HolyIndia.Org
Holy India Org Add New Temple

கண்டியூர் ஆதிவில்வாரண்யம்


இறைவன்பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்
இறைவிமங்களாம்பிகை
தல மரம்வில்வம்
தீர்த்தம்நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம்
புராண பெயர்திருக்கண்டியூர்
கிராமம்/நகரம்கண்டியூர்,ஆதிவில்வாரண்யம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றை கண்டனம் செய்த (கொய்த)காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் என பெயர் பெற்றது. சாதாதாப முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டுவரப்பட்டதால் இத்தலத்திற்கு "ஆதி வில்வாரண்யம்' என்றும் பெயர். சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்வது வழக்கம். ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு நேரத்தில் செல்ல முடியாமல் போனது. அப்போது இறைவன் அவரக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.

பிரமமகத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது.


திருவிழா : மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரியன் வழிபட்ட தலமாதலால் மாசிமாதம் 13, 14, 15ம் தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளி சுவாமி மீது படுகின்றது. இத்தலம் அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று.
திறக்கும் நேரம் : காலை 6 முதல் மதியம் 1 மணிவரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணிவரையிலும் இறைவனை தரிசிக்கலாம்.
பொது தகவல் : ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கவசமிட்ட கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கொடிமர விநாயகர் காட்சி தருகிறார்.

கல்வெட்டில் இப்பெருமான் பெயர் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூர் உடைய மகாதேவர் என குறிக்கப்பெறுகின்றது.


பிரார்த்தனை : பிரம்மகத்தி தோஷம் நீங்கவும், அழகு வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.


நேர்த்திக்கடன் : சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு : தண்டபாணி சந்நிதி தனி கோயிலாக மண்டபத்துடன் உள்ளது. இம்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்புடையது. சப்தஸ்தானத் திருவிழாவில்(ஏழூர் திருவிழாவில்) சுவாமி இங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி நின்றகோலத்தில் நான்கு கரங்களை உடைய அபயவரதத்துடன் அருள்பாலிக்கிறார். உள்ளே விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராஜர், விஷ்ணு துர்க்கை, பைரவர், பலவகை விநாயகர், அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிகள் உள்ளது.சண்டேஸ்வரர் சன்னதி தனி கோயிலாக உள்ளது. கோஷ்ட மூர்த்திகளாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.

துவாரபாலகர்களுக்கு பக்கத்தில் சாதாதாப முனிவர் உருவம் உள்ளது. சப்தஸ்தான லிங்கங்கள், பஞ்சபூத லிங்கங்கள், சாதாதாபருக்கு காட்சிதந்த காளத்திநாதர் சன்னதியும் உள்ளது. நவக்கிரகங்களில் சூரியன் இரு மனைவியருடன் காட்சி தருகிறார். மூலவர் சுயம்பு மூர்த்தி. பாணம் சற்று உயரமாக உள்ளது. சுவாமி சந்நிதிக்கு பக்கத்தில்பிரமன், சரஸ்வதி சிலாரூபம் உள்ளன. பிரமன் பூ, ஜபமாலை ஏந்தி, இரு கைகளும் பிரார்த்திக்கும் அமைப்பில் அமர்ந்த கோலத்தில் உள்ள இவ்வுருவம் அழகுடையது. பிரமன் சிரம் கொய்தபின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச்செய்ய, பிரமன் பெற்று பயனடைந்ததாக வரலாறு.

பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுக கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில், இடப்பால் பிரமன் சந்நிதிக்கு செல்லும் வாயிலில் சுவரையொட்டி கதவோரமாக சிறிய சிலாரூபமாக உள்ளது. நவக்கிரக சந்நிதியில் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக தீபங்கள் வைக்கும் அமைப்பில் மேடை அமைத்து கட்டப்பட்டுள்ளது.


பாடியவர்கள் : திருநாவுக்கரசர், சம்பந்தர், அருணகிரிநாதர்

தேவாரப்பதிகம்

பண்டங் கறுத்ததொர் கையுடையான் படைத்தான் தலையை

உண்டங் கறுத்ததும் ஊரொடு நாடவை தானறியும்

கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த

தொண்டர் பிரானைக் கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 12வது தலம்


முகவரி : அருள்மிகு பிரம்மசிரகண்டீசுவர் கோயில், கண்டியூர் தஞ்சாவூர் மாவட்டம்-613 202