HolyIndia.Org
Holy India Org Add New Temple

கண்ணங்குடி


இறைவன்வரதராஜப்பெருமாள்
இறைவிஸ்ரீதேவி, பூதேவி
தீர்த்தம்பெருமாள் குளம்
கிராமம்/நகரம்கண்ணங்குடி
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : இவ்வூரில் வசித்த பெருமாள் பக்தர் ஒருவருக்கு ஊரில் பெருமாளுக்கு கோயில் இல்லை என்ற மனக்குறை இருந்தது. அவருக்கு இங்கு கோயில் கட்ட, அருளும்படி சுவாமியிடம் வேண்டிக்கொண்டார். ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், அருகிலுள்ள ஒரு குளத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கு தனது சிலை வடிவம் இருப்பதை உணர்த்தினார். அதன்படி, ஏரிக்கு சென்ற பக்தர் சிலை இருந்ததைக் கண்டார். அச்சிலையை இங்கே பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். சுவாமிக்கு வரதராஜப்பெருமாள் என்ற பெயர் சூட்டப்பட்டது.
திருவிழா : சுவாமியை இங்கு ஒரு வைகாசி மாத அஸ்தம் நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்தனர். அன்று சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும். வெள்ளிக்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வரும் அஸ்தம் நாட்களிலும் விசேஷ திருமஞ்சனம் உண்டு.
சிறப்பு : சுவாமி சன்னதி முன் அர்த்தமண்டபத்தில் வானர ஆஞ்சநேயர் இருக்கிறார். இவர் தலையில் கிரீடம் இல்லாமல், ராமபிரானுக்கு உதவி செய்தபோது இருந்த அமைப்பில், வானரம் போலவே இருக்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : அளவில் சிறிய கோயில் இது. கோபுரம் கிடையாது. கோயிலுக்குப் பின்புறம் பெருமாள் தீர்த்தக் குளம் உள்ளது.

பிரார்த்தனை : இங்கு சுவாமியின்நட்சத்திரமாக அஸ்தம் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தோருக்கான பரிகாரத் தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகளாலும், இதர கிரக சஞ்சாரத்தால் ஏற்படும் தீமையில் இருந்தும் நிவர்த்தி பெற, இந்த நட்சத்திரக்காரர்கள் இங்குவேண்டிக்கொள்கிறார்கள். திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் கிடைக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, வளமான வாழ்வு அமைய தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செலுத்தி மற்றும் சர்க்கரைப் பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
தல சிறப்பு : வானர அமைப்பில் ஆஞ்சநேயர்: ஏகதள விமானத்தின் கீழ், வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சுவாமி சன்னதி முன் அர்த்தமண்டபத்தில் வானர ஆஞ்சநேயர் இருக்கிறார். இவர் தலையில் கிரீடம் இல்லாமல், ராமபிரானுக்கு உதவி செய்தபோது இருந்த அமைப்பில், வானரம் போலவே இருக்கிறார். கூப்பிய இரு கைகளுக்கு நடுவே ஜபமாலை வைத்திருக்கிறார். சுவாமி எதிரேயுள்ள மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். இங்கு பெருமாளின் தசாவதார ஓவியங்களும், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களும் தொகுப்பாக எழுதப்பட்டுள்ளது.

சன்னதியே சொர்க்கம்: வேண்டும் வரங்களைத் தருபவர் என்பதால் இவருக்கு, "வரம் தரும் வரதராஜர்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவரை வணங்கினாலே வாழும் காலத்தில் சொர்க்கமும், வாழ்க்கைக்குப் பின் மோட்சமும் கிடைக்குமென்பது ஐதீகம். எனவே, இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமி சன்னதிக் கதவையே சொர்க்கவாசலாகத் திறக்கின்றனர். சுவாமி, இவ்வாசல் வழியே வெளியேறுவார். அப்போது, சொர்க்கவாசல் கடக்கும் உற்சவ மூர்த்தி மற்றும் பிரதான சன்னதியிலுள்ள மூலவர் வரதராஜர் என இருவரையும் ஒன்றாகத் தரிக்கலாம்.

திருமண பிரார்த்தனை: ஜாதக ரீதியாக வியாழ பகவான் பார்வையிருந்தால்தான், திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதையே, "குரு பார்வை' என்பர். இந்த பாக்கியம் கிடைக்க வியாழக்கிழமைகளில் வரதராஜப் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள். ஐஸ்வர்யம் உண்டாக, குடும்பம் சிறக்க, வளமான வாழ்வு கிடைக்கவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கீரப்பாளையம் வழி, கண்ணங்குடி - 608 602, எண்ணாநகரம் போஸ்ட், சிதம்பரம் தாலுகா,கடலூர் மாவட்டம்.