HolyIndia.Org
Holy India Org Add New Temple

சீர்காழி வரலாறு

திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த பதி.ஞானப்பால் அருந்திப் பாடிய பதி. இதற்குப் பன்னிரண்டு பெயர்கள் உண்டு. பிரமபுரம்-பிரமன் வழிபட்டதால் இப் பெயர். வேணுபுரம்-இறைவன் மூங்கில் வடிவில்(வேணு-மூங்கில்) தோன்றினான். புகலி-சூரனுக்குப் பயந்த தேவர்களின் புகலிடமாய் விளங்கியது. வெங்குரு-குரு பகவான் வழிபட்டது. தோணிபுரம்-பிரளயகாலத்தில் இப் பதி தோணியாய் மிதந்ததால் இப் பெயர்.பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சித் தந்ததால் இப் பெயர். பூந்தராய்-பூமியைப் பிளந்து சென்று இரணியாக்கதனைக் கொன்ற வராகமூர்த்தி(திருமால்) வழிபட்டது. சிரபுரம்-சிரசின்(தலை)கூறாய் உள்ள இராகுக் கிரகம் பூசித்தது. புறவம்-புறா வடிவத்தில் வந்த அக்கினியால் சிபிச்சக்கரவர்த்தி பேறு பெற்றது. சண்பை-சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த குலத்தோரால் நேர்ந்த பழி தீரக் கண்ணபிரான்(திருமால்) வழிபட்டது. சீகாளி(ஸ்ரீகாளி)-காளிதேவி,சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வறம் நீங்க , வழிபட்டது. கொச்சைவயம்-மச்சகந்தியைக் கூடிய கொச்சை(பழிச்சொல்) நீங்கப் பராசரர் வழிபட்டது. கழுமலம்-மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டது. குரு,இலிங்க,சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீஸ்வரர் இலிங்கமாகவும்,ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளது.ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும்,பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து,சிவஞானச்செல்வத் தை அளிப்பதற்குக் குருவடிவமாயும்,பேரின்ப சித்திகளை அருளுவதற்கு சங்கமவடிவாயும் ,இறைவன் உள்ளார். சட்டைநாத சுவாமி இங்கு முக்கிய தெய்வமாகும்.இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து,அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால்,இப் பெயர். சிறப்புக்கள் நாவுக்கரசர், சம்பந்தரின் நட்பைப் பெற்று,அவரால் அப்பர் எனப் பெயரும் பெற்றப் பதி. சுந்தரர் இங்கு வந்தபோது,இது,சம்பந்தப் பெருமான் அவதரித்தபதி என்று மிதிப்பதற்கு அஞ்சி நகர்புறத்து நின்று பாட, இறைவர் காட்சி தந்த பதி. திருநீலகண்ட யாழ்ப்பாணர்,சம்பந்தரை வணங்கி,அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து, சம்பந்தருடன் இருக்கும் பெருமைப் பெற்ற பதி. கணநாத நாயனார் அவதரித்தத் திருப்பதி. பிற்கால சோழ,பல்லவ,விஜயநகர கல்வெட்டுகள் மொத்தம் நாற்பத்தாறு உள்ளது. பட்டினத்து அடிகள் மும்மணிக்கோவை இயற்றியுள்ளார். இது பதினொன்றாம் திருமுறையில் உள்ளது. இது, தருமைபுர ஆதீனத்துக்குச் சொந்தமானது. சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

சீர்காழி - சீர்காழி ஆலய அமைப்பு - சீர்காழி இறைவன் - சீர்காழி கல்வெட்டுகள் - சீர்காழி கோயில் - சீர்காழி கோவிலில் வழிபட்டோர் - சீர்காழி சம்பந்தர் ஞானப்பால் உண்டது - சீர்காழி திரிவிக்கிரமன் - சீர்காழி தேவாரம் - சீர்காழி புராண வரலாறு - சீர்காழி வரலாறு - சீர்காழி விழாக்கள் - சீர்காழி விஸ்வநாதர் - தலப் பெயர்கள் -