HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருச்சத்தி முற்றம்


இறைவன்சிவக்கொழுந்தீசர், தழுவக்குழைந்த நாதர்
இறைவிபெரியநாயகி
தீர்த்தம்சூல தீர்த்தம்
புராண பெயர்சத்திமுத்தம், திருச்சத்திமுத்தம்
கிராமம்/நகரம்திருச்சத்தி முற்றம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : பக்தியே முக்திக்கு வித்து' என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட சிவ, பார்வதி விரும்பினர். இதற்காக சக்தி, காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணி சூல தீர்த்தத்தின் அருகே அமைந்துள்ள சக்திமுற்றத்தில் இறைவனை பூஜை செய்து வந்தாள். சிவன் காட்சி தர நீண்ட நாட்கள் ஆனது. ஆனால் பார்வதி உறுதி கலையாமல், தன் பக்தி நிலையானது என்று உறுதி செய்யும் வகையில் ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் மேற்கொண்டாள்.

சக்தியை சோதிக்க விரும்பி ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்தார் சிவன். தீப்பிழம்பாக காட்சி தந்தாலும், அதில் ஈசன் இருப்பதை உணர்ந்த பார்வதி அந்த நெருப்பை கட்டித்தழுவினாள். சிவன் குளிர்ந்து போனார். குடும்பத்தில் பிரச்னைகள் நெருப்பென தாக்கினாலும், அதை தம்பதியர் தங்கள் பரஸ்பர அன்பினால் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே இத்தல வரலாறு தம்பதிகளுக்கு காட்டுகிறது.


திருவிழா : ஆனிமாதம் முதல் நாள் முத்துப்பந்தல். தைமாதம் ரதசப்தமி, கார்த்திகையில் சோமவார வழிபாடு சிறப்பு.
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : பெரிய கோயில், கிழக்கு நோக்கியது. வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறர். ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடைது. வெளிப் பிராகாரம் பெரியது. இரண்டாங் கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள்ளன.

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. நடராச சபை உள்ளது. மூல வாயிலின் முன்னால் ஒருபுறம் சோமாஸ்கந்தரும், முருபுறம் சத்தி, முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தியும் உள்ளனர். உட்பிராகாரத்தில் தல விநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகம், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன.


பிரார்த்தனை : சக்தி தழுவிய ஈசனை திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திங்கள்கிழமைகளில் வந்து வணங்கினால் தோஷங்களும், தடைகளும் நீங்கி நல்ல இல்வாழ்க்கை அமையும்.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழக்கூடிய கணவன், மனைவி இங்கு வந்து வணங்கினால் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.


நேர்த்திக்கடன் : சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு : இவ்வாலயத்தில் உள்ள சிவனை பார்வதிதேவி
பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் “திருச்சத்திமுத்தம்’ என பெயர் பெற்றது. மூலஸ்தானத்திற்கு அருகில் அம்மன் சிவலிங்கத்தை கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலத்தை இன்றும் தரிசிக்கலாம். சுவாமி சன்னதியின் வாசலின் வட புறத்தில் சக்தி முத்தமளிக்கும் தல ஐதிக மூர்த்தியும் உள்ளனர். இவ்வைதீகச் சிற்பத்தின் பின்புறம் அம்மன் ஒரு காலில் நின்று தவம் செய்யும் காட்சியையும் காணலாம். காஞ்சியில் அம்பிகை இறைவனைத் தழுவியிருப்பது போலவே இத்தலத்திலும் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

இங்கு பார்வதி, அகத்தியர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசருக்கு இறைவன் தன் திருவடி தரிசனம் தந்த தலம்.  இத்தலத்தில் அமாவாசை, பவுர்ணமி வழிபாடு மிகவும் சிறப்பாகும்.


பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

வெம்மை நமன்தமர் மிக்குவிரவி விழுப்பதன்முன் இம்மைஉன் தாள்என்றன் நெஞ்சத்து எழுதிவை யீங்கிகழில் அம்மை அடியேற்கு அருளுதி என்பதிங்கு யாரறிவார் செம்மை தருசத்தி முற்றத்து உறையுஞ் சிவக்கொழுந்தே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 22வது தலம்.


முகவரி : அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்திமுற்றம்-612 703. தஞ்சாவூர் மாவட்டம்.