HolyIndia.Org
Holy India Org Add New Temple

கோழிகுத்தி


இறைவன்வான்முட்டி பெருமாள்
இறைவிமகாலட்சுமி
தீர்த்தம்பிப்பல மகரிஷி தீர்த்தம்
புராண பெயர்"கோடிஹத்தி
கிராமம்/நகரம்கோழிகுத்தி, மயிலாடுதுறை
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : முன்னொரு காலத்தில் குடகுமலைச்சாரலில் நிர்மலன் என்ற அரசன் வாழ்ந்தான். அவன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டான். ஒருமுறை, அவன் காட்டு வழியாக வந்து கொண்டிருந்த போது, முனிவர் ஒருவர் வீணை மீட்டி மிகவும் இனிமையாக பாடிக்கொண்டிருந்தார். அவரிடம் மன்னன் தன் நோய் பற்றி வருந்தி முறை யிட்டான். இதனைக்கேட்ட முனிவர் மன்னனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் செய்து, அதை தினமும் ஜெபிக்கும்படி கூறினார்.முனிவர் கூறியபடி மன்னனும் அந்த மந்திரத்தை உருகி ஜெபிக்க தொடங்கினான். அப்போது அசரீரி ஒலித்தது.""நான் பெருமாளின் குரலாய் ஒலிக்கிறேன். உனக்கு ஒரு கடுமையான தோஷம் உள்ளது. இந்த தோஷம் நீங்க காவிரிக்கரை வழியாக உன் யாத்திரையை தொடங்கு. மூவலூரில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் (சிவன்) உனக்கு வழிகாட்டியாக வருவார்.வழியில் உள்ள திருத்தலங்களில் எல்லாம் நீராடு. எங்கு உன்மேனி பொன் வண்ணமாக மாறுகிறதோ, அங்கேயே தங்கிவிடு,''என்றது.அதன்படி, மன்னன் காவிரிக்கரை வழியாக தன் பயணத்தை துவக்கினான்.ஓரிடத்தில் அவனது மேனி பொன்நிறமாக மாறியது. மகிழ்ச்சியடைந்த மன்னன் பெருமாளுக்கு நன்றி கூறி மனமுருகி வழிபட்டான். அந்த இடத்தில் ஒரு பெரிய அத்திமரம் தோன்றியது. அந்த மரத்தில் நாராயணன், சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் மன்னனுக்கு காட்சி கொடுத்தார்.மன்னனின் பாவங்கள் இங்கு உடனடியாக நீங்கியதால் இத்தலம் "கோடிஹத்தி' என அழைக்கப்பட்டது. "கோடிஹத்தி' என்றால் "சகல பாவமும்நீங்குமிடம்' என்று பொருள். இதுவே, காலப்போக்கில் மருவி "கோழிகுத்தி' ஆனது.  இதன் பின் மன்னன் பெருமாள்  பக்தனாகி தவமிருந்து ரிஷியாகவே மாறி விட்டான். "பிப்பல மகரிஷி' என மன்னனை மக்கள் அழைத்தனர். பிப்பலர் காவிரிக்கரையில் தவம் புரிய ஆரம்பித்தார். அவர் தவம் செய்த இடத்தில் தற்போது ஒரு மண்டபம் உள்ளது. இதன் அருகில் ஓடும் காவிரி தீர்த்தத்தை "பிப்பல மகரிஷி தீர்த்தம்' என அழைக்கிறார்கள்.


திருவிழா : வைகுண்ட ஏகாதசி
சிறப்பு : இங்கு பெருமாள் அத்திமரத்தால் ஆனவர். இங்கு ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை எழுகின்றது.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : கருடாழ்வார், ராமானுஜர், விஸ்வக்ஷேனர் ஆகியோரும் இங்கு அருள் பாலிக்கிறார்கள். இத்தலத்தின் அருகிலுள்ள மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயிலில் பிப்பலருக்கு சிலை உள்ளது.
பிரார்த்தனை : சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்யலாம்
நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தல சிறப்பு : திருப்பதி சீனிவாசப்பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாக தரிசித்த பலன், கோழிகுத்தி வான்முட்டி பெருமாளை தரிசித்தால் கிடைக்கும்.  800 ஆண்டுகள் பழமையான வான்முட்டி பெருமாள் கோயில் உள்ளது.வேருடன்கூடிய ஒரு அத்தி மரத்தில் 15 அடி உயரத்திற்கு சீனிவாச பெருமாள் விசுவரூப தரிசனம் தருவது காணக் கிடைத்தற்கரிய ஒரு காட்சி.

பிற்காலத்தில் இத்தலத்தின் பெருமைகளை கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மகாராஜா பெருமாளிடம்,""பகவானே! எனக்கும் யுத்த தோஷம் உள்ளது. அதை நீக்கி அருள்புரிய வேண்டும்,''என வேண்டிக் கொண்டார். அவருக்கும் பெருமாள் இந்த அத்தி மரத்தில் அருள்பாலித்தார். இதனால் மகிழ்ந்த மன்னர் தன்னைப் போல அனைவரும் பலனடைய அத்திமரத்தில் 15 அடி உயரத்தில் சிலை வடித்து பூஜை செய்தார்

மார்பில் மகாலட்சுமி: சீனிவாசப் பெருமாள் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஏந்தி, மார்பில் மகாலட்சுமி யுடன் அருள்பாலிக்கிறார். இவர் மிகப்பிரமாண்டமாக விஸ்வரூபத்தில் அமைந்திருந்ததால் "வான்முட்டி பெருமாள்' என அழைக்கின்றனர். இவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால், அபிஷேம் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. உற்சவமூர்த்தியாக உள்ள யோக நரசிம்மருக்கே அபிஷேகம்.

சப்தஸ்வர ஆஞ்சநேயர்: வான்முட்டி பெருமாளின் மார்பில் இருக்கும் மகாலட்சுமி, அவரது அருகில் சிலைவடிவிலும் அருள் செய்கிறாள். ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை எழுகின்றது. இதன் காரணமாக இந்த பெயர் ஏற்பட்டது. மேலும் ஆஞ்சநேயரின் வாலில் கட்டப்பட்டுள்ள மணியை தலைமீது தூக்கி வைத்துள்ளார்.

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்து இன்னல்கள் நீங்கியதாக கல்வெட்டு உள்ளது.  பிப்பல மகிரிஷி பாடிய ஸ்லோகம் இக்கோயில் வழிபாட்டு நேரங்களில் சொல்லப்படுகிறது. பலருக்கும் பலவிதமான பலன்களை அள்ளித்தந்த பெருமாள் கோயில்.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில், மயிலாடுதுறை- 609001. நாகப்பட்டினம் மாவட்டம்.