HolyIndia.Org
Holy India Org Add New Temple

சத்திரம்


இறைவன்குங்குமவல்லி அம்மன்
தல மரம்வில்வம்
கிராமம்/நகரம்சத்திரம்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : சூரவாதித்த சோழ மன்னன் ஒருமுறை நாகலோகம் சென்றான். அங்கிருந்த காந்திமதி என்ற நாககன்னிகையின் மீது அவனுக்கு காதல் ஏற்பட்டது. அவள் சிவபக்தை. தினமும் திருச்சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் தாயுமான சுவாமியை வணங்க வரும் வழக்கம் உடையவள்.

நாகலோகத் தலைவரான ஆதிசேஷனின் அனுமதி பெற்று காந்திமதியை சூரவாதித்தன் மணந்து கொண்டான். திருமணத்துக்கு பிறகும் மலையிலுள்ள சிவனை வணங்க காந்திமதி தவறவில்லை.

இந்நிலையில் அவள் கர்ப்பவதியானாள். அவளுக்கு மலையேற மிகவும் சிரமமாக இருந்தது. இந்த கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல், அவள் மலையேறத் தவறவில்லை. ஏற்கனவே, காவிரிக்கரையில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, "தாயும் ஆனவன்' என பெயர் பெற்ற சிவபெருமான், தன் பக்தையான காந்திமதியின் மீது இரக்கம் கொண்டார்.

ஒருநாள் காந்திமதியால் நடக்க முடியவில்லை. வயிற்றுப் பாரத்தையும் சுமந்து கொண்டு மலையில் எப்படி ஏறுவது என தவித்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட சிவன், தானே அங்கு தோன்றினார்.
""மகளே! காந்திமதி, கலங்காதே, இனி உனக்கு பிரசவம் ஆகும் வரை, நீ மலைக்கு வந்து என்னை தரிசிக்க வேண்டாம். இங்கேயே உனக்காக நான் லிங்கவடிவில் அமர்வேன். நீ இவ்விடத்திலேயே என்னை வணங்கி திரும்பலாம்.

தானாக உன் முன் தோன்றிய எனக்கு "தான் தோன்றீஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்படும். என் மனைவி பார்வதிதேவி, உன் போன்ற பெண்களுக்கு தாயாய் இருந்து பிரசவம் பார்ப்பாள். குங்குமம் காப்பாள். அவளுக்கு "குங்குமவல்லி' என்ற திருநாமம் ஏற்படும்,'' என்றார்.
காந்திமதி மகிழ்ச்சியடைந்து பிரசவ காலம் வரை அங்கு வந்து இறைவனை வணங்கி, அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தாள்.


திருவிழா : தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று அம்பாளுக்கு நடத்தப்படும் வளைகாப்பு வைபவம் மிகவும் விசேஷமானது. கர்ப்பிணி பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இங்கேயே வளைகாப்பை நடத்திச் செல்லலாம். இதுதவிர வழக்கமான சிவ திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.
சிறப்பு : இத்தலத்திலுள்ள குங்குமவல்லிக்கு வளையல் அணிவித்து பூஜை செய்வது விசேஷம். கர்ப்பிணிகளுக்கு ஸ்பெஷல் பிரசாதமாக வளையல் தரும் கோயில். செல்வவளம் தரும் மகாலட்சுமி சன்னதிக்கு நேராக வில்வதளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் விசேஷமான அமைப்பு.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : -
பிரார்த்தனை : கர்ப்பமடைந்த பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக, இங்கிருந்து வளையல் பிரசாதம் பெற்று அணிந்து கொள்கின்றனர்.

நிறை மாத கர்ப்பிணிகளுக்கு வீட்டிலிருந்து யாராவது வந்து வளையல் வாங்கிச் சென்று வீட்டிலேயே அணிவிக்கலாம்.

ஏற்கனவே வளைகாப்பு முடிந்திருந்தாலும், இவ்வளையலை கூடுதலாக அணிந்து கொள்ளலாம். இந்த பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகிறது.


நேர்த்திக்கடன் : குழந்தை பிறந்த பிறகு 41 நாட்கள் கழித்து, மீண்டும் கோயிலுக்கு வந்து அம்பிகைக்கு நம்மால் ஆன அளவு எண்ணிக்கையில் வளையல் பூட்ட வேண்டும். வளையல் மாலையும் அணிவிக்கிறார்கள்.
தல சிறப்பு : இக்கோயிலில் இருக்கும் நூதன ஜெய காளி மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அப்படியே நடக்கும் என்பது நம்பிக்கை.

பவுர்ணமியன்று காளிக்கு பூஜை செய்தால் எப்பேர்ப்பட்ட மனக்கஷ்டமும் நீங்கும். கை, கால் வலி உள்ளவர்கள் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

செல்வவளம் தரும் மகாலட்சுமி சன்னதிக்கு நேராக வில்வதளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமியின் அம்சமே வில்வம் என்பதால், இத்தகைய அமைப்பு இயற்கையாகவே ஏற்பட்டுள்ளது போலும். இது மிகவும் விசேஷமான அமைப்பு.

இங்குள்ள பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் பூஜை செய்தால் தரித்திர நாசம் ஏற்படும். செல்வ விநாயகர், நடராஜர் சன்னதிகளும் இங்கு உள்ளன.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு குங்குமவல்லி அம்மன் திருக்கோயில், சத்திரம் - திருச்சி மாவட்டம்.