகமல வல்லி நாச்சியார்,சுவாமி மார்பில் மகாலட்சுமி
தீர்த்தம்லட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணி
புராண பெயர்திருவண்பரிசாரம்
கிராமம்/நகரம்திருப்பதிசாரம்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : ஒரு காலத்தில் சுசீந்திரம், ஞானாரண்யம் என அழைக்கப்பட் டது. சப்த ரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் சிவவடிவில்அவர்களுக்கு காட்சி தந்தார். முனிவர்கள் இறைவனைத் திருமாலின் உருவிலே காண சோம தீர்த்தக் கட்டம் என்ற இடத்திற்கு சென்று தவம் செய்தனர். அவர்களது தவத்துக்கு இரங்கிய இறைவன், திருமாலின் உருவில் காட்சி தந்தார். அவ்வுருவில் அங்கு தங்கியருள வேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற, திருமால், சப்த ரிஷிகள் சூழ, பிரசன்ன மூர்த்தியாக சுமர்ந்து அருள்புரிகின்றார் என்பர்.
திருவிழா : திருமால் குலசேகர ஆழ்வாரை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்ற ஆடி சுவாதி திருநாள், சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா. புரட்டாசி சனி, ஆவணி திருவோணம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இவருக்கு மட்டுமே ஊஞ்சல் சேவை நடக்கிறது.
சிறப்பு : மூலவரான திருவாழ்மார்பர் நான்கு கைகளுடன், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் "கடு சர்க்கரை யோகம்' என்ற கூட்டினால் சமைக்கப்பட்டது. கல்லும், சுண்ணாம்பும் சேர்ந்து செய்யப்பட்ட உருவத்தின் மேல், கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்பர். அதனால் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கே அபிஷேகம்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இது நம்மாழ்வார் அவதார தலம். திவ்ய தேசங்களில் ஒன்று. கோலம்-அமர்ந்த கோலம். இங்குள்ள மூலவர் திருவாழ்மார்பர். இங்கு தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம். பெருமாள் லட்சுமியின் உருவம் பொறித்த பதக்கத்துடன், தங்கமாலை ஒன்றை அணிந்துள்ளார்.
பிரார்த்தனை : திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் செல்வச்செழிப்புடன் விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன் : பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து வழிபடுதல், திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்ய நினைப்பவர்கள் இத்தல பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்யலாம்.
தல சிறப்பு : நம்மாழ்வாரின் தாயார் பிறந்ததலம்: திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உரியது. குறுநாட்டுக் காரிமாறன் என்ற சிற்றரசசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது. பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியின் அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியிலே நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர். பெருமாளும் அவர்களது வேண்டுகோளுக்கிரங்கி, ""உங்கள் எண்ணம் நிறைவேறும். யாமே உமக்கு மகனாக அவதரித்துப் பதினாறு வயதிலேயே கணக்கிலடங்காக் கீர்த்திகளைப் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவோம். பிறக்கும் குழந்தையை (ஆழ்வார்)திருநகரியிலுள்ள புளியமரத்தடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்,' என்று கூறி மறைந்தார். சில நாட்களில் உதயநங்கை கருவுற்றாள். தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரத்துக்கு அனுப்பப்பட்டாள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தார். குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை ஆழ்வார்திருநகரியிலுள்ள புளிய மரத்துக்குப் பொற்தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர். குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளியமரப் பொந்தினுள் ஏறித் தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞான முத்திரை ஏந்தியவராய் அங்கு எழுந்தருளி இருக்கும் ஆதிநாதரைத் தியானித்து நின்றது. இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் வியந்து போற்றினர். 16 ஆண்டுகள் இந்த பாலமுனி, இறை தியானத்தில் மூழ்கியிருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தலமாகவும், ஆழ்வார்திருநகரி அவர் ஞானம் பெற்ற ஸ்தலமாகவும் சிறப்புடன் விளங்குகின்றன.
பாடியவர்கள் : நம்மாழ்வார் மங்களாசாசனம்

 வருவார் செல்வார் பரிவாரத்திருந்த என் திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார் செய்வதென் உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு ஒருபாடுழல்வான் ஒரடியாணுமுள னென்றே.

-நம்மாழ்வார்


முகவரி : அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதி சாரம்- 629 901 நாகர் கோவில் கன்னியாகுமரி மாவட்டம்