HolyIndia.Org
Holy India Org Add New Temple

இன்னம்பூர்


இறைவன்எழுத்தறிநாதர்
இறைவிநித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள்
தல மரம்செண்பகமரம்
தீர்த்தம்ஐராவத தீர்த்தம்
புராண பெயர்திருஇன்னம்பூர், திருவின்னம்பர்
கிராமம்/நகரம்இன்னம்பூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : இப்பகுதியை ஆண்ட ஒரு அரசர் தனது கணக்குப்பிள்ளையை கோயில் கணக்குகளை எடுத்து வருமாறு பணித்தார். அந்நேரத்தில் அவர் கணக்கை சரிவர முடித்திருக்கவில்லை. எனவே அரசரிடம் செல்ல தயங்கினார். மறுநாள் அரசர் கணக்குப்பிள்ளையை அழைத்து பாராட்டினார். கணக்குப்பிள்ளைக்கு எதுவும் புரியவில்லை.

இதுவரை பார்த்த கோயில் கணக்குகளிலேயே நீங்கள் சமர்ப்பித்த கணக்குதான் சரியாக இருந்தது என்றார். இதன்பிறகுதான் இறைவனே கணக்குப்பிள்ளையின் வடிவில் சென்று தனது பக்தனான கணக்குப்பிள்ளையை காப்பாற்ற கணக்கை காட்டியதாக தெரிந்துகொண்டார். அரசனிடம் கணக்கை எழுதிக் காட்டியதால் "எழுத்தறிநாதர்’ என பெயர்பெற்றார்.


திருவிழா : நவராத்திரி 10 நாட்கள், சித்திரையில் கோடாபிஷேகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருவாதிரை, சிவராத்திரி ஆகியவை முக்கியமான விழாக்கள்.
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கல்வி அபிவிருத்தியை தரும் ஸ்தலம்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கொடிமரமில்லை, பலிபீடம், நந்தி உள்ளன. உள்ளே இடதுபுறம் நால்வர் சன்னதி.

வலதுபுறத்தில் சுகந்தகுந்தளாம்பிகை சன்னதி. இந்த அம்பாளே பிரதான அம்பாளாக இருக்கிறார்.

மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.


பிரார்த்தனை : பள்ளிக் குழந்தைகளை இங்கு அழைத்துவந்து புஷ்பத்தால் நாக்கில் எழுதுகிறார்கள்.

ஆரம்ப பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு நாக்கில் நெல்லால் எழுதுகிறார்கள். தினமும் இதை செய்யலாம்.


நேர்த்திக்கடன் : பிரார்த்தித்துக்கொண்ட செயல்கள் நடந்திட சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம். அம்பாளுக்கு திருமாங்கல்ய பூஜை செய்யலாம்.
தல சிறப்பு : * நவராத்திரி காலத்தில் இவ்வாறு செய்வது மிகுந்த சிறப்பைத்தரும். பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் இக்கோயிலில் அர்ச்சனை செய்தால் நல்வாக்கு பெறுகிறார்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படுகிறது. *

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும் இங்கு வந்து வழிபட்டு செல்லலாம். இங்கே அம்பாள் தினமும் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணமாகாத பெண்கள் இந்த அம்பிகையை வழிபட்டு நல்ல கணவனை அடைகின்றனர். இவளை "நித்தியகல்யாணி’ என அழைக்கின்றனர்.

மற்றொரு அம்பாளான "சுகந்த குந்தல அம்பாள்’ தவக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

திருமணம் செய்துகொள்ள விரும்பாமல் தனித்து வாழ்க்கை நடத்த விரும்பும் பெண்கள் இவளை வழிபடலாம். இது சூரியன் பூஜித்த தலமாகும்.

"இன்னன்’ என்றால் "சூரியன்’ என பொருள். "இன்னன் நம்பூர்’ என பெயர் இருந்து "இன்னம்பூர்’ என மாறிவிட்டது. பங்குனி 13,14,15, ஆவணி 31, புரட்டாசி 1,2 ஆகிய தேதிகளில் சூரிய வெளிச்சம் சுவாமிமீது படுகிறது.


பாடியவர்கள் : திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடி பத்துடை யான்றனைக் கனிய வூன்றிய காரணம் என்கொலோ இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 45 வது தலம்.


முகவரி : அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர்-612 303. தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டம்.