HolyIndia.Org
Holy India Org Add New Temple

இலத்தூர்


இறைவன்மதுநாதகசுவாமி
தல மரம்புளியமரம்
தீர்த்தம்அனுமன் ஆறு
புராண பெயர்இலைத்தூர்
கிராமம்/நகரம்இலத்தூர்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : உலக முதல்வனான சிவபெருமானுக்கம், உலக நாயகியான பார்வதிக்கும், திருக்கைலாயத்தில் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்ததால் பூமி நிலை குலைந்தது. இதையறிந்த சிவபெருமான் குள்ள முனிவரான அகத்தியரை தென்திசைக்குச் சென்று பூமியை சமப்படுத்த வேண்டினார். அகத்தியர் தென்திசை நோக்கி வந்த போது அனுமன் ஆறும் குறுக்கிட்டது. அந்த ஆற்றில் நீராடி மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது லிங்கம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த புளியமரத்தில் இருந்த தேன் வடிந்தது.

அகத்தியர் மரத்தின் உச்சியைப் பார்த்தபோது தேன்கூடு ஒன்றைக் கண்டார். சற்று நேரத்தில் லிங்கத்தின் மீது தேன் கொட்ட ஆரம்பித்தது. இதன்பிறகு மணல் லிங்கம் இறுகி கல் லிங்கம் போல் மாறி விட்டது. அதத்தியர் அந்த காட்சியைக் கண்டு மதுநாதா என அழைத்தார். தேனுக்கு மது என்ற பெயரும் உண்டு. தமிழ் வளர்த்த தலைமகனான அகத்தியர் உருவாக்கி வழிப்பட்ட லிங்கம் உடைய கோயிலே மதுநாதசுவாமி கோயில் ஆகும். புளியமரத்தின் இலையின் தூரிலிருந்து தேன் வடிந்ததால் இவ்வூர் இலைத்தூர் என்றாகி காலப்போக்கில் இலத்தூர் ஆனது.


திருவிழா : நவராத்திரி, குமாரசஷ்டி, திருவாதிரை, தை உத்திர நட்சத்திரத்தில் அறம் வளர்த்த நாயகிக்கு திருநாள் ஆகியவை விசேஷம்.
சிறப்பு : இவ்வூர் வழியே ஆதியில் ஓடிய நதி அனுமன் நதியாகும். ராமன். லட்சுமணன் ஆகியோர் வானரசேனைகளோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் ஏற்படவே அனுமன் தனது கதையினால் ராமநாமம் சொல்லி ஒரு பாறையில் அடித்தார். அந்த பாறை வழியாக ஆகாய கங்கை பெருகி வந்தது. அதுவே அனுமன் நதியானது. தற்போது இந்த கோயிலின் எதிரே கோடையிலும் வற்றாத திருக்குளம் இருக்கிறது. கோயிலும், குளமும் ஒருங்கே அமைந்த கோயில்கள் வரிசையில் இலத்தூரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : சிவாலயங்களில் சனிபகவான் தனி சன்னதியில் இருப்பது வாடிக்கைதான். ஆனால் கோயில் பிரகார சுவரை ஒட்டி இவரை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். திருநள்ளாறில் கூட இப்படிப்பட்ட நிலை தான். எனவே சனீஸ்வரனை வலம் வருவது என்பது இயலாத காரியமாகவே இருக்கும். இவரை வலம் வரும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இலத்தூர் மதுநாதசுவாமி கோயிலில் சன்னதி அமைந்துள்ளது. ஆகும்.

. இதே ஊரில் மதுரை கள்ளழகரைப் போல சுந்தரராஜப் பெருமாளுக்கு தனிக்கோயில் இருக்கிறது. மிக அமைதியான சூழலில் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் பெருமாள் அமைந்துள்ளது சிறப்பு. கருடாழ்வார், விஸ்வக்ஷேனரைத் தவிர வேறு யாரும் இக்கோயிலில் இல்லை. தியானத்திற்கு ஏற்ற கோயில் இது


பிரார்த்தனை :  சனி சம்பந்தப்பட்ட எந்த தோஷமாக இருந்தாலும், இத்தலத்திற்கு வந்தால் தீர்ந்து போகிறது என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன் : சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.
தல சிறப்பு : இக்கோயிலில் தெட்சிணாமூர்த்தியும், சனீஸ்வரனும் முக்கிய இடம் பெறுகின்றனர். தெட்சிணாமூர்த்தி சன்னதி எல்லா கோயில்களிலும் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். இந்த கோயிலில் சுவாமி சன்னதியின் விமானத்தின் கீழே இவரது சன்னதி அமைந்ததுள்ளது மிக மிக சிறப்பான அம்சம். விமானத்தின் கீழே தெட்சிணாமூர்த்தி சன்னதி அமைவது வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. விமானத்தின் மீது தெட்சிணாமூர்த்தியின் சிலைகளை வடிப்பது வழக்கம். ஆனால் விமானத்தின் கீழே தனி சன்னதி இருப்பது இங்கு மட்டும் தான்.

சனீஸ்வரர் விசேஷம்: சனீஸ்வர விக்கிரக வழிபாட்டுக்கு உகந்த கோயில் இது. ஏனெனில் சனீஸ்வரன் அபயஹஸ்தநிலையில் (அருள் வழங்கும் நிலை) கைகளை காட்டியபடி அருள்தரும் தலம் இதுமட்டுமே. அதுமட்டுமின்றி சனீஸ்வரனை சுற்றிவரும் வசதி இருக்கிறது.

சனியைக் கண்டால் அலறி ஓடும் நிலைமையே எங்கும் இருக்கிறது. ஆனால், இந்த சனீஸ்வரன் தன்னை வலம் வரும் வகையில் பக்தர்களுக்கு இடம் அளித்திருக்கிறார். எனவே சனி சம்பந்தப்பட்ட எந்த தோஷமாக இருந்தாலும், இத்தலத்திற்கு வந்தால் தீர்ந்து போகிறது. அக்னி பைரவரும் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். அவரையும் சுற்றி வணங்கும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. மற்ற கோயில்களில் பைரவர் கோயில் வாசலில் சுவரை ஒட்டி இருப்பார். இங்கே கோயிலுக்குள் இவரது சன்னதியை வலம் வரும் வகையில் அமைத்துள்ளனர்.

லிங்க வடிவ சாஸ்தா: இக்கோயிலில் சாஸ்தா லிங்க ரூபத்தில் காட்சி தருகிறார். லிங்க வடிவில் சாஸ்தா காட்சி தருவதை வேறு எங்கும் காண இயலாது. ஒரு லிங்கத்தில் வில், அம்புடன் யானை மீது அமர்ந்து செல்வது போல சாஸ்தா சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது. யானையின் மீது அமர்ந்து இரண்டு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்டு சாஸ்தா செல்வது விசேஷ அம்சம்.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில் இலத்தூர் - 627 803 திருநெல்வேலி மாவட்டம்