HolyIndia.Org
Holy India Org Add New Temple

இரும்பை


இறைவன்மகாகாளேஸ்வரர்
இறைவிகுயில்மொழி நாயகி
தல மரம்புன்னை
தீர்த்தம்மாகாள தீர்த்தம்
புராண பெயர்திருஇரும்பைமாகாளம்
கிராமம்/நகரம்இரும்பை
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர்.

அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள்.

பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

அவர் கிழக்கே வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் "மகாகாளநாதர்' என்ற பெயர் பெற்றார்.


திருவிழா : சிவராத்திரி, மாசிமகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாகச் சொல்கிறார்கள். சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.
திறக்கும் நேரம் : காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இங்குள்ள தல விநாயகர் சுந்தர கணபதி என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள விமானம் ஏகதள விமானம்.

திருஞானசம்பந்தர், பட்டினத்தார் ஆகியோர் சுவாமியை குறித்து பதிகம் பாடியுள்ளனர். சுந்தரர் ஊர்த்தொகை  நூலில் சுவாமியை பற்றி பாடியிருக்கிறார்.

அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது. இதனை நடராஜரின் சந்தோஷ கோலம் என்கிறார்கள்.

நடராஜரையும் சிவகாமியம்மனையும் சுற்றி அக்னி வளையம் இருக்க, அதன்  மத்தியில் இவர்கள் காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும். இவ்விடத்தில் நின்று கொண்டு சுவாமி, அம்பாள், நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே  நேரத்தில் தரிசனம் செய்யலாம்.

பின்புறத்தில் முருகன் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடனும், கால பைரவர்  தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடியும் காட்சி தருகின்றனர்.


பிரார்த்தனை : ஆயுள் விருத்தி பெற இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

உண்மையுடன் நடந்தும் அவப்பெயர் எடுத்தவர்கள், அவப்பெயர் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சிறப்பு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல சிறப்பு : மூன்று முக லிங்கம் : கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர்.

சித்தரின் தவத்தால்தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்று எண்ணிய மன்னன் ஒரு தேவதாசியின் மூலம் அவரது தவத்தை கலைத்தான்.

சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான்.

மன்னனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவ பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர். 

விழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின்  தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காலில் அணிந்திருந்த சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை சித்தர் பார்த்து விட்டார்.

தேவதாசியின் நடனத்தால் விழாவிற்கு தடை வந்து விடக்கூடாதே என்று நினைத்த சித்தர், சிலம்பை எடுத்து அவளது காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள்,  சித்தரின் செயலை தவறாக பேசி அவரை ஏளனம் செய்தனர்.

கோபமடைந்த சித்தர் சிவனை நோக்கி, ""தான் அமைதியாக இருப்பதை இம்மக்கள் தவறாக எடுத்துவிட்டார்களே, அவர்களுக்காகத்தானே நான் அனைத்திலும் மேலான தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்!'' என்று சிவனை வேண்டி பதிகம் பாடினார்.

தன் பக்தனான சித்தருக்கு சோதனை வந்ததால், கோயிலி ல் இருந்த சிவலிங்கம், மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறியது. உண்மையை உணர்ந்த மன்னன், சித்தரிடம் மன்னிப்பு கேட்டான்.

சித்தரும் அவனை மன்னித்து சிவனை வேண்டி மற்றொரு பாடல் பாடினார். சிதறிய   லிங்கத்தின் பாகங்கள் ஒன்று சேர்ந்தன. பின் சிவன், சித்தருக்கு காட்சி தந்து  முக்தி கொடுத்தார்.

குயில்மொழி நாயகி: அம்மனின்திருநாமம் குயில்மொழி நாயகி.  இவள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற  கோலத்தில் அருளுகிறாள்.

கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாளாம். இதனால் அம்பாளுக்கு "குயில்மொழி நாயகி' என்று பெயர் ஏற்பட்டது.

பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள்  அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

கலா சந்திரன் : இக்கோயில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கையில் ஏடு ஒன்றை வைத்துக் கொண்டு "கலா சந்திரனாக' காட்சி தருகிறார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில்  அமர்த்திய கோலத்தில் அருளுகிறார். சூரியனின் இந்த தரிசனம்  விசேஷமானது.


பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள் கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண்மதி ஈசன் எங்கள் இறைவன் னிடம்போய் இருப்பைதனுள் மாசிலோர்கள் மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 32வது தலம்.


முகவரி : அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை-605 010. ஆரோவில், விழுப்புரம் மாவட்டம்.