HolyIndia.Org
Holy India Org Add New Temple

தாராசுரம்


இறைவன்வீரபத்திரர்
இறைவிபத்திரகாளி
தல மரம்வில்வம்
புராண பெயர்தாரகவனம்
கிராமம்/நகரம்தாராசுரம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : உத்தரகாண்டம் பாடிய ஒட்டக்கூத்தர், வீரபத்திரரின் பக்தராக இருந்தார். அவர் ராஜராஜ சோழனிடம் வீரபத்திரருக்கு கோயில் கட்டும்படி கூறினார். மன்னனும் அதை ஏற்று, இங்கு கோயில் கட்டினான். கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள வீரசைவ மடத்தில் தங்கியிருந்த ஒட்டக்கூத்தர், தினமும் இங்கு வந்து வீரபத்திரரை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருசமயம் ஒட்டக்கூத்தர் தங்கியிருந்த மடத்தின் வழியே ஒருவர், தேவாரப்பாடல் பாடியபடி சென்றார். ஒட்டக்கூத்தர் அவரிடம் பாடலின் பொருள் கேட்டார். அவரோ பொருள் தெரியாது என்றார். இதைக்கேட்ட ஒட்டக்கூத்தர் கோபத்தில் அவரை அடிக்கவே, அவர் இறந்து விட்டார். இறந்தவரின் உறவினர்கள் ஒட்டக்கூத்தரை தேடி வந்தனர். நடந்ததை மன்னனிடம் கூறிய ஒட்டக்கூத்தர், ஓரிடத்தில் மறைந்து கொண்டார். நற்புலவரை இழக்கக்கூடாது என்று எண்ணிய மன்னன், ஒரு பல்லக்கில் தன் மகனை அமர்த்தி, "இவர்தான் ஒட்டக்கூத்தர். கொடிய செயல் செய்த இவரை நீங்கள் பார்ப்பதுகூட பாவம்தான். எனவே பல்லக்கில் வைத்தே கொன்றுவிடுங்கள்!' என்று சொல்லி அனுப்பி வைத்தான். கூட்டத்தினர் சந்தேகப்பட்டு பல்லக்கைத் திறந்தபோது மன்னனின் மகன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது ஒட்டக்கூத்தர் ஓடிவந்து,""நான் செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை! தினமும் தாராசுரம் வீரபத்திரரை தரிசிப்பது என் வழக்கம். இன்று என்னால் அந்த கடமையை நிறைவேற்ற முடியவில்லை. எனவே நான் இறக்கும் முன் சுவாமியை வழிபட அனுமதியுங்கள்,'' என்றார். அவர்களும் ஏற்றுக்கொண்டனர். ஒட்டக்கூத்தர் வீரபத்திரரை தரிசித்துவிட்டு, அருகிலிருந்த முளைச்சாளம்மன் (மோட்சாளம்மன்) சன்னதிக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டார். கூட்டத்தினர் அவருக்காக காத்திருந்தனர். நள்ளிரவாகியும் அவர் வெளியே வரவில்லை. கூட்டத்தினரும் அவரை விடுவதாக இல்லை. கலங்கிய ஒட்டக்கூத்தர் அம்பிகையிடம் தன்னை காக்கும்படி வேண்டினார். அம்பாள் அவருக்கு காட்சி தந்து, ""உனது மானசீக தெய்வமான வீரபத்திரர், தட்ச யாகத்தை வென்றதை பற்றி பரணி பாடு! அவரருளால் நீ காப்பாற்றப்படுவாய்!'' என்றாள். ஒட்டக்கூத்தரும் "தக்கயாகப்பரணி' பாடினார்.

மறுநாள் அதிகாலையில் தான் எழுதியதை ஒரு ஜன்னல் வழியாக வெளியில் இருந்தவர்களிடம் கொடுத்தார் ஒட்டக்கூத்தர். அதை படித்தவர்கள் மகிழ்ந்து, ஒட்டக்கூத்தரை பாராட்டிவிட்டுச் சென்றனர். அதன்பின் அந்நூலை முறையாக அரங்கேற்றம் செய்தார் ஒட்டக்கூத்தர். தக்கயாகப்பரணி இயற்றப்பட்ட தலம் இது.


திருவிழா : ஒட்டக்கூத்தர் குருபூஜை, சிவராத்திரி, ஆவணி உத்திராடம் நட்சத்திரத்தன்று குருபூஜை.
சிறப்பு : தமிழ் புலவர் ஒட்டக்கூத்தர் முக்தியடைந்த தலம் இது. இவர் இத்தலத்தில்தான் தக்கயாகப்பரணி இயற்றினார்.
திறக்கும் நேரம் : மாலை 5- 6 மணி. ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. பகலில் சுவாமியை தரிசிக்க முன்னரே அர்ச்சகரிடம் தொடர்பு கொண்டு செல்வது நல்லது.
பொது தகவல் : அஷ்ட பார்வை நந்தி: வீரபத்திரர் சிலையின் பின்புறம் மந்திர எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கிறது.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமை ராகு காலம் மற்றும் சித்ராபவுர்ணமி, சிவராத்திரி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை செய்கின்றனர். இவரது சன்னதி எதிரே எண்கோண அமைப்பிலுள்ள மண்டபத்தில் நந்தி இருக்கிறது. இந்த நந்தி எட்டு திசைகளையும் பார்த்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். பத்ரகாளி, சம்பந்தர் சன்னதிகளும் உள்ளன. அமைப்பு: சாந்த வீரபத்திரர்


பிரார்த்தனை : கல்வியில் சிறப்பிடம் பெறவும், பேச்சுத்திறமை உண்டாகவும் இத்தல வீரபத்திரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு : ஒட்டக்கூத்தரின் அதிஷ்டானம் (சமாதி) வீரபத்திரர் சன்னதிக்கு பின்புறம் இருக்கிறது. இதற்கு மேல் ஒரு லிங்கமும், எதிரில் நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

ஆவணி உத்திராடம் நட்சத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டும் விசேஷ பூஜை செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு நடக்கிறது.

வழக்கமாக உக்கிரமாக அருள்பாலிக்கும் வீரபத்திரர் இத்தலத்தில் சாந்தவீரபத்திரராக அருள்பாலிக்கிறார்.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், தாராசுரம் - 612 702. கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.