HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கூடலையாற்றூர்.


இறைவன்நர்த்தன வல்லபேஸ்வரர்
இறைவிஞானசக்தி, பராசக்தி.
தல மரம்கல்லால மரம்
தீர்த்தம்பரம்ம, அகஸ்திய, கார்த்தியாயனர் தீர்த்தங்கள்.
புராண பெயர்தட்சிணப்பரயாகை
கிராமம்/நகரம்திருக்கூடலையாற்றூர்.
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : சோழநாட்டை ஆண்டு வந்த தினகர மகாராஜன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளைக் கொன்று விட்டான். இதனால் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் படித்து கொண்டது. இதனால் மனைவி, மக்களை இழந்து சுற்றித்திரிந்தான். அப்போது ஒரு சொரிநாய் அவனது பின்னால் வந்து கொண்டிருந்தது. ஒருநாள் அந்த நாய் ஒரு நதியில் மூழ்கி எழுந்தவுடன் ஆரோக்கியத்துடனும், தோற்றப்பொலிவுடனும் விளங்கியது.

இதைப்பார்த்த மன்னன் தானும் அந்நதியில் நீராடி தனது தோஷம் நீங்கப்பெற்று, நாடு நகரத்தை திரும்பப் பெற்றான். அவன் நீராடிய இடத்தில் இரண்டு நதிகள் கூடின. அந்த நதிகளின் கரையில் சிவாலயம் கட்டினான். நதிகள் கூடியதால், திருக்கூடலையாற்றூர் என்று பெயரும் வைத்தான்.

மன்னன் கட்டிய கோயில் பழுதடைந்தது. சிலைகளைக் காணவில்லை. அப்போது அம்மன், அவ்வூர் பொன்னப்ப குருக்களின் கனவில் தோன்றி நான் ஆற்றில் கிடக்கிறேன் என்றாள். அதன்பின் குருக்கள் ஆற்றில் கிடந்த சிலைகளை எடுத்து தற்போதுள்ள கோயிலை கட்டி சிலைகளை பிரதிஷ்டை செய்தார்.


திருவிழா : மாசிமகத்தில் 13 நாள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.
சிறப்பு : சித்திரை மாதம் முதல் மூன்று தேதியில் மூலவரின் மீது சூரிய ஒளிபட்டு சூரியபூஜை நடக்கிறது.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : பொதுவாக சிவன் கோயில்களில் சிவனுடன் ஒரு அம்மன் சன்னதி இருப்பது வழக்கம். ஆனால், மிக அபூர்வமாக சில கோயில்களில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. கடலூர் மாவட்டம் திருக்கூடலையாற்றூரில் உள்ள நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் ஞானசக்தி, பராசக்தி என்ற பெயர்களில் அம்மன் அருள்பாலிக்கிறாள்.

ஞானசக்தி சன்னதியில் குங்குமமும், பராசக்தி சன்னதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது.

இவர்களை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு விருத்தியாகும். ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை.

தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தை சுந்தரர் பாடியுள்ளார்.


பிரார்த்தனை : கல்வியில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன் : சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.
தல சிறப்பு : பொதுவாக படிக்கிற குழந்தைகளுக்கு மறதி பெரிய மைனஸ் பாயின்டாக இருக்கிறது. எவ்வளவு படித்தாலும், மறுநாளே மறந்து விடுகிறார்கள்.

மகரிஷி அகத்தியர் கூட இத்தலத்தில்தான் கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க இறைவனை பிரார்த்தித்தார். எனவே, இங்கு குழந்தைகளை அழைத்து வந்து, படித்த பாடங்கள் மறக்காமல் இருக்க இறைவனை வேண்டலாம்.

மேலும் பிரம்மாவும் சரஸ்வதியும் விஜயம் செய்த தலம் இது. எனவே கல்விக்கு தொடர்பான பிரார்த்தனைகளைச் செய்ய ஏற்ற தலமாக இதைக் கருதுகின்றனர்.

பிரம்மாவும், சரஸ்வதியும் இங்கு தவம் புரிந்து சிவனின் நர்த்தனம் கண்டார். எனவேதான் இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

வல்லபேஸ்வரர் மீது சுந்தரர் பதிகம் பாடியுள்ளார். மணிமுத்தாறு, வெள்ளாறு நதிகள் இங்கு கூடுவதால் இத்தலத்திற்கு தட்சிணப்பிரயாகை என்ற பெயரும் உண்டு. எமதர்மராஜாவின் பரதிநிதியான சித்திரகுப்தருக்கு சன்னதி இருப்பது ஒரு சில கோயில்களில் மட்டுமே. அந்த சிறப்பையும் இக்கோயில் பெற்றுள்ளது.

 நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. தனி சன்னதியில் பொங்கு சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஏழரை சனி நடப்பவர்கள் பிரதோஷ காலத்தில் நந்தியையும் பொங்கு சனியையும் தரிசித்தால் தோஷம் குறையும் என்பது நம்பிக்கை.

மகாலட்சுமி அவதாரம்: அகத்தியருக்கு கார்த்தியாயனன் என்ற மகன் பிறந்தான். அவனும் தந்தையைப் போல் மிகப்பெரிய ரிஷி ஆனான். அதன்பின் அகத்தியர் தனக்கு ஒரு மகள் வேண்டும் என இங்குள்ள இறைவனை வேண்டினார். இறைவனின் விருப்பப்படி மகாலட்சுமி இங்கு ஓடும் மணிமுத்தாறு நதியில் இருந்த தாமரை மலர் மீது விளையாடுவதை கண்டார்.

அக்குழந்தையை எடுத்து அம்புஜவல்லி என பெயரிட்டு வளர்த்து வந்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்த போது, தன் துணைவி இங்கு அம்புஜவல்லியாக வளர்வதை அறிந்து மணம் செய்து கொண்டார். இங்கு விஷ்ணுவுக்கும் சன்னதி உள்ளது.


பாடியவர்கள் : சுந்தரர்

தேவாரப்பதிகம்

ஊர்தொறும் வெண்டலை கொண்டு உண்பலி இடும்என்று வார்தரு மென்முலையாம் மங்கையொடும் உடனே கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில் ஆர்வன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 3வது தலம்.


முகவரி : அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர் - 608 702 கடலூர் மாவட்டம்.