HolyIndia.Org
Holy India Org Add New Temple

கடத்தூர்


இறைவன்அர்ச்சுனேஸ்வரர் (மருதவனஈஸ்வரர், திருமருதுடையூர், மருதீசர்)
இறைவிகோமதி அம்மன்
தீர்த்தம்அமராவதி
கிராமம்/நகரம்கடத்தூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : விக்கிரமசோழன் என்பவனது காலத்தில் காரத்தொழுவு எனும் கிராமத்திலிருந்து கொங்கேல சங்கு எனும் கிராமத்திற்கு நாள்தோறும் 60 குடம் பால் சென்று கொண்டிருந்தது. இதில் ஒவ்வொருநாளும் ஒரு குடம் பால் மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிந்திக்கொண் டிருந்தது. அந்த இடத்தை தோண்டிப்பார்க்கையில் ரத்தம் ஆறாக பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில்  கலந்து ரத்த ஆறாக ஓடியது. காரணம் அங்கிருந்த சிவலிங்கத்தின் தலையில் வெட்டப்பட்டிருந்தது தான்.இந்த வெட்டப்பட்ட பகுதியை நாம் இன்றும் கூட காணலாம். உடனே தான் இந்த சுயம்பு  லிங்கத்தினை வழிபடும் வழக்கம் ஏற்பட்டு, பத்தாம் நூற்றாண்டில் விக்கிரமசோழ தேவன் காலத்தில் கோயில்கட்டப்பட்டது.


திருவிழா : மகா சிவராத்திரி தான் இத்தலத்தின் மிகச்சிறந்த திருவிழா ஆகும். இது தவிர மாதாந்திர பிரதோஷம், சிவராத்திரி, மற்றும் சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
சிறப்பு : இத்தல இறைவன் மிகப்பெரிய ஆவுடையாருடன் கூடிய மிகப்பெரிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
திறக்கும் நேரம் : காலை 8 மணிமுதல் மதியம் 12 வரையிலும் மாலை 4மணிமுதல் 6 வரையிலும் இறைவனை தரிசிக்கலாம்.பிரதோஷ காலங்களில் இரவு 7.30 வரை நடை திறந்திருக்கும்.
பொது தகவல் : கன்னி மூலையில் தல விநாயகரான வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதியும், வாயுமூலையில் சுப்பிரமணியருக்கும்  அதனருகில் சண்டிகேசுவரருக்கும் தனி சன்னதியும் ஈசான்ய மூலையில் சண்டிகேசுவரருக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது. 

சிவ சன்னதிக்கு முன் நந்தி அழகிய திருமேனியுடன் விமானத்துடன் கூடிய மண்டபத்தில் வீற்றிருக்கிறார். சிவ ன் கருவறையின் தெற்கு பக்கம்பளிங்கு கல்லால் ஆன தட்சிணாமூர்த்தியும், மேற்கு பக்கத்தில் நின்ற கோலத்தில் மகா விஷ்ணுவும் அருள்பாலிக்கிறார்கள்.

சிவன் சன்னதி முற்றத்தில் கிழக்கு வாசல் பகுதியில் 36 அடி உயர ராஜ கோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது.


பிரார்த்தனை : மிகப்பெரிய சுயம்பு மூர்த்தி. சர்வ வல்லமை பொருந்தியவர். எனவே எது கேட்டாலும் கிடைக்கும்.


நேர்த்திக்கடன் : சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம், அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
தல சிறப்பு : கோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய கருவறை விமானம்.

அத்துடன் மிகப்பெரிய ஆவுடையாருடன் கூடிய மிகப்பெரிய சுயம்பு லிங்கம்.
அமராவதி ஆறு மேற்கிலிருந்து வடக்கு பாகமாக வலம் வந்து கிழக்கு நோக்கி செல்கிறது. சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிரபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமராவதி நதிக்கரையில் மொத்தம் 11 சிவாலயங்கள் அமைந்துள்ளன. இதில் கடத்தூர் மட்டுமே சுயம்பு திருமேனியைக் கொண்டது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட பளிங்குக்கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி ஆகும்.

சிவன் கோயிலிலிருந்து அம்மன் கோயில் வலது பாகம் தனியாக பிரிக்கப்பட்டு மதில் சுவரும் எழுப்பப்பட்டு தனித்தனி ஆலயங்களாக அமையப் பெற்றுள்ளது. அத்துடன் இரண்டுக்கும் தனித்தனி முற்றங்கள், தனித்தனி வாசல்கள், தனித்தனி மடப்பள்ளிகள் என  எல்லாமே தனித்தனியாக அமைக்கப் பட்டுள்ளன.  அம்மன் சன்னதிக்கு அருகில் இடது பக்கம் அரளிச்செடியைப்பற்றி பெரிய புற்று லிங்கம் வளர்ந்து  வருகிறது.

சைவ வைணவ பேதமின்றி கருவறையின் மேற்கு பக்கம் விஷ்ணுவிற்கும் ஒரு தனி சன்னதி உள்ளது. மதுரை மீனாட்சி கோயிலைப்போல் இத்தலத்தில் சுவாமிக்கு வலது பக்கம் அம்மனின் ஆலயம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

கடத்தூர் என்ற பெயருக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் முக்கியமாக பஞ்ச பாண்டவர்கள் தங்களது வன வாச காலத்தில் இங்கு வந்து மறைந்து வாழ்ந்ததாகவும், அவர்களைக் கண்டு பிடிக்க இந்த ஊரில் உள்ள மாடுகளை கடத்திச்சென்று ஆற்றின் மறுகரையில் அடைத்து வைத்ததாகவும் அதனாலேயே இந்த இடம் காரைத் தொழுவு என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி கடத்தூர் ஆனது என  கூறுகிறார்கள்.


பாடியவர்கள் : -
முகவரி : கோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில், கடத்தூர்-642 203 கோயம்புத்தூர் மாவட்டம்.