HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கண்டலம்


இறைவன்சிவாநந்தீஸ்வரர்
இறைவிஆனந்தவல்லி
தல மரம்கள்ளி
தீர்த்தம்நந்தி தீர்த்தம்
புராண பெயர்திருக்கள்ளில்
கிராமம்/நகரம்திருக்கண்டலம்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, வடக்கு உயர்ந்து தெற்கு பகுதி தாழ்வாகியது. இதனால் பூமி சமநிலை இழக்கவே சிவன், அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார்.

சிவனது திருமணத்தை தானும் காண வேண்டுமென விரும்பிய அகத்தியர் அவரிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்காட்சியை தரிசிக்கும்படி வரம் பெற்றார். தென்பகுதியை நோக்கி வந்த அகத்தியர், திருப்பாலைவனம் தலத்தை வணங்கிவிட்டு அங்கு தங்கியிருந்தார்.

அன்று இரவு அவரது கனவில் சிவன் தோன்றி, இத்தலத்தையும், தீர்த்தத்தையும் குறிப்பால் உணர்த்தி, சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். பின் அகத்தியர் இத்தலம் வந்து சுவாமியை வழிபட்டார். சிவன், அம்பாளுடன் திருமணக்காட்சி காட்டியருளியதோடு, முருகனோடு சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். அவரது தரிசனத்தால் அகத்தியர் சிவ ஆனந்தம் அடைந்தார்.

தனக்கு அருள்புரிந்தது போலவே இத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருளவேண்டும் என வேண்டினார் சிவனிடம் அகத்தியர் வேண்டினார். சிவனும் இங்கு சுயம்புவாக எழுந்தருளி "சிவாநந்தீஸ்வரர்' என்ற பெயரும் பெற்றார்.


திருவிழா : திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி.
சிறப்பு : இக்கோயிலில் சிவன், "சக்தி தெட்சிணாமூர்த்தி'யாக தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கைகளில் அமுத கலசமும், ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தலத்தின் தல விநாயகர் திருநாமம் சுந்தர விநாயகர். மூலவரின் மேல் உள்ள விமானம்: கஜபிருஷ்டம்
பிரார்த்தனை : பிரிந்திருக்கும் தம்பதியர்கள் தெட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கள்ளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

திருமணத்தடைகள் நீங்கும், வறுமை நீங்கி செல்வசெழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன் : சுவாமி, அம்பாள் மற்றும் தெட்சிணாமூர்த்திக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்கின்றனர்.
தல சிறப்பு : சக்தி தெட்சிணாமூர்த்தி: பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர். ஒருசமயம் சிவனைப் பார்க்க அவர் கைலாயம் சென்றார். அங்கு சிவன், பார்வதியுடன் அமர்ந்திருந்தார்.

அருகில் சென்ற பிருகு, சிவனை மட்டும் வணங்கி அவரை சுற்றி வந்தார். இதைக்கண்ட பார்வதி தேவி மனதில் கோபம் கொண்டாள். பிருகு தன்னையும் சேர்த்து வணங்க வேண்டும் என நினைத்த அவள் சிவனை ஒட்டியபடி அமர்ந்து கொண்டாள். பிருகுவோ வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்தார். சிவமும், சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன், தன் இடப்பாகத்தில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அப்போதும் பிருகு முனிவருக்கு மனதில் திருப்தி ஏற்படவில்லை. "என்னதான் இருந்தாலும் சிவன்தானே பெரியவர்!' என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது.

பின்னர் பிருகு பூலோகத்தில் சிவதல யாத்திரை வந்தபோது, கள்ளில் (ஒரு வகையான மரம்) வனமாக இருந்த இங்கு அகத்தியர் பூஜித்த சுவாமியை கள்ளில் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது சிவன் அவர் முன்பு தோன்றி, "சிவமும், சக்தியும் ஒன்றுதான். சக்தி இல்லாமல் சிவமும், சிவம் இல்லாமல் சக்தியும் இருக்க முடியாது' என்று உபதேசம் செய்து, அம்பாளை தன் மடியில் அமர வைத்து சக்தியுடன் இணைந்த தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்தார். பிருகு உண்மையை உணர்ந்தார்.

