HolyIndia.Org
Holy India Org Add New Temple

அவிநாசி வரலாறு

சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் எழ அதன் காரணத்தைக் கேட்டார். ஐந்து வயதுள்ள இரு அந்தணச் சிறுவர்கள் மடுவில் குளிக்கச் சென்றதாகவும், அவர்களில் ஒருவனை மடுவில் இருந்த முதலை விழுங்கி விட்டதாகவும் கூறினர். மேலும் தப்பிப் பிழைத்த சிறுவன் வீட்டில் அவனுக்கு உபனயனம் நடக்கும் விழா ஒலி என்றும், இறந்த சிறுவனின் வீட்டில் சோகத்தால் அழும் ஒலி என்றும் கூறினர். இறந்த சிறுவனின் பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து அவரின் உதவியை நாடினர். மடு இருக்குமிடம் கேட்டு அங்கு சென்று முதலையை அழைக்கும் எண்ணத்துடன் சுந்தரர் எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார். பிறகு 4வது பாடலாக உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய் அரைக்காடு அரவா ! ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே என்று இறைவனுக்கு கட்டளை இடும் வகையில் பாடும் போது சிவபெருமான் அருளினால் நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அதனூடே வந்து சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை இப்போது பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது. இத்தகைய அற்புதம் நிகழ்ந்த சிவஸ்தலம் தான் அவிநாசி என்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூர்.

அவிநாசியப்பர் கோவிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் ஒரு சிறிய கோவிலில் சுந்தரருக்கு சந்நிதி உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப் பிள்ளையை அழைத்த திருவிளையாடல் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.

அவிநாசி - அவிநாசி கோவில் அமைப்பு - அவிநாசி மக்கள் - அவிநாசி வரலாறு -