HolyIndia.Org
Holy India Org Add New Temple

உப்பூர்


இறைவன்வெயிலுகந்த விநாயகர்
புராண பெயர்சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம், வன்னிமந்தார வனம்
கிராமம்/நகரம்உப்பூர்
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : இந்த திருக்கோயில் தோற்றம் பற்றி பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பிரஜாதிபதிகளுள் ஒருவனான தட்சன் தனது மகளான தாட்சாயிணியை மணந்த சிவபெருமான், தன்னை பணிய வேண்டும் என விரும்பினான். தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த ஒரு மாபெரும் வேள்வியை உருவாக்கினான். சிவபெருமான் தவிர ஏனைய வானவர்களும், தவசிகளும் தட்சனின் அழைப்பை பெற்று அதில் பங்கேற்றனர். இதனால் ஆத்திரமுற்ற பார்வதி தனது தந்தைக்கு புத்திகூற வந்தபோது அவமானப்படுத்தப்பட்டாள். தந்தையின் யாகத்தை அழிக்குமாறு வீரபத்திரரை அனுப்பினார். யாகத்தில் கலந்து கொண்டு தண்டனையும் பெற்ற சூரியன் தான் புரிந்த தவறுக்கு பரிகாரம் தேட முற்பட்டார்.

பாண்டி நாட்டில் கீழக்கடற்கரை ஓரமாக தேவிபுரம், காளிபுரம், திருப்புணவாயில் ஆகிய தலங்களுக்கு அருகே அமைந்துள்ள வன்னிமந்தாரவனம் என்ற பகுதியில் உள்ள விநாயகரை துதித்து தவத்தில் ஈடுபட்டார். ஆதவனின் தவத்தால் மகிழ்வுற்ற விநாயகர் உடன் காட்சியளித்து அவரது பாவங்கள் விலகுமாறு அருளினார். தனக்கு அருள்புரிந்ததுபோல் பக்தர்களுக்கும் அருள் வழங்குமாறு வெய்யோன் வேண்டினார். மேலும் திருமேனி மீது தனது ஒளிக்கதிர்கள் முழுமையாக விழுந்து வணங்க வழிகாட்டுமாறு சூரியன் வரம் பெற்றார். சூரியன் கதிர்கள் தன் மீது முழுமையாக வீசுமாறு கோயில் கொண்டதால் இப்பெருமானுக்கு வெயிலுகந்த விநாயகர் என்ற பெயர் நிலைத்தது.


திருவிழா : விநாயகர் சதுர்த்தி
சிறப்பு : விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
பொது தகவல் : பாண்டிய மன்னர்கள் காலத்திற்கு பிறகு ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்கள் அமைத்த உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன் : சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு : உப்பூர் சத்திரம் எனும் கிராமம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. சேதுகடற்கரை சாலை என்று அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கடற்கரை அருகே அமைந்த இந்த கிராமம் வடமொழியில் லவணபுரம் என வழங்கப்பட்டது. லவனம் என்ற வடசொல்லிற்கு தமிழில் உப்பு என்று பொருள். இதிலிருந்து உப்பூர் என பெயர் வந்தது. சூரியன் இங்கே தவம்புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டன. வன்னி, மந்தாரம் ஆகிய மரங்கள் வளர்ந்திருந்ததால் வன்னிமந்தார வனம் எனவும் அழைக்கப்பட்டது.

ராமனுக்கு ஆசி: ஆஞ்சநேயர் மூலம் சீதையின் இருப்பிடத்தை அறிந்த ராமன் தனது பத்தினியை மீட்க வானர சேனைகளுடன் பிரச்சிரவன மலையிலிருந்து கிளம்பி கீழக்கடற்கரை அருகே உள்ள வன்னிவனத்தை அடைந்தார். அமைதியான சூழலில் கோயில் கொண்டிருந்த வெயிலுகந்த விநாயகரை வணங்கி தனக்கு வெற்றி கிட்ட நல்லாசி வழங்குமாறு வேண்டிக் கொண்டார். விநாயகரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு சேதுக்கரை நோக்கி பயணமானார்.

கர்ண பரம்பரையாக புராணங்கள் வேறுபட்டபோதிலும் இத்திருக்கோயிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். 1905ம் ஆண்டு இக்கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. மரத்தடியில் இருந்த இறைவன் ஓர் அர்ச்சகர் வடிவில் கனவில் வந்து எனக்கு எல்லா கோயில்களிலும் உள்ளது போல் கர்ப்பகிரகத்தில் அதாவது அர்த்த மண்டபத்தை மூடவிடாமல் எப்பொழுதும் என் மேல் வெயில்படும்படி கோயில் அமைத்தல் வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணத்தால் இத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், உப்பூர் ராமநாதபுரம் மாவட்டம்