HolyIndia.Org
Holy India Org Add New Temple

செண்பகபுரம்


இறைவன்ஆதிகும்பேஸ்வரர்
தல மரம்அரசு, வேம்பு
புராண பெயர்செண்பகபுரி
கிராமம்/நகரம்செண்பகபுரம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : ஒருசமயம் கைலாயம் சென்ற நாரதர், பார்வதியிடம் ஒரு கனியை கொடுத்தார். அக்கனியை முருகனுக்கு தருவதா? விநாயகருக்கு தருவதா? என அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது. எனவே, உலகத்தை முதலில் சுற்றி வருபவருக்கு கனியை தருவதாக கூறினார் சிவன். முருகன் மயிலில் உலகத்தை சுற்ற கிளம்பினார். விநாயகரோ, பெற்றோரை சுற்றி வந்து கனியை வாங்கிக் கொண்டார். எனவே, கோபம் கொண்ட முருகன், அம்பிகை தடுத்தும் கேட்காமல் பழநிக்குச் சென்றார்.

அதன்பின் தன்னால் தம்பி, பிரிந்து சென்றதை எண்ணிய விநாயகர் மனம் வருந்தினார். தனக்கு விட்டுக்கொடுக்கும் பக்குவம் இல்லாமல் போனதை எண்ணி கலங்கினார். எனவே பூலோகத்தில் தவமிருந்து, மன அமைதி பெற அனுமதிக்கும்படி பெற்றோரிடம் வேண்டினார். சிவன், அம்பிகை இருவரும் அவரை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை.

சிவன் அவரிடம் பூலோகில் செண்பக மரங்கள் நிறைந்த இத்தலத்தில் தவம் இருக்கும்படி கூறினார். அதன்படி இத்தலம் வந்த விநாயகர், தவமிருந்தார்.

விநாயகர் முழுமுதற்கடவுள் என்றாலும், அவரும் ஒரு தாய்க்கு பிள்ளைதான் அல்லவா! வனத்தில் தனியே தவமிருக்கும் தன் மகனுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று சிவனிடம் வேண்டினாள். எனவே, சிவபெருமான் இத்தலம் வந்து விநாயகரை சுற்றிலும் ஐந்து இடங்களில் பஞ்சபூத வடிவில் பாதுகாப்பாக தங்கினார். இங்கே தவமிருந்த விநாயகர், சுயம்புமூர்த்தியாக எழுந்தருளினார்.


திருவிழா : விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை.
சிறப்பு : தந்தை பெயரில் விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : சிவன் கோயில் கோஷ்டத்தில் இருப்பது போலவே, மூலஸ்தான விமானத்தின் வலப்புறம் சிவன், பின்புறம் திருமால், இடப்புறம் பிரம்மா சிலை வடிவில் இருக்கின்றனர்.

சிவன் பஞ்சபூதங்களாக காத்தருளிய இடங்களில், லிங்க வடிவில் காட்சி தருகிறார். இங்கு பிற்காலத்தில் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோயில்களுக்கும், விநாயகர் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வேறு எந்த கோயிலும் இல்லை என்பது சிறப்பு.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பத்ம விமானம் எனப்படும்.


பிரார்த்தனை : செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டுபவர்கள், மன அமைதி பெற விரும்புபவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன் : விநாயகருக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு : சிவன் பெயருடன் விநாயகர்: சிவனில் இருந்து தோன்றியதால் முருகனை சிவ அம்சம் என்றும், அம்பிகையால் தோற்றுவிக்கப்பட்டதால் விநாயகரை சக்தி அம்சம் என்றும் கூறுவர். சிவமின்றி சக்தியும், சக்தியின்றி சிவமும் இல்லை. எனவே, விநாயகரையும் சிவ அம்சமாக கருதலாம். இவர் தந்தையின் "ஈஸ்வர' பட்டத்தையும் பெற்றிருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக இக்கோயிலில் விநாயகரே, சிவனாக கருதி வழிபடப்படுகிறார். சிவனின் பெயரால் இவர், "ஆதிகும்பேஸ்வரர்' என்று அழைக்கப்படுவது சிறப்பு.

ஏகாதச ருத்ரஜபம்: சிவனிடம் இருந்து படைப்புத்தொழிலை பெற்ற பிரம்மா, ஒரு கோடி உயிர்களை படைத்தார். ஆனால் அவர்களுக்கு அழிவு உண்டாகவில்லை. எனவே, பிரம்மா சிவனிடம் வேண்டினார். சிவன் அவரிடம், தான் தவத்தில் இருந்தபோது பிறந்ததால் அவர்களுக்கு அழிவில்லை என்றும், தன் பெயராலேயே அவர்கள் "ருத்ரர்கள்' என அழைக்கப்படுவர் என்றார். மேலும் அவர்களுக்கு படைப்புத்தொழிலுக்கு உதவியாக இருக்கும் பணியையும் கொடுத்தார். மகிழ்ந்த ருத்ரர்கள் யாகம் நடத்தி சிவனை வணங்கினர். சிவ அம்சமான ருத்ரர்கள் சிவனுக்குரிய உயர்ந்த மந்திரங்களை சொல்லி வணங்கி செய்த பூஜையே, "ருத்ரஜபம்' ஆகும்.

ஆனி மாதம் வளர்பிறை பூச நட்சத்திரத்தன்று, இக்கோயிலில் விநாயகருக்கு, சிவனுக்குரிய "ஏகாதச ருத்ரஜப பாராயணம்' நடக்கிறது. இந்த பாராயணத்தின் போது 11 வேதவிற்பன்னர்கள், சிவனுக்குரிய மந்திரங்களை 11 முறை சொல்லி பூஜை செய்கின்றனர். இந்த பாராயணம் கேட்பவர்களது பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சுயம்பு விநாயகர்: சுயம்பு மூர்த்தியான விநாயகர் முழு உருவமும் முறையான அமைப்பில்லாமல் காட்சி தருகிறார்.

சிறப்பம்சம்: தவம் செய்வதற்காக வந்தவர் என்பதால், இக்கோயிலில் விநாயகர் மட்டும் தனிக்கோயில் மூர்த்தியாக இருக்கிறார். பிரகார தெய்வங்கள் ஏதுமில்லை. கோயில் வளாகத்தில் ஒரு அரச மரம் உள்ளது. இம்மரத்திற்குள் ஒரு நாகர் சிலை இருக்கிறது. இதை வெளியில் இருந்து பார்க்க முடியாது. இதற்கு முன்னால் நாகதீபம் ஒன்று இருக்கிறது. இந்த தீபம் நாகம் போலவே, வளைவாக அமைக்கப்பட்டிருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த தீபத்தில் விளக்கேற்றி, மரத்திற்கு வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில், செண்பகபுரம். மோகனூர் போஸ்ட் கீவளூர் தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்- 611 109.