ஆனந்தவல்லி அம்பாள்: சக்தியின் பெருமையை உணர்ந்த பிருகு முனிவர், அம்பாளிடம் தன் செயலை மன்னிக்கும்படி வேண்டினார். இதனால் அம்பாள் மனதில் ஆனந்தம் கொண்டதோடு தன்னையும், சிவனையும் வழிபட்டு ஆனந்தமாக இருக்கும்படி அருளினாளாம். எனவே, அம்பாள் "ஆனந்தவல்லி' என்ற பெயர் பெற்றாள். இவள் சுவாமிக்கு இடது புறத்தில் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது இடக்கை பாதத்தை நோக்கி காட்டியபடியும், வலது கை அருள் வழங்கும் கோலத்திலும் இருக்கிறது. இதனை, தன் பாதத்தை சரணடைபவர்களுக்கு என்றும் குறைவிலாத ஆனந்தத்தையும், அருளையும் அம்பாள் தருவாள் என்பதை உணர்த்தும் கோலம் என்கிறார்கள்.

சிறப்பம்சம்: திருவெண்பாக்கம் (பூண்டி) தலத்திற்கு சென்ற திருஞானசம்பந்தர் சிவனை வணங்கி விட்டு தன் யாத்திரையை தொடர்ந்தார். அவர் குசஸ்தலை ஆற்றின் கரையில் தான் கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்கள், விபூதி பிரசாதம் ஆகியவற்றை வைத்துவிட்டு குளிக்கச் சென்றார். குளித்துவிட்டு திரும்பி வந்தபோது அப்பொருட்களைக் காணவில்லை. அதனைத் தேடிய சம்பந்தர் இங்கு வந்தபோது, சுயம்பு லிங்கத்திற்கு அருகே பூஜை பொருட்கள் இருந்ததைக் கண்டார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வரவேண்டும் என்பதற்காகவே பூஜைப்பொருட்களை மறையச்செய்து அருள் செய்ததாக அசரீரியாக ஒலித்தார் சிவன். பின் சம்பந்தர் சுவாமியை வணங்கி பதிகம் பாடினார்.

பிரம்ம முருகன்: இக்கோயில் குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. சுவாமி, அம்பாள் சன்னதியில் எப்போதும் அணையா விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. பிருகு முனிவர் கள்ளி மலர்களால் பூஜித்த சிவன் என்பதால் சுவாமிக்கு "திருக்கள்ளீஸ்வரர்' என்ற பெயரும், தலத்திற்கு "திருக்கள்ளில்' என்ற பெயரும் இருக்கிறது. அகத்தியருக்கு காட்சி தந்தது போலவே சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் தனிச்சன்னதியில் அமைந்து சோமாஸ்கந்த வடிவமாக இக்கோயில் இருக்கிறது.

இவர் வலது கையில் ஜெபமாலை, இடக்கையில் தீர்த்த கலசத்துடன் பிரம்மாவின் அம்சத்துடன் தனியே நின்ற கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. இங்குள்ள நந்தி மிகவும் விசேஷமானது.

இவரது பெயரிலேயே சிவனை "சிவா நந்தீஸ்வரர்' என்றும், தீர்த்தத்தை "நந்தி தீர்த்தம்' என்றும் அழைக்கின்றனர். பிரகாரத்தில் சுந்தர விநாயகர், காளத்தீஸ்வரர், ஆஞ்சநேயர், நெல்லி மரத்தின் கீழே நாகர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரும் இருக்கின்றனர். பொருள்களை திருட்டு கொடுத்தவர்கள் பைரவருக்கு மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அப்பொருள் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவ்வாறு பொருள்கள் கிடைத்துவிட்டால் இவருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.


பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான் ஓடுஅலாற் கலன்இல்லான் உறைபதியால் காடுஅலாற் கருதாத கள்ளின் மேயான் பாடெலாம் பெரியார்கள் பரசுவாரே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 18வது தலம்.


முகவரி : அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்- 601 103. ஊத்துக்கோட்டை தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.